Published:Updated:

நள்ளிரவில் வரும் லாரி.. தொடரும் நிலத்தடி நீர் திருட்டு! -அதிருப்தியில் கூடங்குளம் பொதுமக்கள்

கூடங்குளம் அணு உலை வளாகம்
கூடங்குளம் அணு உலை வளாகம்

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் உள்ள ஊழியர்களின் குடியிருப்பு, 3 மற்றும் 4-வது அணுஉலை கட்டுமானப் பணி மற்றும் கட்டுமானப் பணியாளர்களுக்குத் தேவைப்படும் தண்ணீர் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படுகிறது.

கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியானது தண்ணீர் பஞ்சம் நிலவக்கூடியது. அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் எப்போதுமே போதுமானதாக இருப்பதில்லை. குறிப்பாகக் கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குச் சென்றுவிடுவது வழக்கம். இந்த நிலையில், அணு உலை நிர்வாகம் தங்கள் தேவைக்கு நிலத்தடியில் இருந்து அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் உறிஞ்சுவதாகப் புகார் எழுந்துள்ளது.  

என்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..? #DoubtOfCommonMan

இது குறித்து கூடங்குளம் மக்கள் பேசுகையில், ”கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கூடங்குளம் பகுதி மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்தது. அப்போது இந்தப் பகுதி மக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். அதனால் அணுமின் நிலைய வளாகத்தில் இயங்கும் கடல் நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தின் தண்ணீர் தருமாறு கோரினோம். ஆனால், கொடுக்கவில்லை.

இப்போது அணு உலை வளாகத்தின் பணியாளர் குடியிருப்புகள், அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் ஆகியவற்றுக்கு எங்கள் பகுதியில் சட்ட விரோதமாக 1000 அடி ஆழத்துக்கும் மேலாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீர் கொண்டு செல்லப்படுகிறது. நிலத்தடி நீரை விற்பதற்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அணு உலை வளாகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. 

நிலத்தடி நீர் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரி
நிலத்தடி நீர் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரி

தினமும் டேங்கர் லாரிகள் மூலம் இரவு நேரங்களில் பத்து லட்சம் லிட்டருக்கும் அதிகமாகத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி, இப்பகுதியை பாலைவனமாக்கி சுற்றுப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான நெருக்கடியாக இது இருக்குமோ என்கிற பயம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்கள்.

இது குறித்து அணு உலை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ”அணு உலையின் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் பணியாளர்களின் குடியிருப்பு உள்ளிட்டோருக்குக் கடல் நீரைச் சுத்திகரித்துக் கிடைக்கும் தண்ணீரையே பயன்படுத்துகிறோம். அவசியத் தேவைகளுக்கு மட்டுமே நிலத்தடி நீரை பயன்படுத்துகிறோம். 

அணு உலை வளாகம்
அணு உலை வளாகம்

கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு சிலர் நிலத்தடி நீர் திருட்டில் ஈடுபடுகிறார்கள். சொந்த தேவைக்கு மட்டுமல்லாமல் ஹோட்டல்கள், குடியிருப்புகளுக்கு அவர்கள் விற்பனை செய்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பு கிடையாது” என்று திட்டவட்டமாக மறுக்கிறார்கள். சட்ட விரோத தண்ணீர் வணிகத்தைக் காவல்துறை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு