Published:Updated:

பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கை உடைந்தவர்கள் எத்தனை பேர்?- போலீஸுக்கு 10 ஆர்.டி.ஐ கேள்விகள்!

பி.ஆண்டனிராஜ்

பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, போலீஸ் விசாரணைக்குச் செல்பவர்கள், காவல்நிலைய பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கையை உடைத்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இது தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் காவல்துறையினருக்கு ஆர்.டி.ஐ மூலம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்ரூமில் வழுக்கி விழுந்தவர்கள்
பத்ரூமில் வழுக்கி விழுந்தவர்கள்

செயின் பறிப்பு, அடிதடி, ரகளையில் ஈடுபடும் ரவுடிகள் மட்டுமல்லாமல், ’பஸ் ரூட் தல’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பிறருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மாணவர்கள் வரை பல்வேறு தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில், போலீஸில் பிடிபடும் ரவுடிகள், கொள்ளையர்கள் உள்ளிட்டோரை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது, அங்குள்ள பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கையை உடைத்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது.

நெல்லையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர்
நெல்லையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர்

சென்னையில், கடந்த ஒரு மாதமாக இதுபோன்றவர்கள் பலரும் பாத்ரூமில் வழுக்கிவிழுந்து வலதுகையை உடைத்து மருத்துவமனைகளில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். சென்னையில் தொடங்கிய இந்த பாத்ரூமில் வழுக்கிவிழும் கலாசாரம், பிற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. நெல்லையில் உள்ள தனியார் வணிக நிறுவனத்தின் உள்ளே அறிவாளுடன் சென்று மிரட்டிய நபர்களில் ஒருவர், போலீஸில் பிடிபட்டு பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கை உடைபட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.

விசாரணைக்காக காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் ரவுடிகள், கொள்ளையர்கள், அங்குள்ள பாத்ரூமில் வழுக்கிவிழுவது தொடர்பாகப் பொதுமக்களிடம் இருவேறு கருத்துகள் உள்ளன. குற்றம் செய்தவர்களுக்கு இத்தகைய தண்டனைகள் கொடுப்பது சரிதான் என ஒரு தரப்பினர் தெரிவித்தாலும், கைகளை உடைப்பதால் வாழ்நாள் முழுவதும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும். இத்தகைய கொடூரத் தண்டனைகள் தவறானவை என மற்றொரு தரப்பினரும் விவாதித்துவருகின்றனர்.

ஆர்.டி.ஐ போராளியான வழக்கறிஞர் பிரம்மா
ஆர்.டி.ஐ போராளியான வழக்கறிஞர் பிரம்மா

இத்தகைய சூழலில், நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் தகவல் அறியும் சட்டப் போராளியுமான பிரம்மா, காவல்துறைத் தலைவருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி மனு அனுப்பியிருக்கிறார். அதில், ’’ தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை காவல் நிலையங்கள் உள்ளன. மாவட்ட வாரியாக அந்த விவரங்கள் தேவை. ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் நிலையங்களில் எத்தனை கழிப்பிட வசதிகள் இருக்கின்றன.

காவல் நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களில் வழுக்கிவிழுந்து கை, கால் முறிவு ஏற்பட்ட காவலர்கள், கடந்த 2010-19 வரை மாவட்ட வாரியாக எத்தனை பேர் இருக்கிறார்கள். காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட விசாரணைக் கைதிகளில் எத்தனை பேர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2019 வரை கழிப்பிடத்தில் வழுக்கிவிழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளார்கள் என்ற விவரம் தேவை. தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களில், விசாரணைக் கைதிகள் விழாமல் இருப்பதற்காகவும் காவலர்கள் விழாமல் இருப்பதற்காகவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

வழுக்கி விழுந்ததில் கை உடைந்த மாணவர்கள்
வழுக்கி விழுந்ததில் கை உடைந்த மாணவர்கள்

காவல் நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களைச் சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் எத்தனை சுகாதாரப் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்? அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது? சுத்தம் செய்வதற்கு என்னென்ன கெமிக்கல், ஆசிட் உள்ளிட்ட பொருள்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அவற்றை வாங்கியதற்கான பில் நகல் தருக.

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில், குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்துச்சென்று, சீருடையில் அல்லாத நபர்களால் கை, கால்கள் முறிக்கப்படுகின்றன எனில், சீருடையில் இல்லாத ரவுடிகள் மூலம் கை, கால்கள் முறிக்கப்படுகிறதா? அப்படியானால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் எவ்வளவு? காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்துவந்து கழிப்பிடத்தில் வழுக்கிவிழுந்து கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்ட வகைக்கு எத்தனை காவலர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

விசாரணைக்குச் சென்றவருக்கு மாவுக்கட்டுடன் சிகிச்சை
விசாரணைக்குச் சென்றவருக்கு மாவுக்கட்டுடன் சிகிச்சை

குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விசாரணைக்கு அழைத்து வந்த போது, காவல் நிலையத்தில் உள்ள கழிப்பிடம் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுக்க வேண்டிய முகவரி என்ன? யார் மீதெல்லாம் புகார் கொடுக்க வேண்டும் என்ற விவரம் தேவை. கழிப்பிடத்தில் வழுக்கிவிழுந்த நபர், மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டும் எனில், அதன் முகவரி தருக அல்லது மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையின் விவரம் தருக’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், ’’தவறு செய்பவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. ஆனால், சமீப காலமாக தமிழகத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் விசாரணைக் கைதிகளின் கை உடைக்கப்படுகிறது. இது, அப்பட்டமாக மனித உரிமை மீறல். குற்றம் செய்தவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் நடக்கும் இத்தகைய சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

காவல் நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களில் வழுக்கிவிழுந்து கை, கால் முறிவு ஏற்பட்ட காவலர்கள், கடந்த 2010-19 வரை மாவட்ட வாரியாக எத்தனை பேர் இருக்கிறார்கள்.

சட்டத்தை மதிக்காமல் காவல்துறையினரே கையில் எடுத்துக் கொண்டு, ’கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்கிற வகையிலான தண்டனைகளை வழங்கினால், நீதிமன்றங்கள் எதற்காக இருக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் இனியும் நடைபெறக்கூடாது என்பதே என் விருப்பம். அதன் காரணமாகவே ஆர்.டி.ஐ மூலம் சில தகவல்களைக் கேட்டிருக்கிறேன். இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அடுத்தகட்டமாக வழக்கு தொடர்வது பற்றி முடிவெடுப்பேன்’’ என்றார்.