Published:Updated:

’பிரதமரின் உத்தரவை மதிக்கவில்லையா?!’ - சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ.வின் நிவாரண முகாம்

பாஜக எம்.எல்.ஏ
பாஜக எம்.எல்.ஏ

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் எழுந்த வண்ணமே உள்ளன.

உலக அசுரனாக உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸ் உலகை நிலைகுலையச் செய்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு சமூக இடைவெளி ஒன்றே தீர்வு என உலக சுகாதார நிறுவனம் உள்பட அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்களும் பரிந்துரைத்துள்ளன. சமூக இடைவெளியை பேணுவதற்காக மக்களின் ஒன்று கூடுதலை தடுப்பதற்காக இந்தியாவில் 30 நாள்களுக்கு மேலாக பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா
கொரோனா

ஊரடங்கு காலங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக வெளியே செல்லும் போது மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே,, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம் என அரசியல் கட்சியினரும், ஆட்சியாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் எழுந்த வண்ணமே உள்ளன.

கர்நாடகாவின் ஹொன்னாலி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ.வும், முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலருமான ரேணுகாச்சாரியா, மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதாரப் பணியாளர்களுக்கு (ASHA) ரேஷன் பொருள்களை வழங்கி உள்ளார். நிவாரணப் பொருள்கள் வழங்கும் போது, எம்.எல்.ஏ, சுகாதாரப் பணியாளர்கள் என யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.

’பிரதமரின் உத்தரவை மதிக்கவில்லையா?!’ - சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ.வின் நிவாரண முகாம்

ரேணுகாச்சாரி மேடையில் இருக்க, சுகாதார பணியாளர்கள் அனைவரும் தரையில் கூட்டமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அமர்ந்துள்ளனர். மேலும், பா.ஜ.க எம்.எல்.ஏ ரேணுகாச்சாரி மற்றும் சுகாதாரப் பணியாளர்களில் ஒரு சிலரை தவிர, பெரும்பாலானோர் மாஸ்க அணியவில்லை. எம்.எல்.ஏ இவ்வாறு நடந்துக் கொண்டது ஊரடங்கு விதிமுறைகளை மீறும் விதமாக உள்ளதாக குறிப்பிட்டு வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும்பாலானோரால் பகிரப்பட்டு, தற்போது வைரலாகி வருகிறது.

இதே போல், இந்த மாத தொடக்கத்தில் கர்நாடகாவின் துருவேகர தொகுதி பா.ஜ. கட்சியின் எம்.எல்.ஏ ஜெயராம், தொகுதிக்கு உட்பட்ட தும்கூர் பகுதியின் குப்பி தாலுகாவுக்கு உட்பட்ட பல கிராம மக்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்விலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்பதோடு, யாரும் மாஸ்க் அணியவில்லை. அவரின் இந்த செயலும், பல்வேறு தரப்பினரால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

’பிரதமரின் உத்தரவை மதிக்கவில்லையா?!’ - சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ.வின் நிவாரண முகாம்

இதனிடையே, பிரதமர் மோடி, கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவரின் உரையின் பெரும்பாலான நேரம், மக்கள் சமூக விலகலை கடைப்பிடிப்பதன் மூலமே கொரோனா தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ச்சியாக பாஜகவினர் ஊரடங்கு விதிமுறைகள மீறும் செயல், வேலியே பயிரை மேய்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு