Published:Updated:

தனிஷ்க் ஜுவல்லரி: `டைட்டன்' மேலாளருக்கு மிரட்டல்; `லவ் ஜிகாத்' ஆதரவு - விளம்பரம் நீக்கப்பட்டது ஏன்?

தனிஷ்க் நிறுவனம் இந்த விளம்பரத்தை நீக்கியதற்குக் காரணமாக வேறொரு விஷயம் சொல்லப்படுகிறது... என்ன அது?

எத்தனையோ தொலைக்காட்சி விளம்பரங்கள் நம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. நம் மனதில் பதிந்த விளம்பரங்கள், பெரும்பாலும் நம்மைச் சிரிக்கவும் ரசிக்கவும் மட்டுமே வைத்திருக்கும். ஆனால், சமீபகாலமாக சில விளம்பரங்கள் நம்மைச் சிந்திக்கவைக்கவும் செய்கின்றன. ஆம்! சமூக கருத்துகளை முன்வைத்து எடுக்கப்படும் சில விளம்பரங்கள் நொடிப்பொழுதில் சில கருத்துகளை நம்மிடம் சொல்லிவிட்டுப் போகின்றன.

சில நாள்களுக்கு முன்னர் சாதி ஒழிப்பை மையமாகவைத்து எடுக்கப்பட்ட `த்ரீ ரோஸஸ்' விளம்பரம் வெளியானது. இந்த விளம்பரத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், பெரும்பாலானவர்களால் வரவேற்கப்பட்டது. அதேபோல கடந்த அக்டோபர் 9-ம் தேதியன்று, டாட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான `தனிஷ்க் ஜூவல்லரி'யின் விளம்பரம் ஒன்று வெளியானது. அந்த விளம்பரத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த மருமகளுக்கு இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதைப்போல காட்சியமைப்பட்டிருந்தது.

தனிஷ்க் விளம்பரம்
தனிஷ்க் விளம்பரம்
screen shot
`விஜய் சேதுபதி இனப் பற்றாளர்தான்... ஆனால்?’ - முரளிதரன் பயோபிக்கால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!
அந்த விளம்பரத்தில், `உங்கள் பழக்க வழக்கத்தில் இவையெல்லாம் பின்பற்றப்படுவதில்லையே' என்று மருமகள் கேட்க, அதற்கு `மகள்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் பண்பாடு அனைத்து குடும்பங்களிலும் இருக்கிறதே' என்று இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மாமியார் பதிலளிப்பதாக வசனம் இடம்பெற்றிருந்தது.

இந்த விளம்பரம் வெளியான சில மணி நேரத்திலேயே, ``தனிஷ்க் விளம்பரம் `லவ் ஜிகாத்'தை ஆதரிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது'' என்று சிலர் தனிஷ்க் நிறுவனத்துக்கு எதிராக இணையத்தில் பதிவிடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து #BoycottTanishq என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் இந்த விளம்பரத்துக்கு எதிராக ட்விட்டரில் கருத்து பதிவிட்டார்.

இந்த விளம்பரம் பல மட்டங்களில் தவறாக இருக்கிறது. ஒரு பெண் திருமணமாகி, புகுந்த வீட்டுக்குச் சென்றவுடன் அந்தக் குடும்பத்தில்தான் அதிக நாள்கள் வாழ்கிறார். ஆனால், அந்தக் குடும்பத்தின் வாரிசைச் சுமக்கும்போதுதான் அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படியென்றால் அவள் வெறும் கர்ப்பபைதானா? இந்த விளம்பரம் லவ் ஜிகாத்தை மட்டுமல்ல... பாலுணர்வையும் ஊக்குவிக்கிறது.
கங்கனா ரணாவத், பாலிவுட் நடிகை
கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்
மகாராஷ்டிரா அரசின் எச்சரிக்கை... அமித் ஷாவுக்கு நன்றி!  Y+ பாதுகாப்பில் கங்கனா?

மேலும், ``இது போன்ற பயங்கரவாத படைப்பாளிகள், நம் ஆழ்மனதுக்குள் புகுத்த நினைக்கும் விஷயங்கள் குறித்து, இந்துக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நமக்கு உணர்த்தப்படும் எந்தவொரு கருத்தையும் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை ஆராய்ந்து, விவாதித்து மதிப்பீடு செய்ய வேண்டும். இதுதான் நமது நாகரிகத்தைக் காப்பாற்ற ஒரே வழி'' என்றும் கங்கனா பதிவிட்டிருந்தார். கங்கனாவின் இந்தப் பதிவுக்குப் பலரும் `சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார்' என்று பதில் கருத்து பதிவிட்டிருந்தனர். சிலர் `அவர் சரியாகத்தான் சொல்கிறார்' என்று கங்கனாவுக்கு ஆதரவளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, அக்டோபர் 12-ம் தேதியன்று, தனிஷ்க் நிறுவனம் அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது. ``வெவ்வேறு வாழ்க்கைச் சூழலைக்கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து ஒற்றுமையின் அழகைக் கொண்டாட வேண்டுமென்பதற்காக எடுக்கப்பட்ட விளம்பரம்தான் இது. ஆனால், இந்த விளம்பரத்துக்கு மாறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. கவனக்குறைவாக உணர்ச்சிகளைத் தூண்டியதால் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம். எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரின் உணர்வுகளையும் நல்வாழ்வையும் மனதில் கொண்டு இந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறுகிறோம்'' என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது தனிஷ்க் நிறுவனம்.

விளம்பரப் படம் நீக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.

இந்த அழகான விளம்பரம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால், இந்துத்துவவாதிகள் தனிஷ்க்கைப் புறக்கணிக்க அழைப்புவிடுக்கிறார்கள். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவர்களை எரிச்சலடையச் செய்கிறதென்றால், உலகில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் மிக நீண்டகால அடையாளமாக இருக்கும் இந்தியாவை அவர்கள் ஏன் புறக்கணிக் கூடாது?
சசி தரூர், காங்கிரஸ் எம்.பி
எம்.பி சசி தரூர்
எம்.பி சசி தரூர்

தனிஷ்க் விளம்பரம் நீக்கப்பட்டதையடுத்து நெட்டிசன்கள் பலரும், `ஒரு பெரிய நிறுவனம் இணையத்தில் வந்த எதிர்ப்புகளுக்காக இந்த விளம்பரத்தை நீக்கியிருக்கக் கூடாது' என்பது போன்ற கருத்துகளை முன்வைக்கத் தொடங்கினர். இதையடுத்து இந்த விளம்பரம் நீக்கப்பட்டதற்கான காரணமாக வேறொரு விஷயத்தை ட்விட்டரில் சிலர் பதிவிட்டிருந்தனர்.

``டாடாவின் மற்றொரு நிறுவனமான `டைட்டான்' நிறுவனத்தின் மேலாளர் மன்சூர் கான் என்பவர்தான் இந்த விளம்பரத்துக்குப் பின்னால் இருப்பவர் என்று செய்திகள் பரவின. மன்சூர் கானுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இதையடுத்துதான் தனிஷ்க் நிறுவனம் இந்த விளம்பரத்தை நீக்கியது'' என்று சில ஸ்கிரீன் ஷாட்டுகளுடன் கருத்து பதிவிட்டிருந்தனர்.

அவர்கள் இணைத்திருந்த ஸ்கிரீன் ஷாட்டுகளில், மன்சூர் கானின் Linked-in சமூக வலைதளப் பக்கத்தின் முகப்பு படம் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், ``இவர்தான் இந்துக்களுக்கு எதிரான இந்த விளம்பரத்துக்கு மூல காரணம். இனிமேல் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமெனத் தெரிந்திருக்கும்'' என்று பதிவிட்டிருந்தனர். மன்சூர் கானின் தொலைபேசி எண்ணும் பொதுவெளியில் பகிரப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல் அழைப்புகள் வரத் தொடங்கியதாகவும், அதன் காரணமாக மன்சூர் கான் தனது லிங்க்டு-இன் கணக்கிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மன்சூர் கான் குறித்த செய்தி வெளியானதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் ``நம் நாட்டில் ஒரே சித்தாந்தத்தைத்தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா... அப்படி ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கொடுமைப்படுத்துபவர்களாக நாம் மாறிவிட்டோமா... நியாயமான வாதங்களுக்கு பதில் வாதங்களை வைக்காமல் அவர்களை உடல்ரீதியாகத் துன்புறுத்த, பொதுமக்கள் தூண்டப்படுகிறார்களா? பிரைவசியை மீறி ஒரு நபரின் சமூக வலைதளக் கணக்கைப் பொதுவெளியில் பதிவிட்டு, அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு நாம் சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறிவிட்டோமா?'' என்றெல்லாம் கேள்விகளை அடுக்கி, கொதித்தெழுந்துவிட்டனர்.

இதற்கிடையில் இந்த விளம்பரத்துக்குப் பின்னணிக் குரல் கொடுத்த நடிகையும், எழுத்தாளருமான திவ்யா தத்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ``நான்தான் பின்னணி குரல் கொடுத்தேன். இந்த விளம்பரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விளம்பரம் நீக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது'' என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ஒருவர் ``உங்களை யாரும் குற்றம் சொல்லவில்லை. ஆனால், இது தவறான விளம்பரம்'' என்று பதில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும்விதமாக, ``நாம் அனைவரும் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டாமா? வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியா'' என்று பதிவிட்டிருந்தார்.

திவ்யா தத்தா
திவ்யா தத்தா
Twitter/ @divyadutta25
ஜெகன் மோகன் Vs. நீதிபதி: `100 திட்டங்களுக்கு எதிரான உத்தரவுகள்' - 8 பக்கக் கடிதப் பின்னணி!

தனிஷ்க் விளம்பரம் அக்டோபர் 12-ம் தேதியே நீக்கப்பட்டிருந்தாலும், நேற்று (அக்.13) இரவு குஜராத் மாநிலம், கட்ச் (Kutch) மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனிஷ்க் நகைக்கடையில் சில மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அந்தக் கிளையின் மேலாளரிடம் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டதற்கு மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. டைட்டான், தனிஷ்க் உள்ளிட்ட கடைகளில் பணிபுரியும் சில முஸ்லிம் ஊழியர்கள் மிரட்டப்படுவதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்தச் சம்பவங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர், ``ஒற்றுமையைப் போற்றும்விதமாக எடுக்கப்பட்ட விளம்பரத்துக்கு இவ்வளவு பெரிய எதிர்வினைகளை ஆற்ற வேண்டிய அவசியம் என்ன? நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. அனைவரும் இது குறித்து விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெரிய நிறுவனங்களுக்கே கருத்து சுதந்திரம் இல்லையென்றால், தனி மனிதனுக்கு எப்படி இருக்கும்? அப்படியே சுதந்திரமாக ஒரு கருத்தைப் பதிவு செய்தாலும் அவர்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கிறது?

எதற்கெடுத்தாலும் வன்முறை, தாக்குதல், கொலை என்று இறங்கிவிட்டால் நாட்டின் அமைதி என்னவாகும்? நம் தேசத் தந்தையும், அகிம்சாவாதியுமான மகாத்மா காந்தியின் புகழ்பாடும் மத்திய அரசு இது போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக அமைதி காக்காமல், இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்பதையும் உறுதி செய்ய வேண்டும். `கருத்துக்கு, பதில் கருத்து வைக்கலாமே தவிர வன்முறையில் ஈடுபடக் கூடாது' என்பதை வலியுறுத்தும் வேலையை அரசே எடுத்து செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இது போன்ற வன்முறைகள் குறையும்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு