Published:Updated:

அடிக்கடி சுவரேறிக் குதிக்கும் நபர்... அச்சத்தில் மக்கள்... இது கூடங்குளம் அணு உலை சர்ச்சை!

கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலை

கடலோரம் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலையை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருகிறார்கள். பலகட்டப் பாதுகாப்பில் இருப்பதால் அணு உலைக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகளுக்கான உதிரிபாகங்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதால் அணு உலைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

என்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..? #DoubtOfCommonMan

அணு உலை வளாகம் முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு அதில் பாதுகாப்பு கோபுரத்தில் ஆயுதம் ஏந்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரவு பகலாக காவல் காக்கிறார்கள். இத்தகைய பலத்த பாதுகாப்புடன் உள்ள அணு உலை வளாகத்தின் மதில்சுவர் ஏறிக்குதித்து இளைஞர் ஒருவர் வெளியே வந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கூடங்குளம் வைராவிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``கூடங்குளத்தில் இருக்கும் பலத்த பாதுகாப்பையும் மீறி அங்கிருந்து சுவர்மீது ஏறிக்குதித்து சிலர் வெளியே வருவது அடிக்கடி நடக்கிறது. கடந்த 8-ம் தேதி வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவர் ஏறிக் குதித்து வெளியே வந்ததைப் பார்த்த எங்கள் கிராம மக்கள் அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்குத் தகவல் சொன்னோம்.

சுவர் ஏறிக் குதித்த இளைஞர்
சுவர் ஏறிக் குதித்த இளைஞர்

சிறிது நேரத்தில் அந்த இளைஞனுடன் வேலை செய்யும் மக்கள் அங்கு வந்து `அவன் குடித்துவிட்டு போதையில் இப்படிச் செஞ்சுட்டான். நாங்க அவனைக் கூட்டிட்டுப் போய் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கிறோம்’ என்று சொல்லி மீண்டும் அணு உலை வளாகத்துக்குள் அழைத்துச் சென்றுவிட்டார்கள்’ என்கிறார்கள்.

இது பற்றி கூடங்குளம் காவல்நிலையத்தில் கேட்டதற்கு, `அப்படி எந்தவொரு சம்பவமும் நடந்ததாக எங்களுக்குத் தகவல் வரவில்லை’ என்று முடித்துக்கொண்டார்கள். இந்த விவகாரம் குறித்துப் பேசிய அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், ``கூடங்குளம் அணு உலைக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அணு உலை வளாகத்தின் உள்ளே இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சுவர் ஏறிக் குதித்து வெளியே வரும் சம்பவம் நடக்கிறது.

சுப.உதயகுமாரன்
சுப.உதயகுமாரன்

கண்காணிப்பு கோபுரத்தில் இரவு பகலாக இருக்கும் பலத்த பாதுகாப்பையும் மீறி உள்ளே இருந்து வெளியே வர முடியுமானால் வெளியே இருந்து உள்ளே செல்லவும் முடியுமே. அணு உலைக்குள் எளிதாகச் செல்ல முடியுமானால் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமே" என்றார்.

இதனிடையே அப்பகுதி மக்கள் பேசுகையில், ``அணுஉலை வளாகத்துக்குள் இருக்கும் தொழிலாளர்களுக்கான குடியிருப்புப் பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அணு உலை வளாக மதில் சுவரின் வெளிப்பக்கம் முள் காடுகள் நிறைந்திருக்கின்றன. அது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

அணு உலை குறித்த படம்
அணு உலை குறித்த படம்

அதனால் அணு உலை வளாகத்தின் வெளிப்பக்கமாக மதில் சுவரை ஒட்டியவாறே அணுஉலை வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு சாலை அமைக்கப்பட வேண்டும். அங்கு சுற்றிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். 100 மீட்டர் இடைவெளியில் சிசிடிவி கேமரா பொருத்திக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்’’ என்று தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு