Published:Updated:

`பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டாரா பீகார் மாணவர்?'-சர்ச்சையில் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி

கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா

சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் அளித்த புகாரின் பேரில் பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்ஸோ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. சூலூர் விமானப் படையின் ஊழியர்கள், வீரர்களின் குழந்தைகள் அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் 11-ம் வகுப்பு படிக்கும் பீகாரைச் சேர்ந்த ஒரு மாணவரை ஆசிரியர்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. பாலியல்ரீதியாகவும் தன்னைத் துன்புறுத்தியதாகக் கூறி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் அந்த மாணவர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

பள்ளி வகுப்பறையில் சக மாணவர்களை வெளியேற்றிவிட்டு தன்னை முதல்வரும் ஆசிரியைகள் சிலரும் சேர்ந்து தாக்கியதாகவும் ஆடைகளைக் கலைந்து நிர்வாணப்படுத்தியதுடன் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினர். தொடர்ந்து, அந்தக் காட்சிகளை வீடியோ பதிவாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சூலூர் காவல்துறையில் அந்த மாணவர் புகார் தெரிவித்திருந்தார்.

மாணவனைத் துன்புறுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் பெற்றோரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது போக்ஸோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் சூலூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

இதனிடையே, கேந்திரிய பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

`உங்களால் பெருமைப்படுகிறேன்!' - ரஷ்ய அதிபரை அசரடித்த ஒடிசா பள்ளி மாணவர்

இந்த விவகாரம் தொடர்பாக, கேந்திரிய பள்ளியின் முன்பாக மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் சமரசப்படுத்தினர். ஆனாலும், மாணவ, மாணவிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை. பீகாரைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும் ஆசிரியர்கள் மீது பொய்ப் புகார் அளித்ததாகவும் கூறுகின்றனர் சக மாணவர்கள். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்ததால் 9-ம் வகுப்பு படிக்கும் அவரின் தம்பியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சூலூர் கேந்திரிய பள்ளி நிர்வாகம்

பீகார் மாணவரின் குற்றச்சாட்டை மறுக்கும் கல்வி நிர்வாகம், ``அந்த மாணவர் பள்ளிக்குள் அத்துமீறி நடந்துகொண்டார். அதனால் அவரை இடைநீக்கம் செய்தோம். இதில், ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்ததால் 9-ம் வகுப்பு படிக்கும் அவரின் தம்பியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. ஆசிரியர்கள் மீது பொய்யான புகாரைக் கொடுத்துள்ளனர்" என்கின்றனர்.

புகார் கொடுத்த மாணவர், ஆசிரியர் என இரண்டு தரப்பினரிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு