Published:Updated:

விதிகளை மீறி பங்கு விற்பனை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியைச் சுழற்றியடிக்கும் சர்ச்சை...

விதிகளை மீறி பங்கு விற்பனை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியைச் சுழற்றியடிக்கும் சர்ச்சை...

Published:Updated:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

தமிழகத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடிவரும் வங்கிகளுள் ‘தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி’யும் ஒன்று. இந்த வங்கியின் பங்குகள் விற்பனை விவகாரத்தில், நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் விதிமுறைகளை மீறிவிட்டார் என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அவர்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதையறிய விசாரணையில் இறங்கினோம்.

கரிக்கோல்ராஜ்
கரிக்கோல்ராஜ்

‘தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி’ பங்குகள் விற்பனை விவகாரம் தொடர்பாக, அந்த வங்கியின் முன்னாள் இயக்குநர் ராஜ்குமார் நம்மிடம் பேசினார். “எங்கள் வங்கியின் நிர்வாகத்தை கவனிப்பதற்காக நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் சார்பில் மெர்க்கன்டைல் வங்கிக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ‘ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது’ என்பது வங்கிக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. 2008-ல் நாடார் மகாஜன சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று பொதுச் செயலாளரானார் கரிக்கோல்ராஜ். 2012-ம் ஆண்டு வரை மேற்கண்ட நிலைப்பாட்டை யாரும் மீறவில்லை. ஆனால், 2019-ம் ஆண்டு மெர்க்கன்டைல் வங்கியின் சுமார் 1,500 கோடி மதிப்பிலான போனஸ் பங்குகளை கரிக்கோல்ராஜ் அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்துவிட்டார். இதற்கு லஞ்சமாக கரிக்கோல்ராஜால் நியமிக்கப்பட்ட விருதுநகர், சிவகாசி நாடார் சங்கத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாகிகள் பெயரில் சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான 5,090 பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ராஜ்குமார்
ராஜ்குமார்

இந்த விவகாரத்தை மோப்பம் பிடித்த அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு எதிராகப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் மற்றும் இந்நாள் இயக்குநர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அந்த நோட்டீஸில், அவர்களுக்கு மொத்தமாக 160 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நோட்டீஸில், ‘விதிகளை மீறிய உங்களுக்கு 1,000 கோடி ரூபாய் வரை ஏன் அபராதம் விதிக்கக் கூடாது?’ என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது அமலாக்கத்துறை. இப்படி அமலாக்கத்துறையே ஆதாரபூர்வமாகக் கண்டறிந்த முறைகேடு குறித்துப் புகார் அளித்தால், நாடார் மகாஜன சங்கத் தேர்தலை ஒட்டி இந்தப் பிரச்னைகளைக் கிளப்புவதாக கரிக்கோல்ராஜ் நாடகமாடுகிறார்.

பங்கு விற்பனையில் மட்டுமல்ல... கரிக்கோல்ராஜ் தலைவராக இருக்கும் கல்வி நிறுவனங்களில், பணியாளர்கள் நியமனங்களிலும் சுமார் 3.5 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருக்கிறது என கல்லூரியின் பொருளாளரே கரிக்கோல்ராஜ் மீது புகார் அளித்துள்ளார். எங்களது தாய்ச் சங்கமான மதுரை நாடார் மகாஜன சங்கமும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது” என்றார் ஆதங்கத்துடன்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமறிய, நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜிடம் பேசினோம். “சங்கத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. சங்கம் தொடங்கிய காலம் முதல் தற்போதுவரை காசோலை முறையில்தான் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. சங்கத்தின் உறுப்பினர் யாராவது கணக்கு வழக்குகளைக் கேட்டால்கூட, அதை விரிவாகச் சமர்ப்பிக்கிறோம். மெர்க்கன்டைல் வங்கியின் சுமார் 15,000 பங்குகள் கண்ணன் ஆதித்தனாரின் மகன் ராமச்சந்திரன் ஆதித்தனார் பெயரில் இருக்கின்றன. இந்தப் பங்குகள் அனைத்தும் பொதுமக்களின் பங்குகள். அவற்றைப் பொதுமக்களுக்கே கொடுக்க வேண்டும் என்று எட்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்தேன்.

விதிகளை மீறி பங்கு விற்பனை!

வழக்கைத் திரும்பப் பெறக் கூறி 8 கோடி ரூபாய் வரை என்னிடம் பேரம் பேசினார்கள். நான் உடன்படவில்லை என்பதால் என்மீது கற்பனையாகப் புகார் சுமத்துகிறார்கள். அந்தப் புகார்களுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. 5,090 பங்குகளை லஞ்சமாகப் பெற்றதை யாராவது நிரூபித்தால் அந்தப் பங்குகளை அவர்களுக்கே கொடுத்துவிடுகிறேன். மக்களின் சொத்துகளைச் சிலர் அபகரிக்க நினைக்கிறார்கள். நான் தொடர்ந்த வழக்கு அதற்கு இடையூறாக இருக்கிறது. என்மீது அவதூறுகளைப் பரப்பி சங்கத்தைவிட்டு வெளியேற்றிவிட்டால், அவர்களின் திட்டம் எளிதாக நிறைவேறிவிடும். உண்மை அவர்கள் பக்கம் இருக்குமானால் சங்கத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெறட்டும்” என்றார் ஆவேசமாக.

பழைமை வாய்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, சர்ச்சைகளிலிருந்து விடுபட்டு தொடர்ந்து இயங்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம். அதேசமயம், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism