Published:Updated:

நெல்லை: மாற்றுத்திறனாளிகளுக்கு அடி, உதை! - புகார் அளித்தவர்கள் மீதும் வழக்கு பதிவு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தம்பதி
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தம்பதி

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி தம்பதியரை அடித்து, ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தவர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிவந்திபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் அடித்து உதைக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகார் அளித்த மாற்றுத்திறனாளி மீதே போலீஸார் வழக்கு பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்
போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகளும், மாதர் சங்கத்தினரும் களம் இறங்கியபோதிலும், போலீஸார் அவர்களை மிரட்டும் தொனியில் பேசியதாகச் சர்ச்சை வெடித்துள்ளது.

இது தொடர்பான தகவல் கிடைத்ததும், சிவந்திபுரம் கிராமத்துக்குச் சென்றோம். பழைய ஓட்டு வீட்டில் சுப்புராஜ், மகேஸ்வரி தம்பதியர் தங்களின் 6 வயது, 3 வயது மகள்களுடன் குடியிருந்துவருகிறார்கள். தம்பதியர் இருவருமே வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள்.

சுப்புராஜின் வீடு
சுப்புராஜின் வீடு

சுப்புராஜ் வயரிங் வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை நடத்திவருகிறார். பக்கத்து வீட்டாருடன் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. நடந்த சம்பவத்தைப் பார்த்த அச்சத்திலிருந்து சுப்புராஜின் குழந்தைகள் இன்னும் மீளாததால் புதியவர்கள் வந்தாலே மிரண்டு வீட்டுக்குள் ஓடுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுப்புராஜ் சார்பாக போலீஸில் புகார் அளித்துள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகியான சஞ்சோ சுமோவிடம் நடந்த சம்பவம் பற்றிக் கேட்டோம். நம்மிடம் பேசிய அவர், ``மாற்றுத்திறனாளியான சுப்புராஜுக்குச் சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கி விஜயன் என்பவர் வீடுகட்டிக் குடியிருக்கிறார்.

சைகை மொழிபெயர்ப்பாளர் சஞ்சோ சுமோ
சைகை மொழிபெயர்ப்பாளர் சஞ்சோ சுமோ

பக்கத்தில் வசிக்கும் சுப்புராஜை விரட்டிவிட்டு, அவரது இடத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று விஜயன் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் தேவையில்லாமல் மாற்றுத்திறனாளி தம்பதியுடன் சண்டை போட்டுவருகிறார். ஜூன் 27-ம் தேதி சுப்புராஜின் மனைவி மகேஸ்வரி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தபோது அவரை விஜயனும் அவரது மனைவியும் சேர்ந்து அடித்துள்ளனர்.

அந்தச் சமயத்தில் வெளியில் போய்விட்டுத் திரும்பிய சுப்புராஜ் ஓடிச் சென்று தடுத்திருக்கிறார். ஆனால் அவரையும் அடித்து உதைத்ததுடன், இருவரின் ஆடைகளையும் பிடித்து இழுத்துக் கிழித்திருக்கிறார்கள். பிறகு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சுப்புராஜை அவருடைய அண்ணன் ரவிகுமார் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போதும் 10 பேர் சேர்ந்து அவரை அடித்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

சுப்புராஜ் சார்பாக போலீஸாரிடம் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தாமலும், வழக்கு பதிவு செய்யாமலும் இழுத்தடித்தார்கள்.
சஞ்சோ சுமோ, சைகை மொழிபெயர்ப்பாளர்

அதன் பிறகு அவர் எங்கள் சங்கத்தினருக்குத் தகவல் கொடுத்தார். நாங்கள் சென்று அவரிடம் விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்ட பின்னர் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்தார்கள்” என்று குமுறினார்.

தொடர்ந்து பேசிய மாதர் சங்க நெல்லை மாவட்டச் செயலாளரும், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகியுமான கற்பகம், ``சுப்புராஜ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் செய்ததோடு, அந்தப் பகுதியிலுள்ள வீட்டில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமியிடம் தந்தோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கற்பகம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர்
கற்பகம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர்

அதனால் ஜூலை 5-ம் தேதி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளுடன் ஸ்டேஷனுக்குப் போனோம். நாங்க உள்ளே போனபோது உட்காரக்கூடச் சொல்லாமல் நிற்கவைத்துப் பேசிய இன்ஸ்பெக்டர், தாக்குதல் நடத்திய விஜயனை உட்காரவைத்துப் பேசினாங்க. அதிலிருந்தே ஸ்டேஷனில் விஜயனுக்கு இருந்த செல்வாக்கு புரிஞ்சுது.

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் நடத்தியது தெரிந்தும், அவர்மீது வழக்கு பதிவு செய்யாமல் எங்களை மிரட்டும் வகையில் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தொடர்ந்து செயல்பட்டார். அதனால் எங்கள் சங்க நிர்வாகிகளும் மாற்றுத்திறனாளிகளும் ஸ்டேஷன் முன்பாக அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அதன் பிறகுதான் விஜயன் மற்றும் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செஞ்சாங்க.

காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்
காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்

அதோடு, எதிர்த் தரப்பினரிடம் புகாரை வாங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட சுப்புராஜ், அவர் மனைவி மகேஸ்வரி மேலயும் கேஸ் போட்டாங்க. விக்கிரமசிங்கபுரம் போலீஸாரின் நடவடிக்கைகளைக் கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்தினோம். சுப்புராஜை மிரட்டி, எப்படியாவது அவரையும் அவர் குடும்பத்தையும் சொந்த வீட்டிலிருந்து காலி செய்யவைக்க போலீஸும் துணை போவதுதான் வருத்தமாக இருக்கிறது” என்று கொந்தளித்தார்.

இந்த விவகாரத்தை அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி-யான ஃபிரான்சிஸின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அனைத்தையும் கேட்டவர், ``தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் தாக்கியிருக்கிறார்கள். அதனால் இரு தரப்பினர் மீதும் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஃபிரான்சிஸ்
காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஃபிரான்சிஸ்

சாதாரணமான பிரச்னையை சில அமைப்பினர் ஊதிப் பெரிதாக்கிவிட்டார்கள். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி இன்ஸ்பெக்டர் தலைமையில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகுதான் எதையும் சொல்ல முடியும்” என்று முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு