Published:Updated:

`தமிழ்ப் பாடல் பாடுனா அடிப்பாங்களா?’- பெங்களூரு சம்பவத்தால் கொதிக்கும் இசைக்கலைஞர்கள்!

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

`எங்களை தலையில தூக்கி வச்சி கொண்டாடலைன்னாலும் பரவாயில்லை. அசிங்கப்படுத்தாதீங்க, அதை எங்களால தாங்கிக்க முடியாது’...

ஆர்ப்பாட்டத்தில் இசைக்கலைஞர்கள்
ஆர்ப்பாட்டத்தில் இசைக்கலைஞர்கள்

திரண்டிருந்த கூட்டத்துக்கு இடையே, மேடையில் உற்சாகமாக இசைக்கலைஞர்கள் பாடிக் கொண்டிருக்கின்றனர். திடீரென திபுதிபுவென மேடைக்கு ஏறும் ஒரு கூட்டம், மைக்கைப் பிடுங்கி வீசி, பாடிக்கொண்டிருந்தவர்களை கடுமையாகத் தாக்க ஆரம்பிக்கின்றனர். போலீஸார் முன்னிலையிலேயே இந்த அடாவடி அரங்கேறியிருக்கிறது. பெங்களூரில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ கடந்த சில நாள்களாக சமூக வளைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

தமிழ்ப் பாடல் ஒன்றை பாடகர்கள் பாட ஆரம்பிக்க, கூட்டத்துக்கு மத்தியிலிருந்து ஒரு கூட்டம் அடாவடியாக மேடைக்கு ஏறியிருக்கிறது

பெங்களூரு மார்க்கண்டேயன் நகர் பகுதியில் இருக்கிறது கங்கை அம்மன் கோயில். ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கோயில் நிர்வாகத்தினர் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் அந்தப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்க்கெஸ்ட்ராவில், அனைத்து மொழிப் பாடல்களும் பாடப்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால், தமிழ்ப் பாடல் ஒன்றை பாடகர்கள் பாட ஆரம்பிக்க, கூட்டத்துக்கு மத்தியிலிருந்து ஒரு கூட்டம் அடாவடியாக மேடைக்கு ஏறியிருக்கிறது. மைக்கைப் பிடுங்கி வீசி, இசைக்கருவிகளை உடைத்து பாடகர்களைத் தாக்க ஆரம்பிக்க, மேடையில் இருந்தவர்கள் நிலைகுலைந்து போயினர். கன்னட ரட்சக வேதிக அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்ப் பாடலை பாடியதற்காகத்தான் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்ற தகவல் மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்தத் தாக்குதல் இசைக்கலைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களிலும் இசைக்கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். அந்தவகையில், ஈரோட்டில் ஒன்றுதிரண்ட இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்வைக் கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இசைக்கலைஞரான அன்பு என்பவரிடம் பேசினோம். ``தமிழ்ப் பாடலைப் பாடியதற்காக இசைக்கலைஞர்கள் தாக்கப்பட்டது ஏற்க முடியாத விஷயம். இது கலைஞர்களை இழிவுபடுத்தும் செயல்.

ஆர்ப்பாட்டத்தில் இசைக்கலைஞர்கள்
ஆர்ப்பாட்டத்தில் இசைக்கலைஞர்கள்

அதேநேரத்தில், கன்னட இன உணர்வினாலும், தமிழர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற நினைப்பில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர்களுக்கும், கலைக்கும் மொழிபேதம் பார்க்கக் கூடாது. ஒரு கோமாளி மாதிரி எங்களோட எல்லா கவலைகளையும் மறந்து, ஒரு பொம்மை மாதிரி நாங்கள் மேடையில் ஏறி மக்களை உற்சாகப்படுத்துகிறோம். எங்களில் பல பேர் சாப்பாட்டுக்கு வழியில்லாம, வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாம மிகவும் நலிந்துபோய் இருக்கிறோம். எங்களை தலையில தூக்கி வச்சி கொண்டாடலைன்னாலும் பரவாயில்லை. அசிங்கப்படுத்தாதீங்க, அதை எங்களால தாங்கிக்க முடியாது” என்றார்.