Published:Updated:

உய்குர் மக்களுக்காக எழுந்த முதல் ஆதரவுக் குரல்!

கடந்த முப்பது ஆண்டு களாக எவ்வித ஆதரவும் இல்லாமல், சீனாவின் அடக்குமுறையால் அல்லல்படும் உய்குர் இஸ்லாமியர்களுக்கு, முதல்முறையாக 22 மேற்கு நாடுகளிடமிருந்து பலமான ஆதரவுக்குரல் எழுந்துள்ளது.

பிரீமியம் ஸ்டோரி

அதில் ஒன்றுகூட இஸ்லாமிய நாடு இல்லை என்பதுதான் அவலம். அதேசமயம் அந்த ஆதரவுக் குரல், சீனாவின் இனஅழிப்பு நடவடிக்கைகளை எந்தளவுக்குக் கட்டுப்படுத்தும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

கடந்த 1949-ல் சீனா, ஜிங்ஜியாங் பிரதேசத்தை ஆக்கிரமித்தது. இதனால், காலங்காலமாக பாகிஸ்தான் - சீன எல்லையான உய்குர் பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்துவந்த இஸ்லாமிய மக்கள், தங்கள் உரிமைகளை இழந்தனர். கடந்த 2009-ல் ஏற்பட்ட இனக்கலவரத்துக்குப் பின் அவர்கள் நிலைமை மேலும் பரிதாபமானது. உய்குர் இஸ்லாமியர்களைப் பிரிவினைவாதிகளாக சித்திரித்த சீனா, அவர்கள்மீது அடக்குமுறை களை தீவிரப்படுத்தியது.

உய்குர் மக்களுக்காக எழுந்த முதல் ஆதரவுக் குரல்!

மேலும் சீனாவில் வாழும் இஸ்லாமியர் கள், ஐந்து ஆண்டுகளுக்குள் சீன கலாசாரத்துக்கு முழுமையாக மாறிவிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. ஜிங்ஜியாங் நகரில், இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது, ஆண்கள் நீளமாகத் தாடி வளர்ப்பது, மதரீதியான கல்வி கற்பது, நோன்பு இருப்பது ஆகியவை தடைசெய்யப் பட்டன. எதிர்ப்பாளர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் எந்த விசாரணையும் இல்லாமல், தனி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அப்படி சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை இருபது லட்சத்தைத் தாண்டிவிட்டது என்கின்றன மனித உரிமை அமைப்புகள்.

சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த மனித உரிமை கவுன்சிலின் 41-வது பொதுக்கூட்டத்தில் 22 மேற்கு நாடுகள் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில், முகாம்களில் உய்குர் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டித்தும், உடனடியாக முகாம்களை மூடக்கோரியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து உள்பட 22 நாடுகள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நடவடிக்கை உய்குர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான ஒரு கூட்டு முயற்சியாக இருந்தாலும், எதிர்பார்த்த தாக்கத்தை அது ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், துருக்கி உள்பட எந்த ஓர் இஸ்லாமிய நாடும் இதில் கையெழுத்திடவில்லை.

இதுகுறித்துப் பேசும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ‘‘முகாம்களில் அடைக்கப் பட்டிருப்பவர்களுக்கு இணையாக வெளியில் இருப்பவர்களும் சித்ரவதைகளை அனுபவிக்கிறார்கள். ஜிங்ஜியாங், கஷ்கர் மாகாணங்கள் திறந்தவெளி சிறைச்சாலை களைப்போல இருக்கின்றன. நூறு அடிக்கு ஒரு கண்காணிப்பு கேமரா, சோதனைச் சாவடிகள், காவலர்கள் என கெடுபிடிகள் ஏராளம். உய்குர் இஸ்லாமியர்கள், தெருக்களில் சகஜமாக நடமாடவோ சுதந்திரமாகப் பேசவோ முடியாது. பள்ளிக் குழந்தைகளும்கூட விசாரணைக்கு உள்ளாகின்றனர். மசூதிகளில் தொழுகையைக்கூட கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிக்கின்றன. கொடுமையின் உச்சகட்டமாக உய்குர் குடும்பங் களிலிருந்து அவர்களின் குழந்தைகளை தனியாகப் பிரித்து உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கவைத்து, சீனக் கலாசாரம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதுவரை 400 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்’’ என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தனை துன்பங்களை அனுபவிக்கும் உய்குர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி நேரடியாக உதவ யாரும் முன்வரவில்லை. அரசியல், பொருளாதார ரீதியாக சீனா திருப்பித்தாக்கும் என்பதால், பிற நாடுகள் அடக்கிவாசிக்கின்றன. குறிப்பாக மியான்மர், காசா, ஆப்கானிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு பொங்கி எழுந்த இஸ்லாமிய நாடுகள், உய்குர் விஷயத்தில் தொடர்ந்து மௌனம் காக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஓர் இஸ்லாமிய நாடுகூட சீனாவை எதிர்த்து அறிக்கை வெளியிடவில்லை.

இஸ்லாமிய நாடுகளின் விசுவாசத்துக்குப் பின்னால் இருப்பது வர்த்தக நலன் மட்டுமே. மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு சீனாதான் மிகப்பெரிய கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதியாளர். தெற்காசிய இஸ்லாமிய நாடுகளின் உற்பத்திப் பொருள்களுக்கு சீனா மிகப்பெரிய சந்தை. இப்படி பல இஸ்லாமிய நாடுகள் சீனாவை சார்ந்திருக்கின்றன. பாகிஸ்தானின் நிலைமை இன்னும் பரிதாபம். பில்லியன் கணக்கில் உதவும் சீனாவை அது பகைத்துக்கொள்ள முடியாததால், இந்தக் கொடுமையையெல்லாம் கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது.

சீனாவின் மனித உரிமை மீறல்களை ரஷ்யாவும் கண்டுகொள்ளவில்லை. சீனா மீது வர்த்தகப் போர் தொடுத்திருக்கும் அமெரிக்கா வும், 22 நாடுகளின் கூட்டறிக்கையில் கையெழுத்திடவில்லை. தங்களது தேசிய, புவி, வர்த்தக, அரசியல் நலன்களுக்கு ஏற்றவாறு உலக நாடுகள் உய்குர் பிரச்னையை அணுகுவ தால், அது சீனாவுக்கு சாதகமாக இருக்கிறது.

சீனாவுக்கு எதிரான 22 நாடுகளின் குரல், எதிர்காலத்தில் வலுப்பெறுமா என்பது தெரியாது. ஆனால், உய்குர் மக்களுக்காக எழுந்திருக்கும் முதல் ஆதரவுக் குரல் நம்பிக்கையை விதைத்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு