Published:Updated:

`இங்க அடக்கம் பண்ணுங்க.. இல்ல உங்க செலவுதான்!'- இறந்த ராணுவ வீரர் உடலை கொண்டுபோவதில் குழப்பம்

எம்.திலீபன்

பெற்றோர்கள், உடலை எங்களிடம் ஒப்படையுங்கள் எனக் கேட்டதற்கு.. நீங்கள் உங்களது செலவில்தான் உடலை எடுத்துச் செல்லவேண்டும் என இராணுவ உயர் அதிகாரிகள் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

veeramani
veeramani

ஜம்மு காஷ்மீரில் இறந்துபோன இராணுவ வீரரின் உடலை உங்கள் செலவில் தான் எடுத்துச் செல்லவேண்டும் நாங்கள் எடுத்துவர முடியாது என்று உயர் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ள சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

veeramani
veeramani

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரத்தினம். இவர் ஓய்வுபெற்ற துப்புரவுப் பணியாளர். இவரது மகன் வீரமணி. பட்டப்படிப்பு படித்த வீரமணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவர் தற்பொழுது ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் வீரமணியுடன் பணிபுரிந்த இரண்டு நண்பர்கள் வீரமணியின் வீட்டிற்கு வந்து வீரமணி இங்கு வந்தாரா எனக் கேட்டு விசாரித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் விபரத்தைக் கேட்டனர். அதற்கு வந்தவர்கள் கடந்த ஒரு வாரமாக வீரமணியைக் காணவில்லை எனவும், அவர் வீட்டிற்கேதும் வந்தாரா என அலுவலகத்திலிருந்து தொலைப்பேசிமூலம் தொடர்புகொண்டு விசாரிக்கச் சொன்னதாகத் தெரிவித்துச் சென்றுவிட்டனர்.

protest
protest

பின்னர் மாலை 6 மணியளவில் வந்த போன் தொடர்பில் வீரமணியின் உடல் ஒரு வாய்க்காலிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் பேசியுள்ளனர். அதன்பின்னர் வீரமணியின் தந்தை ரத்தினம் மற்றும் உறவினர்கள் சென்னை சென்று இன்று காலை விமானம் மூலம் சென்று வீரமணியின் உடலைப் பார்த்து இறந்தது வீரமணிதான் என ஊர்ஜிதம் செய்துள்ளனர். அதன்பின்னர் இராணுவ அதிகாரிகள் வீரமணியின் உடலை இங்கேயே உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்போவதாகக் கூறியிருக்கிறார்கள்.

அதற்கு பெற்றோர்கள் உடலை எங்களிடம் கொண்டு வந்து ஒப்படையுங்கள் எனக் கேட்டதற்கு நீங்கள் உங்கள் செலவில்தான் உடலை எடுத்துச் செல்லவேண்டும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

veeramani
veeramani

இதுதொடர்பாக ஜெயங்கொண்டத்தில் உள்ள வீரமணியின் தாய் மற்றும் உறவினர்களுக்குக் கிடைத்த தகவலினால் கோபம் அடைந்த உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். வீரமணியின் உடலை அரசு செலவிலே கொண்டுவந்து, உரிய இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டத்தை நடத்த இருக்கிறோம் என்கின்றனர் உறவினர்கள்.