Published:Updated:

`தஞ்சையை இழிவுபடுத்தலாமா?' - நடிகை வனிதா மீது புகார் கொடுத்த பா.ஜ.க, காங்கிரஸ்

புகார் அளித்த பி.ஜே.பி-யினர்
புகார் அளித்த பி.ஜே.பி-யினர்

நடிகை வனிதா அவரது பேச்சை உடனே திரும்பப் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும். காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளனர்.

நடிகை வனிதா விஜயகுமார், சமூக வலைதளத்தில் தஞ்சை குறித்து பேசியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளன பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள்.

புகார் அளித்த பி.ஜே.பி நிர்வாகி
புகார் அளித்த பி.ஜே.பி நிர்வாகி

பா.ஜ.க-வின் கலை இலக்கியம் மற்றும் இந்து அறநிலையத்துறையின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக இருப்பவர் ராஜா. இவர் நடிகை வனிதா சமூகவலைதளங்களில் தஞ்சையைப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். இதேபோல் இளைஞர் காங்கிரஸின் தஞ்சாவூர் பொதுச் செயலாளர் சிவா, பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் வனிதாவுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார்.

வனிதாவின் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய ராஜா என்பவர், ``தஞ்சாவூர் மக்களைப் பற்றி நடிகை வனிதா பேசியது சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதில் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்வார்கள். வீட்டுக்கு வீடு இது சகஜம், பெண்களே இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனப் பேசியிருக்கிறார்.

வனிதா மீது  புகார்
வனிதா மீது புகார்

தஞ்சை மாவட்டம், இந்து கோயில்கள் மற்றும் பாரம்பர்யமிக்க வரலாற்று பெருமைமிக்க ஊர். இதை இழிவுபடுத்தும்விதமாகவும், பெண்களை கொச்சைப்படுத்தும்விதமாகவும் பேசியுள்ளார். மொத்தத்தில் தஞ்சை மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தவறாகப் பேசியுள்ளார்.

சென்னை: `நான் மூன்று குழந்தைகளின் தாய்... சிங்கிள் மதர்!' - கலங்கிய நடிகை வனிதா

இதனால் தஞ்சையில் வசிக்கும் மக்கள் அனைவரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வனிதா அவரது பேச்சை உடனே திரும்ப பெற்று மன்னிபு கேட்க வேண்டும். காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வனிதாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவோம்" என்றார்.

பட்டுக்கோட்டையில் புகார் அளித்த காங்கிரஸ் நிர்வாகி
பட்டுக்கோட்டையில் புகார் அளித்த காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் பிரமுகர் சிவா கூறுகையில், ``தஞ்சை மண்ணுக்கும் மக்களுக்கும் கலாசாரம்மிக்க நீண்ட நெடிய வரலாறு உண்டு. இந்நிலையில் தஞ்சையில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மனைவிகள் இருப்பார்கள் என வனிதா பேசியிருக்கிறார். எனவே, அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் பேசி வருவதை வனிதா நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு