Published:Updated:

“மாட்டின சட்டத்தில் மலையளவு பிரச்னைகள்!” - தொடரும் சர்ச்சைகள்!

சர்ச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
சர்ச்சை

பிரச்னை

மிழகத்தில் மாடுகள் மற்றும் எருமைகளின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக, ‘தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டம்-2019’ (Tamilnadu Bovine Breeding Act-2019) என்ற சட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின்படி கால்நடை அமைச்சகத்தின் சார்பில் ஓர் அமைப்பு உருவாக்கப்படும். கால்நடை வளர்ப்போர் அனைவரும் இந்த அமைப்பின் கீழ் கொண்டுவரப்படுவர். இந்த அமைப்பு சொல்லும் விதிகளைத்தான் கால்நடை வளர்ப்போர் பின்பற்ற வேண்டும்.

“மாட்டின சட்டத்தில் மலையளவு பிரச்னைகள்!” - தொடரும் சர்ச்சைகள்!

“இந்தச் சட்டத்தில் குறிப்பாக ‘செயற்கைக் கருவூட்டல்’ (Artificial Insemination) குறித்து நிறைய சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்படும் அமைப்பிடம் சினை ஊசி உற்பத்தியாளர்கள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. அப்படியானால், சினை ஊசி உற்பத்தியாளர்களை அந்த அமைப்புச் சோதனைக்குப்படுத்த முழு அதிகாரம் வழங்கப்படும். சினை ஊசி உற்பத்தி என்பது, ஆயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் வர்த்தகம். சினை ஊசி தனியார்மயமானால், மாடு வளர்ப்போர் பாதிப்புக்குள்ளாவர். அதுவும் கிடேறிக்கன்றுகள் (பசுங்கன்றுகள்) மட்டுமே பிறக்கும் வகையில் சினை ஊசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், சினை ஊசியின் விலை உயர வாய்ப்பு உண்டு. இதனால், பாரம்பர்ய ரகக் கால்நடை வளர்ப்புக்குப் பெரும் பாதிப்பு உருவாகும். தலைமுறை தலைமுறையாக இந்த மாட்டு இனங்களைப் பராமரித்து வந்த மக்களிடமிருந்து அவற்றைப் பிரிப்பதற்கான முயற்சியாகத்தான் இந்தச் சட்டத்தைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“மாட்டின சட்டத்தில் மலையளவு பிரச்னைகள்!” - தொடரும் சர்ச்சைகள்!

இந்தச் சட்டத்தில் முழுமையாக வெளிநாட்டு மாட்டு இனங்களை மட்டும்தான் ஊக்குவிக்க வாய்ப்புள்ளது” என்று கடந்த சில நாள்களுக்கு முன்னரே தமிழகத்தில் கவலைக் குரல்கள் எழ ஆரம்பித்தன. அவர்கள் சொன்னதுபோல, ‘ஒரு சினை ஊசியின் விலை 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. இதில் மத்திய அரசு மானியமாக 200 ரூபாய்க் கொடுக்கிறது’ என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கார்த்திகேய
சிவ சேனாபதி, ஸ்ரீனிவாஸ்
கார்த்திகேய சிவ சேனாபதி, ஸ்ரீனிவாஸ்

இதுகுறித்துப் பேசிய திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவ சேனாபதி, “சினை ஊசி வர்த்தகத்தை விரிவாக்கத்தான் இந்தப் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று முதலில் இருந்தே தெரிவித்து வருகிறோம். இப்போது வந்திருக்கும் தகவலும் அதைத்தான் சொல்கிறது. ஒரு சினை ஊசியின் விலை சராசரியாக 500 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், விவசாயிக்கு அதில் 200 ரூபாய் மானியமாக வழங்குகிறது. கிட்டத்தட்ட 1 கோடி மாடுகளுக்குக் கணக்கு வைத்தால் 50,000 கோடி ரூபாய் வர்த்தகம் புழங்க வாய்ப்பிருக்கிறது. இது பாதியாகக் குறைந்தால்கூட வருடத்துக்கு 25,000 கோடி ரூபாய் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும். இந்தச் சட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளும் பிரச்னைகளும் இருக்கின்றன. இந்தச் சட்டம் ஜனநாயகத்துக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கும் எதிரானது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது அரசாங்கம். இதனால்தான் ஆரம்பத்திலிருந்தே இந்தச் சட்டத்தை எதிர்த்து வருகிறோம்” என்றார் வேகத்துடன்.

“மாட்டின சட்டத்தில் மலையளவு பிரச்னைகள்!” - தொடரும் சர்ச்சைகள்!

இதுபற்றிப் பேசிய வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ், “அதிகமானோர் இந்தச் சட்டத்தைப் பற்றித் தெரியாமல் பேசுகின்றனர். பொலிகாளைகளாகப் பயன்படுத்துவோர் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டிற்கு வைத்திருக்கும் மாட்டை நான் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தவில்லை என்று சொன்னால் எந்தப் பிரச்னையும் இருக்காது. முதலில் ஜல்லிக்கட்டு மாடுகள் இந்தச் சட்டத்துக்குள் அடங்காது. அதற்காகப் பிரச்னை இல்லாத சட்டம் இது என்று சொல்லவில்லை. இந்தச் சட்டத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்பியே ஆக வேண்டும். இந்தச் சட்டத்தில் காளைகளுக்கு மட்டும்தான் எல்லா விதிமுறைகளும் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. நன்றாக இருக்கும் காளைகள், நோய்வாய்ப்பட்ட பசுவுடன் இணையும்போது, புதிதாகப் பிறக்கும் கன்றுகள் குறைபாட்டுடன் பிறக்கும். இதுபற்றி எங்கேயும் பேசப்படவில்லை. இந்தச் சட்டத்தின் நோக்கம், ஒரு விவசாயியை மாட்டுச் சினை ஊசிக்குத் தனியாரைச் சார்ந்து இருக்க வைக்கும். புதிதாகக் கொடுக்கப்படும் சினை ஊசியில் பெண் கன்றுகள் மட்டுமே பிறக்கும்படி இருக்கப்போகிறது. இது நாட்டு மாட்டுக் காளைகளை முற்றிலும் காணாமல் போகச் செய்யும். ஆரம்பத்திலிருந்தே நாட்டு மாட்டுக் காளைகளை ஒழிக்க ஏதோ ஒரு சக்தி முயன்று வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தச் சட்டத்தைப் பார்க்கிறோம். இதற்குப் பின்னால் மிகப்பெரிய சினை ஊசி வர்த்தகம் ஒளிந்திருக்கிறது. மாட்டின இனப்பெருக்கச் சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. நடைமுறைக்கு வரும்போது அனைவரும் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். சட்ட ரீதியாகச் சந்திக்க வேண்டும்” என்றார் உறுதியுடன்.

மொத்தத்தில் இந்தச் சட்டத்தில் பிரச்னை இருக்கிறது என்பதுதான் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

“மாட்டின சட்டத்தில் மலையளவு பிரச்னைகள்!” - தொடரும் சர்ச்சைகள்!