இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ-யின் 125-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ‘‘பொருளாதார வளர்ச்சி மீண்டும் திரும்பும்; இன்னும் பல சீர்திருத்தங்களைச் செய்யப்போகிறோம்’’ என்றார்.
ஆனால், சில நாள்களுக்கு முன்னர் வெளியான கடந்த நிதியாண்டின், கடைசிக் காலாண்டின் ஜி.டி.பி வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் நம்மை அதிரவைக்கின்றன. கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் கடந்த 69 காலாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான ஜி.டி.பி வளர்ச்சி இருக்கிறது. அதாவது, வெறும் 3.1% அளவுக்குக் குறைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘ஜி.டி.பி வளர்ச்சி இந்த அளவுக்குக் குறைந்துவிட்டதா...’ என எல்லோரும் அதிர்ச்சியுடனிருக்க, ‘இந்த வளர்ச்சிகூட சற்று அதிகரித்துக் காட்டப்பட்ட வளர்ச்சிதான்’ என்று பொருளாதார நிபுணர்கள் சொல்வது நம்மை மேலும் அதிரவைக்கிறது.
புள்ளிவிவரங்கள் மாற்றப்பட்டனவா?
பொதுவாக, ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் அதற்கு முந்தைய காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி எவ்வளவாக இருந்தது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும். ஒரு ஆண்டின் நான்கு காலாண்டுகளிலும் புள்ளிவிவரங்கள் வெளியிட்ட பிறகு மே மாத வாக்கில் பழைய புள்ளிவிவரங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட புதிய புள்ளிவிவரங்கள் அறிவிக்கப்பட்டு, அவையே இறுதியாகக் கணக்கில்கொள்ளப்படும். ஓராண்டுக் காலத்தில் சில புள்ளிவிவரங்கள் சற்று காலதாமதமாகக் கிடைத்திருக்கும்பட்சத்தில், அவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்யப்படுகிறது.
கடந்த காலத்தில் செய்யப்பட்டதுபோலவே, கடந்த மே மாதத்திலும் சில புள்ளிவிவரங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால், வழக்கத்தைவிட மிக அதிகமாக இந்தப் புள்ளிவிவரங்கள் மாற்றப்பட்டிருப்பதைத்தான் பொருளாதார நிபுணர்கள் இப்போது விமர்சிக்கிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகுழம்பும் கணக்கீடுகள்..!
‘‘2019-20-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ஏறக்குறைய ரூ.1.18 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இழப்பைச் சரிகட்ட இந்தத் தொகையை ஆண்டின் நான்கு காலாண்டுகளிலும் சராசரியாகப் பிரித்து கணக்கிட்டதால் புள்ளிவிவரங்கள் மாறியிருக்கின்றன’’ என்கிறார் எஸ்.பி.ஐ வங்கியின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் செளம்ய கந்தி கோஷ்.

கடந்த ஆண்டு நவம்பர் கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2019-20-ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 5 சதவிகிதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவிகிதமாகவும் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த பிப்ரவரி கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, முதல் காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 5.6 சதவிகிதமாகவும், இரண்டாம் காலாண்டில் 5.1 சதவிகிதமாகவும், மூன்றாம் காலாண்டில் 4.7 சதவிகிதமாகவும் இருந்ததாக மாற்றியமைக்கப்பட்டது.
``2019-20-ம் நிதியாண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் வெளியான புள்ளிவிவரங்கள் மாற்றப்படாமல் இருந்திருந்தால், நான்காம் காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 1.2 சதவிகிதமாக மட்டுமே இருக்கும்’’ என்கிறார் செளம்ய கந்தி கோஷ். ‘‘நான்காம் காலாண்டில் ஜி.டி.பி குறித்த புள்ளிவிவரங்கள் இப்போது முழுமையாகக் கிடைக்காமல் போயிருந்திருக்கலாம். இந்த விவரங்கள் முழுமையாகக் கிடைக்கும்பட்சத்தில் நான்காம் காலாண்டில் ஜி.டி.பி குறித்த புள்ளிவிவரங்கள் மாற்றியமைக்கப்பட வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் கேர் ரேட்டிங் நிறுவனத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் மதன் சப்னாவிஷ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிகரித்துக் காட்டப்பட்ட ரூ.2 லட்சம் கோடி..!
‘‘ `2019-20-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பரிவர்த்தனையான பொருள்களின் மதிப்பு ரூ.53.3 லட்சம் கோடி’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ரூ.2 லட்சம் கோடி அதிகரித்துச் சொன்னதன் விளைவாக நான்காம் காலாண்டில் கூடுதலாக வளர்ச்சி ஏற்பட்டதாகக் காட்டப் பட்டிருக்கிறது’’ என்கிறார் இந்திய அரசின் முன்னாள் முதன்மை புள்ளிவிவரத்துறை ஆலோசகராக இருந்த பிரனாப் சென்.

வளர்ச்சி இன்னும் குறையுமா?
கடந்த மார்ச் மாதத்தின் கடைசி சில நாள்களில்தான் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மற்றபடி அந்த மூன்று மாதங்களில் வர்த்தகம் இயல்பானநிலையிலேயே செயல்பட்டது. அப்படியிருந்தும், அந்தக் காலாண்டில் 3.1% அளவுக்கே பொருளாதாரம் வளர்ச்சி கண்டிருக்கிறது. எனில், ஊரடங்கு முழு அளவில் நடைமுறையில் இருந்த ஏப்ரல், மே மாதங்கள் கொண்ட ஜூன் காலாண்டில் நமது ஜி.டி.பி 3.1 சதவிகிதத்தைவிடக் குறைவாகவே வளர்ச்சிகாண வாய்ப்புண்டு. அந்தப் புள்ளிவிவரமாவது மாற்றப்படாமல் வெளியிடப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
டௌன்கிரேடு செய்த மூடீஸ்..!
ஜி.டி.பி வளர்ச்சி குறித்து புள்ளிவிவரங்கள் இப்படி இருக்கையில், நமது ஜி.டி.பி வளர்ச்சி குறித்த ரேட்டிங்கை மாற்றியிருக்கிறது சர்வதேச ரேட்டிங் நிறுவனமான மூடீஸ். ‘Baa2’ என்ற நிலையிலிருந்து ‘Baa3’ என்ற நிலைக்கு நமது ஜி.டி.பி வளர்ச்சியைத் தரமிறக்கியிருக்கிறது மூடீஸ். பொருளாதாரக் கட்டமைப்பு பலவீனமாக இருப்பது, அரசின் நடவடிக்கைகளை பலவீனமான முறையில் நடைமுறைக்குக் கொண்டுவருவது, சீர்திருத்த நடவடிக்கைகளை மெதுவாகக் கொண்டுவருவது ஆகிய காரணங்களை முன்னிறுத்தி மூடிஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் பிற ரேட்டிங் நிறுவனங்களான ஸ்டாண்டர்டு அண்ட் புவர் நிறுவனம் `BBB-’ என்ற நிலையையும், ஃபிட்ச் நிறுவனம் `BBB-’ என்ற நிலையையும் நமது பொருளாதார வளர்ச்சிக்கு அளித்திருக்கின்றன. `BBB-’ என்பது `பொருளாதாரம் சீராக இருக்கிறது’ என்பதைச் சொல்வது. ஆனால், மூடீஸ் தற்போது தந்திருக்கும் ‘Baa3’ என்பது நமது பொருளாதாரம் நெகட்டிவ்வாக இருக்கிறது’ என்பதைக் குறிக்கிறது. முதலீட்டுக்கான சூழல் குறித்த கடைசியான நிலையாக இருந்தாலும், இந்த நிலையிலும் முதலீடு செய்யலாம் என்பதையே அது சொல்கிறது.
ஊரடங்கு நடவடிக்கை கள் படிப்படியாக நீக்கப்படுவதால், அரசும் மக்களும் சேர்ந்து பாடுபட்டால், பொருளா தார வளர்ச்சி நிச்சயம் வேகமெடுக்கும்!