Published:Updated:

அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. - விசாரணை நடத்தும் நெல்லை காவல்துறை!

கையில் அரிவாளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
கையில் அரிவாளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

அரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதை வீடியோ எடுத்துப் பதிவிட்டுள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலானதால் சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சென்னையில் பிரபல ரவுடி பினு அரிவாளால் கேக் வெட்டி தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடியபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஆங்காங்கே ரவுடிகள் சிலர் அதே போல கேக் வெட்டியதற்காகக் கைது செய்யப்பட்டனர்.

அரிவாள் மூலம் கேக் வெட்டி கொண்டாட்டம்
அரிவாள் மூலம் கேக் வெட்டி கொண்டாட்டம்

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஒருவர் அரிவாளால் கேக் வெட்டி தன் ஆதரவாளர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அரிவாள் மூலம் கேக் வெட்டியதை வீடியோவாக பதிவு செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்

தங்களின் சாகசத்தை பிறருக்குத் தெரியப்படுத்தும் வகையில், அந்த வீடியோவை டிக்டாக் செயலி மூலம் பதிவேற்றியுள்ளனர். மது பாட்டில்கள் சூழ கேக் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை அரிவாள் மூலம் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது.

Vikatan

இந்த விவகாரம் பொதுமக்களிடம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும், பாளையங்கோட்டை காவல்நிலைய போலீஸார் அந்த வீடியோவை வைத்து, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நபரையும் அவரது நண்பர்களையும் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ரவுடிகளா என்பது பற்றியும் அவர்கள் மீது ஏற்கெனவே ஏதாவது வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்பது பற்றியும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். அந்த கும்பல் தலைமறைவாக இருப்பதால் அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

சர்ச்சையில் சிக்கிய நண்பர்கள்
சர்ச்சையில் சிக்கிய நண்பர்கள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் வெளியே வரவே அச்சம் அடைந்துள்ள நிலையில், இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு