Published:Updated:

மதுரை ஆவின் மேலாளர் தற்கொலை... அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சிக்கல்!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

புகழேந்தியின் மனைவி விஜயலட்சுமி, "என் கணவர் சாவுக்கு பொய்ப்புகார் சுமத்தி இடைநீக்கம் செய்த ஆவின் பொது மேலாளர், துணைப் பொதுமேலாளர், ஆடிட்டர் ஆகியோர்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகார் மழையில் மூழ்கிக்கொண்டிருந்த மதுரை ஆவின் நிறுவனத்தில் மேலாளாராகப் பணியாற்றிய புகழேந்தி தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை ஆவினில் பால் பொருள்கள் தயாரிப்புப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வந்த 36 வயதான புகழேந்தி, உற்பத்திப் பிரிவில் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 7-ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார். விரக்தியில் இருந்த அவர், வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மதுரை ஆவின் ஊழியர்கள்.

புகழேந்தி உறவினர்கள் போராட்டம்
புகழேந்தி உறவினர்கள் போராட்டம்
ஈ.ஜெ.நந்தகுமார்
`ஒழுங்காக இருக்கச் சொல்லுங்க.. இல்லைன்னா?!'- ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கடுகடுத்த முதல்வர்

`சாவுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை வாங்க மாட்டோம்’ என்று புகழேந்தியின் உறவினர்கள் கடந்த 11-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் `விசாரணை நியாயமாக நடக்கும்’ என்று போலீஸார் சமாதானம் செய்து உடலை வாங்க வைத்தனர். புகழேந்தியின் மனைவி விஜயலட்சுமி, "என் கணவர் சாவுக்கு பொய்ப்புகார் சுமத்தி இடைநீக்கம் செய்த ஆவின் பொது மேலாளர், துணைப் பொதுமேலாளர், ஆடிட்டர் ஆகியோர்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். திருமணம் முடிந்து பத்தாண்டுகளாகக் குழந்தை இல்லாத நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மதுரை ஆவின் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்... "ஆவின் உயரதிகாரிகள், கூட்டுறவு சங்கப் பொறுப்பில் உள்ளவர்கள், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் தேவைப்படும்போதெல்லாம் இங்கு உற்பத்தி செய்யப்படும் நெய், வெண்ணெய் உட்பட மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருள்களை கிலோ கணக்கில் எடுத்துச் செல்கிறார்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பப்பட்ட நெய் தரமில்லை என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இதனால் நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் புகழேந்திதான் என்று சொல்லி, அவருடைய சம்பளத்தில் மாதம் ரூ.20,000 பிடித்தம் செய்ய பொது மேலாளர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த இழப்புக்கு மேனேஜர் மட்டும் எப்படி பொறுப்பாவார்... முழுப்பழியையும் அவர் மீது சுமத்தியதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்’’ என்றனர் பெரும் கவலையுடன்.

சு.ஆ.பொன்னுச்சாமி
சு.ஆ.பொன்னுச்சாமி

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, "சில உயரதிகாரிகளின் நெருக்கடிக்கும், நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும் புகழேந்தி பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். இதற்குக் காரணமான மதுரை ஆவின் உயரதிகாரிகளைப் பணி நீக்கம் செய்வதோடு, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புகழேந்தியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஆவினில் நடக்கும் பல கோடி ரூபாய் முறைகேட்டுக்குக் காரணமான அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்கிவிட்டு நேர்மையானவரை அமைச்சராக்க வேண்டும். இதுவரை நடந்துள்ள ஆவின் முறைகேடுகள் அனைத்தையும் விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று பல முறை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை" என்றார்.

ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், "ஒரு நிறுவனத்தில் ஒருவர் மீது குற்றச்சாட்டு கண்டு பிடிக்கப்பட்டால் அவர் மீது உயர் அதிகாரிகள் சஸ்பெண்டு நடவடிக்கை எடுப்பது எல்லாத்துறையிலும் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்று. அது பொய்யான நடவடிக்கையாக இருந்தால் சட்டப்படி எதிர் கொண்டிருக்க வேண்டும். அல்லது தன் தற்கொலைக்கு இன்னார் காரணம் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். புகழேந்தியின் டைரியை ஆய்வு செய்ததில், ஆவின் நிர்வாகக் கணக்கு விவரங்களையும், தன் மகன் மீதான பாசத்தையும்தான் பதிவு செய்திருக்கிறார். அவர் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று விசாரித்ததிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. அவருடைய சஸ்பெண்டை ரத்து செய்யவும் உயரதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். அதற்குள் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இவர் தனிப்பட்ட முறையில் தற்கொலை செய்ததற்கு உயரதிகாரிகள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பதை அவர் குடும்பத்தினர்தான் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

புகழேந்தி
புகழேந்தி
ஈ.ஜெ.நந்தகுமார்
வலுக்கும் ஆவின் ஊழல் விவகாரம்...  இந்த லாப - நஷ்டக் `கணக்கு' புரியுதா?

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மதுரை ஆவின் உயரதிகாரி ஒருவர், "பால் உபரி பொருள்கள் கணக்கை கடந்த 5 மாதங்களாக சமர்ப்பிக்காமல் இருந்தார் புகழேந்தி. அதற்குப் பிறகு, கொடுத்த கணக்கிலும் 40 லட்ச ரூபாய் வித்தியாசம் இருந்தது. அந்தப் பணம் பால் உற்பத்தியாளர்களுக்குச் சேர வேண்டியது. இதனால் துறைரீதியாகத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது.

தவறு செய்தவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதுதான் உயர் அதிகாரியின் பணி. அதைத்தான் செய்திருக்கிறோம். இந்தக் காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவருக்குப் பொருளாதாரப் பிரச்னை இருக்கிறது. அதனால் கடந்த 5 மாதங்களாகப் பணியில் முழு ஈடுபாடு இல்லாமல் இருந்திருக்கிறார். எந்த வகையிலும் இதில் ஆவின் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இல்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு