Published:Updated:

ஒரு கொலை... ஒரு மரணம்... ஒரு மர்மம்!

தூத்துக்குடி
பிரீமியம் ஸ்டோரி
தூத்துக்குடி

‘என் பின்னாடி வராதீங்க... வெடிகுண்டு வீசிடுவேன்’ என்று எச்சரித்தபடியே ஓடினார். ஆனாலும், சுப்பிரமணி விரட்டினார். அப்போது, துரைமுத்து ஒரு வெடிகுண்டை வீசினார்.

ஒரு கொலை... ஒரு மரணம்... ஒரு மர்மம்!

‘என் பின்னாடி வராதீங்க... வெடிகுண்டு வீசிடுவேன்’ என்று எச்சரித்தபடியே ஓடினார். ஆனாலும், சுப்பிரமணி விரட்டினார். அப்போது, துரைமுத்து ஒரு வெடிகுண்டை வீசினார்.

Published:Updated:
தூத்துக்குடி
பிரீமியம் ஸ்டோரி
தூத்துக்குடி
“ஆகஸ்ட் 18-ம் தேதி... ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு வந்ததால், அனைத்து ஸ்டேஷன்களிலும் இருந்த போலீஸார் தூத்துக்குடி நகரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம்.

அந்தச் சமயத்தில் மணக்கரை காட்டுப் பகுதியிலுள்ள வனத்துறைக் கட்டடத்தில் கூட்டாளிகளுடன் துரைமுத்து பதுங்கியிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உள்ளூர் ஸ்டேஷனில் ஆள் இல்லாத நிலையில், நாங்கள் மட்டும் அங்கு சென்றோம். அந்தக் கட்டடத்தில் நான்கு பேர் கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றிவளைத்தோம்.

ஒரு கொலை... ஒரு மரணம்... ஒரு மர்மம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்று பேர் பிடிபட்ட நிலையில், துரைமுத்து மட்டும் தப்பி ஓடினார். மற்றவர்களை எங்கள் பிடியில்வைத்திருந்த நிலையில், துரைமுத்துவை காவலர் சுப்பிரமணியன் மட்டும் விரட்டிச் சென்றார். கம்பி வேலியைத் தாண்டி காட்டுக்குள் ஓடிய துரைமுத்து, ‘என் பின்னாடி வராதீங்க... வெடிகுண்டு வீசிடுவேன்’ என்று எச்சரித்தபடியே ஓடினார். ஆனாலும், சுப்பிரமணி விரட்டினார். அப்போது, துரைமுத்து ஒரு வெடிகுண்டை வீசினார். அந்த குண்டு நல்லவேளையாக வெடிக்கவில்லை. அதற்குள் காவலர் சுப்பிரமணியன் வேகமாக ஓடி துரைமுத்துவை நெருங்கி விட்டார். ஆத்திரமடைந்த துரைமுத்து, வெடிகுண்டை எடுத்து காவலர் சுப்பிரமணியனின் தலையில் ஓங்கி அடித்தார். அந்த குண்டு வெடித்ததில், சுப்பிரமணியனின் தலை சிதறி அங்கேயே விழுந்து இறந்துவிட்டார். வலது கை சிதைந்துபோன நிலையில், உடலில் காயங்களுடன் துரைமுத்து கிடந்தார். பதறிப் போன நாங்கள் டி.எஸ்.பி வெங்கடேஷ் சாருக்கு தகவல் சொன்னோம். உடனே எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தனர்’’ - துரைமுத்துவைப் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீஸார் சொன்ன ஸ்டேட்மென்ட் இது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரௌடியாக உருவான துரைமுத்து!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள மேலமங்கலகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த துரைமுத்து. 28 வயதே ஆன துரைமுத்துமீது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. துரைமுத்துவின் குற்ற வரலாறாக அவரின் ஊர்க்காரர்கள் சொல்வது இதுதான்...

‘‘ஸ்ரீவைகுண்டத்தில் டூ-வீலர் மெக்கானிக் கடை நடத்திவந்த துரைமுத்துவுக்கு மது, புகையிலை என எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. அவரின் நட்பு வட்டம் பெரிது. கடந்த 2013-ம் ஆண்டு அவரின் நண்பர்களான இசக்கிமுத்து, காசி, பெரியவன், தளவாய் ஆகியோரை நவ்வலடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகராஜா என்பவர் அவதூறாகப் பேசி, தகராறு செய்தார். இந்தத் தகவல் தெரியவந்ததும் கோபமடைந்தார் துரைமுத்து. ஆறுமுகராஜாவை அவரின் வீட்டுக்கே தேடிச் சென்று வெட்டிக் கொல்ல முயன்றார். அதில் தப்பிய ஆறுமுகராஜா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த வழக்கை ஆறுமுகராஜா வாபஸ் வாங்க மறுத்ததால், 2015-ம் ஆண்டு அவரை துரைமுத்து வெட்டிக் கொன்றார். அதுதான் துரைமுத்து செய்த முதல் கொலை.

ஒரு கொலை... ஒரு மரணம்... ஒரு மர்மம்!

அதன் பின்னர் டூ வீலர் மெக்கானிக் ஷெட் நடத்துவதைக் கைவிட்ட துரைமுத்து, தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவோருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். மணல் கொள்ளையர்களுக்குக் காவலாக இருந்ததால் அவருக்குப் பணம் கொட்டத் தொடங்கியது. வழக்குகளின் எண்ணிக்கையும் உயரத் தொடங்கியது. மணல் கடத்தலில் நடந்த பஞ்சாயத்துகள் தொடர்பாக, புது நட்புகள் உருவாகின. அதில் வினோத், தனுஷ்கோடி ஆகியோருடன் இணைந்து மணல் கொள்ளையர்களிடம் மாமூல் வசூலித்து, தனி ராஜாங்கமே நடத்திவந்தார். ஒரு கட்டத்தில் தனுஷ்கோடியின் மனைவியிடம் வினோத் தவறாக நடக்க முயன்றதாகப் புகார் வந்ததுள்ளது. இதனால் துரைமுத்து கொதிப்படைந்தார். வினோத்தை தன் சொந்த ஊரான மேலமங்கலகுறிச்சிக்கு வரச் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரட்டைக் கொலை!

2018, நவம்பர் 22-ம் தேதி... தன் சொந்த கிராமத்தில் வைத்து வினோத்தையும் அவருடன் வந்த ராமச்சந்திரன் என்பவரையும் துரைமுத்து வெட்டிக் கொன்றார். இந்த வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்று ஜாமீனில் வந்து, தலைமறைவானார். இரட்டைக் கொலைக்குப் பழிதீர்க்கும் வகையில், வினோத் ஆதரவாளர்கள் சிலர் சேர்ந்து துரைமுத்துவின் அண்ணன் கண்ணனைக் கடந்த ஆண்டு வெட்டிக் கொன்றார்கள். இதற்கு பழிக்குப் பழி வாங்க நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்த கணேசபாண்டியனை துரைமுத்துவும் கூட்டாளிகளும் சேர்ந்து நடுரோட்டில் வெட்டிச் சாய்த்தார்கள். இப்படிப் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதால், துரைமுத்துவுக்கு எதிரிகள் அதிகமானார்கள். காவல்துறையினர் ஒரு பக்கமும் எதிரிகள் மறுபக்கமும் தேடி வந்ததால், வனத்துறைக் கட்டடத்தில் தலைமறைவாக இருந்தார் துரைமுத்து” என்கிறார்கள் கிராம மக்கள்.

பத்து வருடங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வேறு ஒருவர் என நினைத்து கொலையாளிகள் வெடிகுண்டு வீசியதில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொல்லப்பட்டார். கால் சிதைந்த நிலையில், சாலையில் அவர் தண்ணீருக்காகக் கதறியது பலரையும் கலங்கவைத்தது. அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒருவர், துரைமுத்துவுக்கு நெருங்கிய உறவினர். அந்தச் சம்பவத்திலும் துரைமுத்துவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ் அழைக்கப்படவில்லை!

ஆகஸ்ட் 18-ம் தேதி நடந்த சம்பவத்துக்கு வருவோம்... சம்பவ இடத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்து கிடந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட துரைமுத்துவின் அருகில், பிய்ந்துபோன போலீஸ் பெல்ட் கிடந்தது. இரண்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகே இருவரையும் அதிவிரைவுப் படை வேனில் ஏற்றி, பாளையங்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தார்கள். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே துரைமுத்து உயிரிழந்ததாகப் பின்னர் போலீஸார் தெரிவித்தனர். ‘காயமடைந்து கிடந்த ரௌடி துரைமுத்துவை அங்கிருந்த போலீஸார் அடித்தே கொன்றுவிட்டார்கள்’ என்று மருத்துவமனை வளாகத்தில் பேசிக்கொண்டார்கள்.

வனத்துறை சர்ச்சையும் விளக்கமும்!

ரௌடி துரைமுத்து காட்டுக்குள் பதுங்கியிருந்த கட்டடம், வனத்துறைக்குச் சொந்தமானது. அங்கு கட்டில், சேர் ஆகியவற்றுடன் வெயிட் லிஃப்டிங் உபகரணங்கள், கேரம் போர்டு, பறவைகளைப் பிடிக்கப் பயன்படும் சுருக்கு வலை ஆகியவை இருந்தன. ‘அங்கு அவர்கள் தங்கியிருந்தது, இதுநாள் வரையில் காவல்துறைக்குத் தெரியாமல்போனது எப்படி?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடி வனச்சரகர் விமல்குமாரிடம் கேட்டதற்கு, ‘‘கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசு நிறுவனமான, ‘காடு மற்றும் மரபியல் மரம் வளர்ப்பு மைய’த்தின் தூத்துக்குடி ஆய்வு மையம் மணக்கரையில் உள்ளது. கட்டடம் உட்பட ஆறு ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்துள்ளோம். தண்ணீர் பாய்ச்சுவதற்கும் ஆடு, மாடுகள் மேயாமல் கண்காணிப்பதற்காகவும் நியமிக்கப்பட்ட காப்பாளர் சுடலைக்கண்ணன் என்பவர் துரைமுத்துவின் சகோதரர். அதனால்தான் அவர்கள் அங்கு தங்கியிருக்க முடிந்திருக் கிறது. சுடலைக்கண்ணனை நியமித்ததுகூட அந்த ஆராய்ச்சி நிறுவனம்தான். நாங்கள் குத்தகைக்குக் கொடுத்துவிட்டதால் அந்தப் பகுதியில் ஆய்வுக்குச் செல்வதில்லை” என்றார்.

எண்ணிக்கை மாறியதன் மர்மம்!

தூத்துக்குடி எஸ்.பி-யான ஜெயகுமார், ‘தனிப்படையைச் சேர்ந்த ஐந்து பேர் ரௌடியைத் தேடிச் சென்றதாக’ச் சொன்ன நிலையில், தென்மண்டல ஐ.ஜி-யான முருகன், ஏழு போலீஸார் அங்கு சென்றதாகச் சொன்னார். அதன் பின்னர், நம்மிடம் பேசிய எஸ்.பி ஜெயகுமார், ‘டி.எஸ்.பி வெங்கடேஷ் தலைமையில் 10 பேர் சென்றதாக’ச் சொன்னார். இப்படி மாற்றி மாற்றிச் சொன்னதன் காரணம் யாருக்கும் புரியவில்லை.

துரைமுத்து மரணத்தில் உள்ள மர்மங்கள் அவிழ்க்கப்பட வேண்டும்!

கலங்கவைத்த கர்ப்பிணி மனைவி!

`உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டி.ஜி.பி-யான திரிபாதி, காவலரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். அப்போது 10 மாத கைக்குழந்தையுடன், மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி, தன் கணவனின் முகத்தைக் காட்டுமாறு கெஞ்சியதைப் பார்த்து எல்லோரும் கலங்கிப்போனார்கள்.

ஒரு கொலை... ஒரு மரணம்... ஒரு மர்மம்!

அரிவாளுடன் புதைக்கப்பட்ட உடல்!

துரைமுத்து மரணத்திலிருக்கும் சந்தேகம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவரின் உறவினர்கள் முடிவெடுத்துள்ளனர். அதன் காரணமாகவே, அவரின் உடலை எரிக்காமல் அடக்கம் செய்துள்ளனர். துரைமுத்து உடலுடன் மூன்று அடி நீளமுள்ள வீச்சரிவாள் வைக்கப்பட்டது. அத்துடன் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நின்ற இளைஞர்கள், ‘‘அண்ணே... துரோகிகள் காட்டிக் கொடுத்ததால் உன்னை இழந்து விட்டோம். உன் கனவுகளை நாங்கள் நிறைவேற்றுவோம்...’ எனச் சத்தியம் செய்தனர். அங்கிருந்த போலீஸார் இதைக் கண்டுகொள்ளவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism