Published:Updated:

``வாஸ்து பார்த்து கட்டிடங்களை இடித்தீர்களா?’’ - பெரியார் பல்கலை துணைவேந்தர் விளக்கம்

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம்

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் அறைகள் வாஸ்து சாஸ்திரத்துக்காக இடிக்கப்படுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 'கட்டடம் பலமிழந்துவிட்டதாலேயே இடித்துக் கட்டுகிறோம். வாஸ்து சாஸ்திரம் காரணமல்ல' என்று மறுக்கிறார் துணைவேந்தர்.

'பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் விவேகானந்தர் ரத ஊர்வலம், துணைவேந்தர் அறையில் ஹெச்.ராஜா ஆலோசனை, பட்டமளிப்பு விழாவில் இந்து மத சின்னங்கள்' எனச் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் சம்பவங்கள் கலகத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதில் சமீபத்திய கலகச் செய்தி 'வாஸ்து சாஸ்திரத்துக்காக துணைவேந்தர் அறையை இடித்துத் தள்ளுகிறார்கள்' என்பதுதான்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த தினத்தில் தொடங்கப்பட்டது சேலம் 'பெரியார் பல்கலைக்கழகம்'. 'சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை ஒழிப்பு' எனத் தன் வாழ்நாள் முழுக்க சமூகப் போராளியாக வாழ்ந்து மறைந்த தந்தை பெரியாரின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்தப் பல்கலைக்கழகம். ஆனால், 'சமீபகாலமாக இப்பல்கலைக்கழகம் இந்துத்துவா சக்திகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது' என்று குமுறுகிறார்கள் பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர்கள்.

இடிக்கப்பட்ட அறை
இடிக்கப்பட்ட அறை

அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகத்துக்குள் நடைபெற்றுவரும் சம்பவங்கள் குறித்து, தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டு பேசியவர்கள்,

''பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்துத்துவா சக்திகளின் பிடியில் சிக்குண்டுவிட்டது. சாதி இறுக்கமும் அதிகமாகிவிட்டது. பேராசிரியர்களில் பெரும்பான்மையோர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

இளைஞனிடம் அண்ணா காட்டிய பெருங்கருணை... ஒரு வாசகரின் நேரடி அனுபவம்! அண்ணா நினைவு நாள் பகிர்வு

கடந்த 2019-ம் ஆண்டு, பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, துணைவேந்தர் இல்லாத சமயத்தில், இப்பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தார். இதையடுத்து பா.ஜ.க-வினர் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர். மேலும், பொறுப்பு பதிவாளர் தங்கவேல் மற்றும் சில பேராசிரியர்கள் வாசலுக்கே வந்து ஹெச்.ராஜாவை வரவேற்று பல்கலைக்கழகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

அன்றைய தினம் துணைவேந்தர் குழந்தைவேலு பல்கலைக் கழகத்துக்கு வரவில்லை. ஆனாலும், அவரது அறையைத் திறந்து அங்கே ஹெச்.ராஜா, பொறுப்பு பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் சிலர் ரகசிய ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு, இவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விருந்துண்டு மகிழ்ந்தார்கள். நிறைவாக, பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியும் கொடுத்தார் ஹெச்.ராஜா.

பெரியார்
பெரியார்

மக்கள் பிரதிநிதியாகவோ, அரசு பதவியிலோ இல்லாத ஒருவரைத் துணைவேந்தர் இல்லாதபோது அவருடைய சேம்பரில் அமரவைத்து ஆலோசனை செய்ததும் விருந்தினர் மாளிகையில் விருந்து கொடுத்ததும் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளாகவே பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்ததும் அப்போதே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் சிலையின் பின்புறம் 'பிள்ளையார் படம்', 'திரிசூலம்', சம்ஸ்கிருதத்தில் 'ஓம்' எழுத்துகள் வண்ண ஒளிவிளக்குகளாக அமைக்கப்பெற்றிருந்ததும் பலத்த சர்ச்சையானது.

எம்.பி.,எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் ஸ்பெஷல் கோர்ட் அமைக்க எவ்வளவு செலவு?#VikatanExclusive

இதேபோல், தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் நடத்திய 'விவேகானந்தர் ரத' ஊர்வலம் பல்கலைக் கழக வளாகத்துக்குள்ளேயே அனுமதிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் மாணவர்களைக் கலந்துகொள்ளச் சொல்லி துணைவேந்தரே சுற்றறிக்கை அனுப்பியிருந்ததுதான் பிரச்னையின் உச்சம்.

இப்போது, பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தரின் அறை வாஸ்து சாஸ்திரங்களுக்கு முரணாக இருப்பதாகச் சொல்லி அதை வாஸ்து சாஸ்திரப்படி இடித்துக் கட்ட 98 லட்சம் ரூபாயை நிதியாக ஒதுக்கியிருக்கிறார்கள். இன்றைக்கு அறையை இடிக்கும்பணியையும் தொடங்கிவிட்டார்கள். இது எங்கே போய் முடியப்போகிறதோ...'' என்றனர் ஆதங்கத்துடன்.

துணைவேந்தர் குழந்தைவேலு
துணைவேந்தர் குழந்தைவேலு

பேராசிரியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் பேசினோம். குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துப் பேசியவர், ''நான் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறப்போகிறேன். நான் எதற்காக வாஸ்து பார்த்து கட்டடங்களை மாற்றியமைக்கப்போகிறேன்? அதுமட்டுமல்லாமல், நான் ஒருவனே முடிவெடுத்து இதுபோன்ற விஷயங்களையெல்லாம் செய்துவிட முடியாது.

15 வருட பழைமை வாய்ந்த கட்டடங்கள் என்பதால் அனைத்தும் பலமிழந்துவிட்டன. எனவே, பொறியாளரின் ஆலோசனையின் பெயரிலேயே கட்டடங்களை இடித்துப் புதிதாகக் கட்டுகிறோமே தவிர, வாஸ்து சாஸ்திரம் காரணம் அல்ல. தொடர்ச்சியாக எங்கள் பல்கலைக்கழகத்தைப் பற்றி சிலர் தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள். இங்கே பிற மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்றுவருகிறார்கள். எல்லோருக்கும் பொதுவான கல்வி நிலையமாகத்தான் செயல்பட்டு வருகிறது'' என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு