Published:Updated:

`போலீஸ் ஏட்டு துணையோடு மணல் கொள்ளை?’- தடுக்க முயன்ற ஒரத்தநாடு விவசாயியிக்கு நேர்ந்த கொடுமை

தங்கமுத்து
தங்கமுத்து

போலீஸ் ஏட்டு ஒருவர் துணையுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல்பதிவு ஒன்றையும் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார் தங்கமுத்து.

ஒரத்தநாடு அருகே விவசாயி ஒருவர் மணல் கொள்ளை நடப்பதை செல்போனில் வீடியோ படம் எடுத்ததுடன் அதனை தனியாளாக தடுக்க முயன்றுள்ளார். இதில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களால் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் போலீஸ் ஏட்டு ஒருவர் உதவியுடன் மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணல் திருட்டை தடுத்த தங்கமுத்து
மணல் திருட்டை தடுத்த தங்கமுத்து

ஒரத்தநாடு அருகே உள்ள சின்னமங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமுத்து. விவசாயியான இவர் நேற்று நள்ளிரவு தனது வயலுக்குச் சென்றபோது தனது வயல் பகுதியை ஒட்டியுள்ள காட்டாற்றில் சிலர் லாரி மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை மறைந்திருந்து தன் செல்போனில் வீடியோ எடுத்த தங்கமுத்துவை அந்த நபர்கள் மண் வெட்டி மற்றும் கடப்பாரை கொண்டு தாக்கியிருக்கிறார்கள்.

இதில் காயமடைந்த அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இது தொடர்பாக ஒரத்தநாடு டி.எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார். போலீஸ் ஏட்டு ஒருவர் துணையுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல்பதிவு ஒன்றையும் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார் தங்கமுத்து. அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

மணல் திருட்டு
மணல் திருட்டு
Representational Image

இது குறித்து தங்கமுத்து கூறியிருப்பதாவது,``என் வயலுக்கு அருகில் உள்ள மஹாராஜா சமுத்திரம் என்ற காட்டாற்றில் எங்க ஊரைச் சேர்ந்த ஜெயக்குமார், ரஞ்சித்குமார், ரவீந்திரன் ஆகிய 3 பேர் லாரி மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்த நான் ஆதாரத்திற்காக செல்போன் மூலம் வீடியோ எடுத்தேன். மேலும், மணல் திருட்டையும் தனியாளாகத் தடுக்க முயன்றேன்.

இதையடுத்து அவர்கள் என் செல்போனைப் பறித்துக் கொண்டதுடன், என்னை மண் வெட்டி, கடப்பாரை கொண்டு தாக்கினர். அத்துடன் அவர்கள், `திருவோணம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாகப் பணிபுரியும் சரவணன் என்பவரின் துணையுடன்தான் நாங்க மணல் எடுக்கிறோம். நீ எங்க வேண்டுமானாலும் போய் சொல். எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ எனச் சொன்னார்கள்.

`ஊரடங்கு முடியறதுக்குள்ள அள்ளிக் குவிக்கணும்!' -கரூரை கதிகலக்கும் மணல் கடத்தல்

இதையடுத்து நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இது தொடர்பாக மணல் திருட்டில் ஈடுபட்டவர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு சரவணன் மீதும் நடவடிக்கை எடுக்க ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமல கண்ணனிடம் புகார் அளித்துள்ளேன்’’ எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

`மணல் திருட்டு நடப்பதாக எம்.பி மனு கொடுத்தால், அமைச்சர் கோபப்படுகிறார்!'- தங்கமணியை சாடும் ஈஸ்வரன்

ஒரத்தநாடு டி.எஸ்.பி செங்கமலக்கண்ணனிடம் பேசினோம். ``இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் ஏட்டு சரவணனுக்கும் இதில் தொடர்பிருந்தால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு