Election bannerElection banner
Published:Updated:

கரூர்: `ஆளில்லாத அறையில் கணினி இயங்கியது எப்படி?!' - செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி ஆய்வு
செந்தில் பாலாஜி ஆய்வு

`வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அருகிலுள்ள அறைகளில் கணினி மற்றும் இணையதளம் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது!’ - செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்கு அருகிலுள்ள அறையில் நள்ளிரவு நேரத்தில் கணினிகளும், ஏ.சி-யும் இயங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கரூர் வாக்குப்பதிவு மையத்தைப் பார்வையிட்ட செந்தில் பாலாஜி, `ஆளில்லாத அறையில் ஏ.சியும், கணினியும் இயங்கியது எப்படி... அதிகாரிகளின் விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலும், தொடர்ந்து பாதுகாப்பை அங்கே பலப்படுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்சியரிடம் புகார் அளிக்கும் தி.மு.க-வினர்
ஆட்சியரிடம் புகார் அளிக்கும் தி.மு.க-வினர்
கரூர்: நள்ளிரவில் தானாக இயங்கிய ஏ.சி., கணினிகள்?! - வாக்கு இயந்திரங்கள் அறைக்கு அருகே பரபரப்பு

கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி, கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தது. அப்படி வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரூர் - சேலம் சாலையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக சிசிடிடி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அப்படி, அங்கே வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்துக்கு அருகிலுள்ள, கட்டடத்தில் கம்ப்யூட்டர்கள், இணையதளம், வைஃபை, ஏ.சி உள்ளிட்டவை கடந்த 18-ம் தேதி இரவு இயங்கியதால், சந்தேகமடைந்த தி.மு.க-வினர் புகார் அளித்தனர். கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோர் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

அது குறித்து ஆட்சியர் விளக்கமளித்தும், தி.மு.க-வினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தநிலையில், கரூர் வாக்குப்பதிவு மையத்தில் கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜியும், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோவும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதையடுத்து, நேற்று காலையும் கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால்,. வாக்கு எண்ணிக்கை 14 மேஜைகள் என்பதை, 28 மேஜைகளாக அதிகப்படுத்தி எண்ண வேண்டும். கொரோனா காலத்தைக் கருத்தில்கொண்டு, அதிக முகவர்கள் கூடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆளில்லாத அறைகளில் கணினிகள் பயன்படுத்தப்பட்டது குறித்து, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம். அவர்கள் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலும், இது போன்ற சர்ச்சைகள் ஏற்படாத வகையில் அதிகாரிகள் அங்கே பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

செந்தில் பாலாஜி ஆய்வு
செந்தில் பாலாஜி ஆய்வு

வாக்குப் பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி அறைக்கு அருகில் விடுமுறை நாள்களிலும் கல்லூரியின் கணினி மையங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் கணினி அறைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டோம். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அருகிலுள்ள அறைகளில் இது போன்ற கணினி தொடர்பான செயல்பாடுகளுக்கும், பொது இணையதளம் செயல்படுவதற்கும் அனுமதி அளிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று கேட்டுக்கொண்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு