Published:Updated:

`இது எனக்கும் நடக்கிறது..!'- கோபத்துக்கு மன்னிப்பு கேட்ட போப் ஃபிரான்சிஸ்

கூட்டத்துக்குப் பின் போப் ஆண்டவர் பார்வையாளர்களை நோக்கியபடி வந்துகொண்டிருந்தார்.

போப் ஃபிரான்சிஸ்
போப் ஃபிரான்சிஸ்

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டின. இதனொரு பகுதியாக புத்தாண்டையொட்டி கத்தோலிக்க மதத் தலைவராக இருக்கும் போப் ஃபிரான்சிஸ் தலைமையில் வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் போப் ஆண்டவர் பார்வையாளர்களை நோக்கியபடி வந்துகொண்டிருந்தார்.

போப் ஃபிரான்சிஸ்
போப் ஃபிரான்சிஸ்

குழந்தைகளுக்குக் கைகொடுத்தபடி வந்துகொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் திடீரென அவர் கையைப் பிடித்து இழுத்து அவரிடம் ஏதோ சொல்வார். போப் கையை விட நினைத்தும் அந்தப் பெண் விடாமல் பிடித்திருந்தார். இதனால் சற்று நிலைகுலைந்த போப் கோபமடைந்து அந்தப் பெண்ணின் கையை ஆவேசமாகத் தட்டிவிட்டார். அதுவரை கூட்டத்தின் அருகே சென்ற போப் அந்தச் சம்பவத்துக்குப் பிறகு கூட்டத்தை விட்டு சற்று விலகியே சென்றார்.

போப் அந்தப் பெண்ணின் கையைக் கோபமாகத் தட்டிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதில் போப் ஃபிரான்சிஸ்க்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் கருத்துகளைப் பதிவிட்டனர். பிரார்த்தனைக் கூட்டத்தில் ``பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு வன்முறையும் ஒரு பெண்ணிலிருந்து பிறந்த கடவுளுக்கு எதிரான அவதூறு" என்று உரை நிகழ்த்திய சிறிதுநேரத்தில் போப் பெண்ணிடம் ஆவேசமாக நடந்துகொண்டார் என்று வலைதளவாசிகள் குற்றம் சுமத்தினர்.

போப் ஃபிரான்சிஸ்
போப் ஃபிரான்சிஸ்

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்குப் போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ``நாம் பல முறை பொறுமையை இழக்கிறோம். இது எனக்கும் நடக்கிறது. நேற்று நடந்த மோசமான செயலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். போப்பின் மன்னிப்பு அறிக்கையைத் தொடர்ந்து தற்போது சர்ச்சைகள் தீர்ந்துள்ளன.