Published:Updated:

`பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவர்கள் கோஷம்?!'- சர்ச்சையில் குமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம்

எஸ்.பி.யிடம் புகார் கொடுத்த பி.ஜே.பியினர்.
எஸ்.பி.யிடம் புகார் கொடுத்த பி.ஜே.பியினர்.

பாகிஸ்தானில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பிவிட்டு ஜாலியாக மாணவர்கள் செய்தார்கள் எனச் சொல்ல முடியுமா?

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவிலில் அமைந்துள்ளது நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை மாணவர்கள் கும்பல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட பி.ஜே.பியினர் இன்று நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பி.ஜே.பி நிர்வாகி தேவ் கூறுகையில், ``தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைந்திருக்கும் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வளாகத்தில் சில மாணவர்கள் இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

நூருல் இஸ்லாம் கல்லூரி
நூருல் இஸ்லாம் கல்லூரி

அந்த மாணவர்கள் மீது நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன், மாணவர்கள் ஜாலியாக சத்தம் போட்டிருக்கலாம் என அந்த மாணவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். பாகிஸ்தானில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பிவிட்டு ஜாலியாக மாணவர்கள் செய்தார்கள் எனச் சொல்ல முடியுமா.

மாணவர்கள் மத்தியில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளைப் பதிய வைப்பது வருத்தமளிக்கிறது. எனவே, இது சம்பந்தமான முழு விசாரணை நடத்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய மாணவர்கள் மீதும், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இது சம்பந்தமாக நூருல் இஸ்லாம் கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ``நேற்று மாலை வகுப்புகள் முடிந்த பிறகு சுமார் 25 மாணவர்கள் முகத்தை மூடிக்கொண்டு ஏதோ பேசிக்கொண்டு சென்றார்கள். அது குறித்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தோம். இன்றும் போலீஸார் விசாரணை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். நாங்களும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

பி.ஜேபியினர் எஸ்.பி. அலுவகலத்தில் புகார்
பி.ஜேபியினர் எஸ்.பி. அலுவகலத்தில் புகார்

சம்பந்தப்பட்ட மாணவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். இது குறித்து விசாரணை நடத்தும் காவல் துறையினருக்கும் நிர்வாகம் சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்" என்றார். இந்தச் சம்பவம் குறித்து கியூ பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``கேரள மாநிலத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோஷம் போட்டுள்ளனர். அந்த மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு