Published:Updated:

`வீடு புகுந்து தடியடி.. போண்டாவைப் பறித்துச் சாப்பிட்டார்?!’ -சர்ச்சையில் பேரணாம்பட்டு தாசில்தார்

தன்னார்வலர்களுடன் தாசில்தார் முருகன்
தன்னார்வலர்களுடன் தாசில்தார் முருகன்

பாத்ரூமில் புகுந்து வியாபாரியைத் தாக்கிய தாசில்தார், அவரிடமிருந்த போண்டாக்களைப் பறித்து தன்னார்வலர்களிடம் கொடுத்துச் சாப்பிட வைத்ததாகவும் பேரணாம்பட்டு மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில், பொதுமக்களை வீடு புகுந்து லத்தியால் தாக்கியதாகவும், அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டுவதாகவும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தாசில்தார் முருகன். `கொரோனா’ ஊரடங்குப் பணியில் தன்னார்வலர்களைச் சேர்த்துக்கொண்டு லத்தியுடன் வலம்வரும் இவர், நேற்று பேரணாம்பட்டு பஜார் வீதியில் கிராம உதவியாளரை (சிப்பந்தி) கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. மைக்கில் பேசிக்கொண்டுவந்த தாசில்தார், மைக் பேட்டரியின் சார்ஜ் தீர்ந்துபோனதால் கடுப்பாகி அருகிலிருந்த சிப்பந்தி மீது கோபத்தை கொட்டியிருக்கிறார்.

தன்னார்வலர்களுடன் தாசில்தார் முருகன்
தன்னார்வலர்களுடன் தாசில்தார் முருகன்

கொதிப்படைந்த கிராம நிர்வாக அலுவலர்களும், உதவியாளர்களும் தாசில்தாரை கண்டித்து அவருடன் பணியில் ஈடுபடுவதைப் புறக்கணித்தனர். அதையடுத்து, தன்னார்வலர்கள் சிலரிடம் தடியைக் கொடுத்து பொதுமக்கள் மீது பலப் பிரயோகம் செய்யத் தாசில்தார் முடுக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. பேரணாம்பட்டு டவுன் புதுஷாப் லைன் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய முதியவர் தன் 14 வயது மகளுடன் மளிகைப் பொருள்களை வாங்குவதற்குக் கையில் பையுடன் நடந்துசென்றுள்ளார். அந்த முதியவரைப் பிடித்து தாசில்தாருடன் வந்த தன்னார்வலர்கள் தாக்கியிருக்கிறார்கள்.

மேலும், ஈத்கா சாலையில் போண்டா விற்றுக்கொண்டிருந்த வியாபாரியை எச்சரித்து அனுப்பாமல் தாசில்தாரே தாக்குதலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்திருக்கிறது. அடி தாங்க முடியாமல் அந்த வியாபாரி, அருகிலிருந்த தன் வீட்டுக்குள் ஓடி குளியல் அறையில் பதுங்கிக்கொண்டார். தாசில்தாரும் வீட்டுக்குள்ளேயே அத்துமீறி நுழைந்து குளியல் அறையில் வைத்தே வியாபாரியைத் தாக்கியதாகவும் தாசில்தார் மீது பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறார்கள். வியாபாரியிடமிருந்து போண்டாக்களை பறித்துக்கொண்டு வந்து தன்னார்வலர்களிடம் கொடுத்துச் சாப்பிட வைத்தாகவும் சொல்கிறார்கள்.

அரசின் உத்தரவுக்கு எதிராகச் செயல்படும் நபர்களிடம்தான் கடிந்துகொள்கிறேன். அது தவறு என்றால், என் வேலையை ராஜினாமா செய்யவும் தயார்.
தாசில்தார் முருகன்

வீதியில் கடைக்கு வந்துசென்ற பெண்களையும், வீட்டுக்கு வெளியில் நின்றிருந்த பெண்களையும் தவறான வார்த்தைகளால் தாசில்தார் முருகன் திட்டியதாகவும் புகார் கூறப்படுகிறது.

`` சமூக விலகலைக் கடைப்பிடிக்கக் கோரி காவல் துறையினரே பலப் பிரயோகம் செய்யாமல் அறிவுறுத்துகிறார்கள். அப்படியிருக்கப் பொதுமக்களை தாக்குவதற்கும் ஆபாசமாகப் பேசுவதற்கும் தாசில்தாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இதுபோன்ற அதிகாரிகள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மாவட்ட கலெக்டருக்கு பேரணாம்பட்டு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்கு ஆளான தாசில்தார் முருகனிடம் பேசினோம். ``என் மீது கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முற்றிலும் பொய். கையில் தடி வைத்திருந்தது உண்மை. சமூக விலகலை மதிக்காமல் பொது இடத்தில் சுற்றித்திரியும் நபர்களை எச்சரிப்பதற்காகத் தடியை வைத்திருந்தேன். சில நடவடிக்கைகள் மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகத்தானே தவிர தனிப்பட்ட நோக்கத்துக்காக இல்லை. நான் யாரையும் வீடு புகுந்து தாக்கவில்லை. தெருவில் போண்டா விற்றவரை எச்சரித்தேன். என் மீது தவறு இருந்தால், என்னைப் பணியிட மாற்றம் செய்யட்டும்.

தன்னார்வலர்களுடன் தாசில்தார் முருகன்
தன்னார்வலர்களுடன் தாசில்தார் முருகன்

மாவட்ட கலெக்டரிடம் என் மீது புகார் தெரிவிக்கட்டும். கலெக்டரே விசாரணை நடத்தி, நான் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். பலப் பிரயோகம் செய்வதற்குக் காவல் துறையினருக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது. எங்களுக்கு இல்லை. அது, எனக்கு நன்றாகத் தெரியும். சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் மக்களை நான் எதுவும் செய்யவில்லை. அரசின் உத்தரவுக்கு எதிராகச் செயல்படும் நபர்களிடம்தான் கடிந்துகொள்கிறேன். அது தவறு என்றால், என் வேலையை ராஜினாமா செய்யவும் தயார்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு