Published:Updated:

`2001-ல் கொலை, 2004ல் தீர்ப்பு, 2009-ல் ஆயுள் தண்டனை, 2019-ல் உறுதி!'- நாளை முதல் ராஜகோபாலுக்குச் சிறை

எம்.குமரேசன்

பிரின்ஸ் சாந்த குமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் அதிபர் சிறைவாசம் அனுபவிக்கவுள்ளார்.

ராஜகோபால்
ராஜகோபால்

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததால், நாளை முதல் சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் சிறைத்தண்டனையை அனுபவிக்க உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் குக்கிராமத்தில் பிறந்து சென்னை முதல் சிங்கப்பூர் வரை லண்டன் முதல் ஸ்டாக்ஹோம் வரை' சரவணபவன்' என்ற பிராண்ட் நேமை உருவாக்கிய ராஜகோபால், கொலை வழக்கில் சிக்கி சிறைத் தண்டனைக்குள்ளானவர்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

கடந்த 2000-ம் ஆண்டு ஜோதிடர் ஒருவரின் அறிவுரைப்படி, ஜீவஜோதி என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்ய ராஜகோபால் முயன்றார். ஏற்கெனவே, பிரின்ஸ் சாந்த குமார் என்பவரை ஜீவஜோதி காதலித்து திருமணம் செய்திருந்தார். ஜீவஜோதியிடம் இருந்து விலகி விடுமாறு ராஜகோபால் வற்புறுத்த, பிரின்ஸ் சாந்தகுமார் மறுக்கவே கூலிப்படையினரை கொண்டு அவரை 2001-ல் கொலை செய்தார் ராஜகோபால்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் பிரின்ஸ் சாந்தகுமார் உடல் கிடைத்தது. கொலைக்கு மூளையாக ராஜகோபால் செயல்பட்டுள்ளார். கார்மேகம், ஹூசைன், காசி, டேனியல், விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்ய உதவியாக இருந்தனர். 2004-ம் ஆண்டு சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கப்பட்டது.

ராஜகோபால்
ராஜகோபால்

தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் தரப்பு மேல்முறையீடு செய்தது. அரசு தரப்பில் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைவாக இருக்கிறது. எனவே, ஆயுள் தண்டனை அளிக்க வேண்டுமென்று மேல்முறையீடு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ராஜகோபால் உள்ளிட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்தது. தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்றம் ராஜகோபாலுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்ததோடு, ஜூலை 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

'தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை எந்தத் தருணத்திலும் விட்டுத்தர மாட்டேன்' என்று ராஜகோபால் முகத்தைப் பார்த்து பிரின்ஸ் சாந்தகுமார் நேரடியாகக் கூறியதால் அதிக கோபமடைந்து இந்தக் கொலையை ராஜகோபால் செய்துள்ளார்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

பிரின்ஸ் சாந்தகுமாரை காரில் கடத்திய கூலிப்படையினர் அவரை சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். கணவரை இழந்த ஜீவஜோதி மறுமணம் செய்து கொண்டு தற்போது அமைதியாக வாழ்கிறார். ராஜகோபால் நாளை முதல் சிறைவாசம் அனுபவிக்கவுள்ளார்.