Published:Updated:

இளநீர் கடையில் வேலை கேட்ட எஸ்.ஐ... நேர்மையாகச் செயல்பட்ட அதிகாரிக்கு நேர்ந்த கதி?!

சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்
சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்

2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேர்மையாகச் செயல்படுவதால் இதுவரை 9 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேர்மையான அவரால் தொடர்ந்து காவல்துறையில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். சீருடைப் பணியாளராகச் சேர்ந்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய அவர், 2006-ம் ஆண்டு சிறைத்துறை காவலராகப் பணியில் சேர்ந்தார். சிறைச்சாலைக்குள் நடக்கும் தவறுகளுக்குத் துணை போகாததால் அவரால் அந்தப் பணியில் நீண்ட காலத்துக்கு நீடிக்க இயலவில்லை. இந்த நிலையில், 2011-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கிருஷ்ணகிரி காவல்நிலையத்தில் பயிற்சி முடித்த அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியமர்த்தப்பட்டார். நேர்மையாக மக்கள் பணியாற்றி காவல்துறைக்கு நற்பெயர் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்
சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்

நேர்மையாக இருந்ததால் பந்தாடப்பட்ட ராஜ்குமார்

குமரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாகக் கேரளாவில் இருந்து இறைச்சிக் கழிவுகள், மருந்துக் கழிவுகள் தமிழகத்துக்குள் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுவதை அறிந்து வேதனைப்பட்ட அவர், அத்தகைய லாரிகளை மடக்கிப் பிடித்தார். அந்த லாரிகளை விடுவிக்குமாறு அரசியல் புள்ளிகளிடம் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. அவர் மறுத்ததால் வேறு இடத்துக்குத் தூக்கி அடிக்கப்பட்டார் என்கிறார்கள் அவரை நன்கறிந்த நண்பர்கள்.

அவரைப் பழிவாங்கும் வகையில் சென்னையில் அமைந்தகரை, அம்பத்தூர், அண்ணாநகர், அடையாறு உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு அடுத்தடுத்து மாற்றினார்கள். ஆனாலும், தொடர்ந்து நேர்மையாக இருந்ததால், அவரின் இன்கிரீமென்ட் உள்ளிட்டவற்றையும் கிடைக்க விடாமல் அதிகாரிகள் இழுத்தடிப்புச் செய்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு சென்னையில் ஆயுதப்படைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார். பணியில் சேர்ந்த எட்டு ஆண்டுகளில் இப்படி அடுத்தடுத்து பந்தாடப்பட்டபோதிலும் ராஜ்குமார் தன் பணிகளில் மனநிறைவுடன் செய்து வந்ததாகத் தெரிவிக்கிறார்கள், அவருடன் பணியாற்றியவர்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றியபோது அவருடைய சம்பளத்தைக்கூட உரிய நேரத்தில் கிடைக்கவிடாமல் செய்துள்ளனர் அமைச்சுப் பணியாளர்கள் சிலர். இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிற புகாரும் எழுந்துள்ளது.

சீருடையில் ராஜ்குமார்
சீருடையில் ராஜ்குமார்

காட்டமான ஃபேஸ்புக் பதிவு

மூன்று குழந்தைகளின் தந்தையாகிய ராஜ்குமார், தன் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் மனைவியின் குடும்பத் தேவைகளுக்காகப் பணம் இல்லாமல் சிரமப்பட்டிருக்கிறார். அதனால் மனம் நொந்துபோன ராஜ்குமார் பணியில் இருந்து விலக முடிவெடுத்து கடந்த 15-ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் காவல்துறை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

அனுமதிக்கப்பட்ட 12 நாள் விடுப்பைக்கூட எடுக்க முடியாத அளவுக்கு சிரமத்தைச் சந்திக்கும் சீருடைப் பணியாளர்கள்.
ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்

அந்தப் பதிவில், "தலையிலும் முகத்திலும் இருக்கும் முடியைக்கூட நம் இஷ்டப்படி வைத்துக்கொள்ள முடியாத பணி; சொந்த பந்தங்களின் வீட்டு நல்லது கெட்டதில் கலந்துகொள்ள இயலாத பணி; பண்டிகைகளையோ நம் குடும்ப விழாக்களையோ தம் மனைவி மக்களோடு அனுபவிக்க முடியாத பணி; காலவரையற்ற பணி, வாராந்தர ஓய்வில்லா பணி, அரசு விடுமுறைகள் எதையும் அனுபவிக்க முடியாத பணி. இம்மாதம் யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது என உயர் அதிகாரிகளால் மாதம்தோறும் அறிக்கை அனுப்பப்படும் ஒரே பணி; அனுமதிக்கப்பட்ட 12 நாள் விடுமுறையைக்கூட நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி. அமைச்சுப் பணியாளர்களின் வேலையையும் நம்மீது சுமத்தி நாம் செய்ய தவறினாலோ மறுத்தாலோ நமக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளை வழங்கும் பணி. மொத்தத்தில் இவற்றையெல்லாம் வெளியே சொல்லக்கூட முடியாதபடி கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரே பணி.

ஃபேஸ்புக் பதிவு
ஃபேஸ்புக் பதிவு

இத்தனைக்கும் முன்வைக்கும் ஒரே சொல் 'கட்டுப்பாடான துறை'. ஏன் உயர் அதிகாரிகளுக்கு அந்தக் கட்டுப்பாடு பொருந்தாதா?” என்று குறிப்பிட்டிருந்த ராஜ்குமார், "விரும்பிப் பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன். இதுவரை ஆதரவு வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி. அதிகாரம் செலுத்த நினைத்தவர்களுக்கு வாழ்த்துகள்" என உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவரது சொந்த ஊரைச் சேர்ந்த 700 பேர், நேர்மையான காவல்துறை அதிகாரியான ராஜ்குமாருக்கு மீண்டும் பணி வழங்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அனுப்பியிருக்கிறார்கள். அத்துடன், கடைசியாக அவர் பணியாற்றிய தருவைகுளம் கிராம மக்களும் அவரை மீண்டும் தங்கள் கிராமத்தில் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

ராஜ்குமார் சப்-இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்ற பின்னர் எங்கள் கிராமத்தில் ரவுடிகளை ஒடுக்கினார். அதனால், அச்சமின்றி நடமாட முடிந்தது.
தருவைகுளம் கிராம மக்கள்

அதில், "தருவைகுளம் காவல்நிலையத்தில் ராஜ்குமார் பணியில் சேர்ந்த பிறகு, குற்றச் செயல்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்துக்கொண்டார். கடத்தல், மது விற்பனை, சீட்டு விளையாட்டு ஆகியவற்றைத் தடுத்து நல்ல நேர்மையாகப் பணியாற்றினார். அதனால் அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கூலி வேலை தேடும் சப்-இன்ஸ்பெக்டர்!

சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் குறித்து அவரது சொந்த கிராமமான மாங்குடியைச் சேர்ந்தவர்களிடம் கேட்டதற்கு, "சிறு வயது முதலாகவே நேர்மையான குணம் கொண்டவரான ராஜ்குமார், விருப்பப்பட்டு காவல்துறையில் சேர்ந்தார். ஆனால், அவருடைய நேர்மையைப் பாராட்ட வேண்டிய அதிகாரிகள் அவருக்குச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளனர்.

ராஜ்குமார்
ராஜ்குமார்
`லஞ்சம் வாங்கிக் கைதான காவல் ஆய்வாளர்!' -சூடமேற்றி தேங்காய் உடைத்த சமூக ஆர்வலர் #TamilnaduCrimeDiary

நேர்மையான அவர், எதையும் கேள்வி கேட்டுப் பகுத்தறிந்து செயல்படக்கூடியவர். ஆனால், லஞ்சம் பெற்றுக்கொண்டு செயல்படக்கூடியவர்களுக்கு அவரது செயல்பாடுகள் நெருக்கடியை ஏற்படுத்தியதால் அவர் மீது வன்மத்துடன் செயல்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாத சம்பளத்தை இதுவரை அவருக்குக் கிடைக்கவிடாமல் செய்ததால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டார். அதனால் எங்களிடம், `இப்படியே போனால் என்னையும் இந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்க வைத்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது’ என்று வேதனைப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்ததாகச் சொன்ன அவர், `நான் கூலி வேலை பார்க்கப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு இளநீர் கடையில் வேலை கேட்டிருக்கிறார். இளநீர் கடையின் உரிமையாளர், சப்-இன்ஸ்பெக்டரான அவருக்கு அந்த வேலையைத் தர மறுத்துவிட்டார். தூத்துக்குடிக்குச் சென்று மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அங்கும் அவரைச் சேர்க்கவில்லை. அதனால் சொந்தமாக பெட்டிக்கடை வைக்கத் திட்டமிட்டு வருகிறார். அவரை மீண்டும் வேலையில் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆதங்கப்பட்டார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் டு ஹீரோ..! - கனவை நனவாக்கிய `போஜ்புரி நாயகன்' ஓஜா

இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம், ''ராஜ்குமார் கடைசியாகப் பணியாற்றிய தருவைக்குளம் காவல் நிலையத்தில் விடுப்பு எதுவும் எடுக்காமல் கடந்த இருபது தினங்களாக வேலைக்கு வராமல் இருக்கிறார். அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடி தருவைக்குளம் காவல்நிலையத்துக்கு மாற்றலாகி வந்த பின்னர், அவருடைய சர்வீஸ் புத்தகம் உடனடியாக வந்து சேரவில்லை. அதன் காரணமாகவே அவருக்கு ஜனவரி மாதத்துக்கான சம்பளப் பட்டியல் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அமைச்சுப் பணியாளர்களின் தவற்றால் ஏற்பட்ட இந்தத் தாமதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர, ராஜ்குமார் பணிக்கு வராததற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை” என்று முடித்துக் கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு