Published:Updated:

`விபத்தில் யாராவது இறந்தாலும் லஞ்சம் கேட்பார்!' -டிஎஸ்பி மீது சேலம் இன்ஸ்பெக்டரின் `பகீர்' புகார்

மணல் கடத்தல்
மணல் கடத்தல்

மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கியதாக வெளியான ஆடியோவால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், இன்ஸ்பெக்டர் ராம் ஆண்டவர்.

சேலம் மாவட்டம் வீரகனூர் காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவர், ராம் ஆண்டவர். இவர், வீரகனூர் சுவேத நதியில் மணல் கொள்ளையர்களிடம், ' மணல் கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் போட உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி. எனவே, மணலைப் பத்திரப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். அதிகாலை 4:00 மணிக்கு பெட்ரோல் பங்க் அருகே வண்டியை நிறுத்திவிட்டு, குடியிருப்புக்கு வந்து பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்...' என்று கூறும் ஆடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியதால், மூன்று தினங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் ராம் ஆண்டவர் துறைரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராம் ஆண்டவர்
ராம் ஆண்டவர்

இதுபற்றி ராம் ஆண்டவரிடம் பேசியபோது, '' நான் ஜக்கம்மாவை குலதெய்வமாகக் கொண்டு நேர்மையாக வாழ்ந்துவருபவன். அந்த ஆடியோவை நன்றாகக் கேட்டால் தெரியும், மணல் கொள்ளையர்களைப் பிடிப்பதற்காகவே பேசினேன். கொட்டி வைத்திருக்கும் மணல் அவர்களுடையது என்பதை உறுதி செய்வதற்காக, எஸ்.பி மேடம் குண்டர் சட்டம் போடச் சொல்லியிருக்கிறார். இந்த மணலைப் பத்திரப்படுத்து என்று கூறி இருப்பேன்.

நான் மணல் கொள்ளையர்களைப் பிடித்தால் எஸ்.பி, இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராஜன், டிஎஸ்பி ராஜூ ஆகியோர் உடனே என் லைனில் வந்து, அவர்கள்மீது வழக்குப் போடாமல் உடனே விடச் சொல்லுவார்கள். வேறு வழிதெரியாமல், அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு விட்டுவிடுவேன். பால் சுரக்கும் தாயின் மார்பகத்தை அறுப்பதற்குச் சமமானது ஆற்றில் மணல் அள்ளுவது என்பதை நன்றாக உணர்ந்தவன், உயிர் போனாலும் உடன்பட மாட்டேன்.

காவல்துறையில் நூறு சதவிகிதம் சாதி ஆதிக்கம் தலைதூக்கி இருக்கிறது. சேலத்தில், ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் குரூப்பாக இருக்கிறார்கள். அவர்களால் நான் சாதிரீதியாகப் பழிவாங்கப்பட்டேன். இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராஜன், கிருஷ்ணகிரியில் அவருடைய சொந்தக்காரரை வைத்து மணல் கடத்துகிறார். விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர்களைக்கூட விடாமல் லஞ்சம் வாங்குபவர் டி.எஸ்.பி ராஜூ. இவர்கள் மாதம்தோறும் வாங்கும் லஞ்சமும் கமிஷனும் பிறந்த குழந்தைக்குக்கூட தெரியும்.

என்னுடைய சர்வீஸில், யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. என் மனைவி டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி, காவல்துறையில் அலுவலகப் பணியில் சேர்ந்தபோது, நான் சொன்ன முதல் வார்த்தை 'யாரிடமாவது லஞ்சம் வாங்கியதாகக் கேள்விப்பட்டால் உன் கையால் சாப்பிடக்கூட மாட்டேன்' என்பதுதான். என்னுடைய வருமானத்திற்கு மீறி பொருளோ, சொத்தோ வாங்கி இருந்தால் அரசு எனக்கு வழங்கக்கூடிய பென்ஷன் வேண்டாம்.

மணல்
மணல்

நான் பணியாற்றிய ஒகேனக்கல், அம்மாபேட்டை, வீரகனூர் பகுதி மக்களிடம் கேட்டுப்பாருங்கள். என்னை கடவுள் ரேஞ்சுக்கு பேசுவார்கள். இந்தத் துறையில் என்மீது இருந்த கெளரவத்தையும் சுயமரியாதையும் டிஎஸ்பி-யும், எஸ்.பி, இன்ஸ்பெக்டரும் சேர்ந்து அவமானப்படுத்திவிட்டார்கள். நான் கூலி வேலை செய்து காவல்துறைக்கு வந்தவன். மீண்டும் கூலி வேலை செய்து 10 ஆயிரம் சம்பாதித்தாலும் கெளரவமாக வாழ்வேன். சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்ததும் திரும்பிக்கூட பார்க்காமல் என்னுடைய சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு வந்துவிட்டேன்'' என்றார்.

இதுபற்றி டிஎஸ்பி ராஜூவிடம் கேட்டபோது, '' நான் கேட்டபோதுகூட பணம் வாங்கியது உண்மை என்று ஒப்புக்கொண்டார். ஆடியோ வந்து 3 மாதம் ஆகிறது. விசாரணை அதிகாரி மற்றும் எங்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளிடம் பணம் வாங்கவில்லை என்பதை நிரூபித்திருக்கலாம். காவல்துறையில் சாதி கிடையாது. செய்த குற்றத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக சாதியையும் பிறர் மீது குற்றத்தையும் சுமத்துகிறார். அவர், 3-வது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் '' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு