Published:Updated:

`சாலையில் மண்ணைக்கொட்டி அத்துமீறிய கேரளா!' - முற்றுகைப் போராட்டத்தில் இறங்கிய இரு மாநில மக்கள்

இரு மாநில மக்கள்
இரு மாநில மக்கள்

கேரள மாநிலம் வயநாட்டில், 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லையில் உள்ள சாலைகளில் மண்ணைக்கொட்டி தடுப்பு ஏற்படுத்திவருகின்றனர்.

கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களால் இந்த இரண்டு மாநிலங்களையும் சார்ந்து உள்ளனர். இதேபோல், இந்த இரண்டு மாநில மக்களும் நீலகிரியில் தொழில் செய்துவருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு எல்லைகளும் மூடப்பட்டன.

சோதனைச்சாவடி
சோதனைச்சாவடி

கோயம்பேட்டுடன் தொடர்புடைய இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் உறவினர் என நீலகிரியைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு கோவையில் உள்ள இ.எஸ.ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அதேசமயம், கர்நாடகாவின் மைசூரு, கேரளாவின் வயநாடு ஆகிய பகுதிகளில் கொரோனா ஸைரஸ் பரவல் அதிகரித்துவருகிறது.

`வயநாட்டிலிருந்து மது வாங்கிச் சென்ற நபர்; மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள்!' - அச்சத்தில் நீலகிரி

வயநாட்டின் சில பகுதிகளை தனிமைப்படுத்துகிறோம் என்ற பெயரில், கேரள காவல்துறையினர் எல்லையோரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மண்ணைக் கொட்டிச் செல்கின்றனர். இந்தச் செயல் எல்லைப் பகுதியில் வசிக்கும் இரு மாநில மக்களிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் மண்ணைக்கொட்டி அத்துமீறும் கேரளா
சாலையில் மண்ணைக்கொட்டி அத்துமீறும் கேரளா

அய்யன்கொல்லி பகுதியைச் சேர்ந்த மக்கள் நம்மிடம் பேசுகையில், "கேரள அரசின் உத்தரவால் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலைகளான, நம்பியார்குன்னு, சீரால், வெள்ளைச்சால், பாரக்கொழுப்பு, நெல்லிமாடு போன்ற சாலைகளில் மண்ணைக் கொட்டி தடை ஏற்படுத்திவருகின்றனர். இது, மிக மோசமான செயல்.

இதை மனித உரிமை மீறலாகவே கருதுகிறோம். இந்தச் செயலால் ரேஷன் பொருள்கூட வாங்முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து இரு மாநில மக்களும் முற்றுகையில் ஈடுபட்டோம். அதன் பிறகே சில இடங்களில் கொட்டிய மண்ணை அகற்றி வருகின்றனர்" என்றனர் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு