Published:Updated:

மர்மங்களின் கதை: மரண தண்டனைக்கான வயது என்ன தெரியுமா? | பகுதி-13

மர்மங்களின் கதை
மர்மங்களின் கதை

அநாதையாக கிடந்த சைக்கிள், சுற்றி யாரும் இல்லை. சந்தேகம் கொண்ட சிறுவன் சைக்கிளுக்கு அருகே செல்கிறான். அதிர்ச்சி. சைக்கிளுக்கு கீழே இரண்டு பெண் குழந்தைகள் சடலங்களாக கிடக்கின்றனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1944ம் ஆண்டு, மார்ச் 24

தென் கெரொலைனா மாகாணத்தில் அல்கொலு என்கிற கிராமம். பள்ளி முடிந்து குழந்தைகள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரம். பெட்டி ஜுன் பின்னிக்கர் மற்றும் மேரி எம்மா தேம்ஸ் என்ற இரு பெண் குழந்தைகள் மேரிபாப்ஸ் மலரை தேடி சென்று கொண்டிருந்தனர். பெட்டிக்கு வயது 11, மேரிக்கு வயது 7. அருகேயே மரம் அறுக்கும் ஆலை ஒன்று இருந்தது. கிராமம் ஒரு ரயில் பாதையால் பிரிக்கப்பட்டிருந்தது. ரயில் பாதைக்கு இப்புறத்தில் வெள்ளையின குடும்பங்களும் அப்புறத்தில் கறுப்பின குடும்பங்களும் வசித்து வந்தனர்.

பெட்டி ஜுன் பின்னிக்கர், மேரி எம்மா தேம்ஸ்
பெட்டி ஜுன் பின்னிக்கர், மேரி எம்மா தேம்ஸ்
Twitter

மேரிக்கும் பெட்டிக்கும் மேரிபாப்ஸ் மலர் எதுவும் தட்டுப்படவில்லை. தூரத்தில் ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியரும், அவனது தங்கை ஏமியும் வந்து கொண்டிருந்தனர். பெட்டியும் மேரியும் அவர்களிடம் சென்று மேரிபாப்ஸ் மலர் எங்கு கிடைக்குமென கேட்டனர். அவர்களுக்கு தெரியவில்லை. ஜார்ஜ் ஸ்டின்னியையும் ஏமியையும் கடந்து அவர்கள் சென்றனர். மரங்களை ஏற்றிய ட்ரக் ஒன்று அவர்களை கடந்து சென்றது.

மாலையிலிருந்து ஊர் பரபரப்படைந்தது. பெட்டியும் மேரியும் காணவில்லை. 100லிருந்து 200 பேர் குழு குழுவாக ஊர் முழுக்க இரு பெண் குழந்தைகளையும் தேடி அலைந்தனர். ஸ்டின்னி குடும்பத்துக்கு தகவல் சென்று சேர்ந்தது. இரு பெண்களையும் தானும் ஏமியும் கண்ட தகவலையும் குடும்பத்தில் சொன்னான் சிறுவன் ஜார்ஜ் ஸ்டின்னி. தந்தையுடன் சேர்ந்து இருவரையும் தேடிக் கண்டுபிடிக்க புறப்பட்டான். இரவு கவிந்தது. நம்பிக்கைக்குரிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. தேடுதல் முயற்சியும் தொடர்ந்து கொண்டிருந்து. விடியும் நேரத்தில் முக்கியமான திருப்பம் நேர்ந்தது.

ஸ்டின்னி ஜூனியர்
ஸ்டின்னி ஜூனியர்

ஒரு சிறுவன் ஆலைமுதலாளியின் காட்டுப்பகுதி அருகே செல்லும்போது முக்கியமான விஷயம் கண்ணில் தட்டுப்பட்டது. அநாதையாக கிடந்த சைக்கிள்! சுற்றி யாரும் இல்லை. சந்தேகம் கொண்ட சிறுவன் சைக்கிளுக்கு அருகே செல்கிறான். அதிர்ச்சி. சைக்கிளுக்கு கீழே இரண்டு பெண் குழந்தைகள் சடலங்களாக கிடக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெட்டி, மேரி!

உடல்கள் கூராய்வுக்கு கொண்டு செல்லப்பட்டன. போராட்டம் எதுவும் நடந்தது போன்ற அடையாளங்கள் உடலில் இல்லை. மேரியின் வலது புருவத்துக்கு மேல் மண்டையோடு வரை செல்லுமளவு ஆழத்துடன் வெட்டு இருந்தது. பெட்டியின் தலை பலமுறை தாக்கப்பட்டிருக்கிறது. அவளின் பின் மண்டை எலும்புகளாக உடையுமளவுக்கு தாக்கப்பட்டிருந்தாள். மதிய வேளை. எட்டு வயதான ஏமி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். வேகமாக இரண்டு கறுப்பு நிற கார்கள் வந்து வீட்டுக்கு வெளியே நின்றன. அதற்குள்ளிருந்து வெள்ளை இனத்தவர் சிலர் இறங்கி வீட்டை நோக்கி வந்தனர். ஏதோ நடக்கப் போகிறது என்ற பயத்தில் ஏமி ஓடி ஒளிந்து கொண்டாள். வீட்டுக்குள் நுழைந்தவர்கள் ஜார்ஜ்ஜையும் ஜானியையும் பிடித்து கைவிலங்கு பூட்டினர். தரதரவென இழுத்துச் சென்றனர்.

ஸ்டின்னி ஜூனியரையும் ஜானியையும் அழைத்து சென்ற அதிகாரிகள் ஜானியை மட்டும் நெடுஞ்சாலை ஒன்றில் இறக்கி விட்டனர். ஸ்டின்னி ஜூனியரை விடவில்லை.

ஜார்ஜ் ஸ்டின்னியின் அப்பாவுக்கு ஆலையில் வேலை பறிக்கப்பட்டது. வீட்டிலும் நிம்மதி தொலைந்திருந்தது. ஸ்டின்னி ஜூனியரின் குடும்பத்துக்கு இன்னொரு தகவல் கிடைத்தது. ரயில்பாதைக்கு அடுத்த பக்கத்தில் இருந்து வெள்ளையின குடும்பங்கள் கும்பலாக ஸ்டின்னியின் வீட்டை நோக்கி வருவதாக தகவல். சிக்கினால் உயிர் இருக்காது. அகோரமாக துடிக்க துடிக்க உயிர் பறிக்கப்படும். அதிகாரம் நிறைந்தவர்கள் செய்யும் அராஜகத்துக்கு எதிர்கேள்வி இருப்பதில்லை. கொஞ்ச நஞ்ச பொருட்களை எடுத்துக் கொண்டு, அத்தனை காலம் வாழ்ந்திருந்த வீட்டை விட்டு ஸ்டின்னியின் குடும்பம் தப்பியோடியது.

செய்தி அடுத்த நாள் அல்கொலு கிராமத்தையும் தாண்டியது. ‘இரண்டு சிறுமிகள் கொலை, ஒரு சிறுவன் கைது’ என நாளேடுகள் பரபரப்பாக தலைப்புச் செய்திகள் தீட்டின. ஸ்டின்னி ஜீனியரை கைது செய்த அதிகாரி பேட்டிகளும் கொடுத்திருந்தார். பெட்டியுடன் உடலுறவு கொள்ள விரும்பியதாகவும் அதை பெற்றோரிடம் சொல்லி விடுவோம் என சிறுமிகள் கூறியதில் கோபமடைந்து ஸ்டின்னி ஜீனியர் இரும்புத் தடியை எடுத்து பலமுறை இருவரையும் தாக்கி கொன்றதாக சொன்னார் அதிகாரி. மேலும் கொலை செய்த இடத்தையும் ஸ்டின்னி ஜீனியர் அதிகாரிகளை அழைத்து சென்று காட்டியிருக்கிறான்.

பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது. மூன்று மணி நேரத்துக்குள்ளாகவே விசாரணை முடிந்தது. தீர்ப்பை தீர்மானிக்க வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

மகன் இருக்குமிடம் பெற்றோருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. நாட்கள் ஓடின. நீதிமன்ற விசாரணை நெருங்கியது. ஸ்டின்னி ஜீனியரின் பெற்றோர் கடவுளிடம் வேண்டிக் கொண்டனர். ஏழைகளான அவர்களால் அவ்வளவுதான் முடிந்தது. 31 நாட்கள் கழிந்தன. ஸ்டின்னி ஜூனியர் நீதிமன்றத்துக்கு வந்தான். நீதிமன்ற அறையில் 1500 பேர் இருந்தனர். ஸ்டின்னி ஜூனியரை சுற்றி பாதுகாப்புக்கு காவலர்கள் நின்று கொண்டனர்.

மரண தண்டனை

`சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மின்சாரம் பாய்ச்சப்பட்டு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்படுகிறது.’ மீண்டும் சிறைக்குள் ஸ்டின்னி ஜூனியர் அடைக்கப்பட்டான். கொல்லப்படுவதை விட கொடியது கொல்லப்படுவதற்காக காத்திருப்பது. ஸ்டின்னி ஜூனியர் காத்திருந்தான்.

மின்சார நாற்காலி
மின்சார நாற்காலி
Twitter

1944ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி அதிகாலை 7.30 மணி

கோடு போட்ட உடை அணிந்து ஸ்டின்னி ஜூனியர் வந்தான். அவன் கையில் பைபிள் இருந்தது. உருவத்தில் மிகவும் சிறியவனாக இருந்தான். அங்கு வேலை பார்க்கும் நபர் ஸ்டின்னி ஜூனியரின் ஒல்லியான காலில் மின்சாரத் தகடு மாட்ட திணறினார். ஒரு வழியாய் மின்சார நாற்காலியில் ஸ்டின்னி ஜூனியர் அமர வைக்கப்பட்டான்.

கடைசியாக பேச வேண்டுமா என அதிகாரி கேட்டார்.

ஸ்டின்னி ஜுனியர் ‘இல்ல சார்’ என்றான்.

உன் குற்றத்தை பத்தி எதுவும் சொல்ல விரும்பலையா என மருத்துவர் கேட்டார்.

மீண்டும் ‘இல்ல சார்’ என்றான்.

தண்டனை நிறைவேற்றுபவர் ஸ்விட்சை போட்டார். 2400 வோல்ட் மின்சாரம் அந்த சிறிய உடலில் பாய்ந்தது.

ஸ்டின்னி ஜூனியர்
ஸ்டின்னி ஜூனியர்
Twitter

மின்சாரம் உயிரை உடலிலிருந்து உதறிக் கொண்டிருந்தது. தலையில் கவிழ்த்து வைக்கப்பட்ட மின்சார தொப்பி நழுவி விழுந்தது. ஸ்டின்னி ஜூனியரின் கண்கள் திறந்திருந்தன. பார்வை நிலைகுத்தியிருந்தது. கண்ணீர் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்தது. மீண்டும் ஸ்விட்ச் போடப்பட்டது. 1400 வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. பிறகு ஒரு 500 வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. அறையை சதையின் நாற்றம் நிரப்பியது.

மூன்றே முக்கால் நிமிடங்கள். ஸ்டின்னி ஜூனியர் பிணமாகியிருந்தான்.

2013ம் ஆண்டு. மேனிங் நகரம்.

அங்கு ஒரு வழக்கறிஞர் இருந்தார். அவரின் பெயர் மேட் பர்ஜஸ். வயது 24. புது வழக்கறிஞர். தவறாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு கறுப்பினத்தவருக்கு வாதாடினார். இன ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக மேட் கொண்டிருக்கும் ஆர்வத்துக்கு தீனி போட மூத்த வழக்கறிஞர் ஸ்டீவ் மெக்கன்ஸி விரும்பினார். காலத்தால் புதைக்கப்பட்ட ஒரு வழக்கை மேட்டுக்கு அறிமுகப்படுத்தினார். பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டனை பெற்ற கறுப்பினத்தவர் ஒருவருக்கு ஆதரவாக வழக்காடிய மேட் பர்ஜஸ்ஸுக்கு ஸ்டின்னி ஜுனியரின் வழக்கு முக்கியமான வெளியை திறந்துவிட்டது.

ஸ்டின்னி ஜூனியர் கைரேகை
ஸ்டின்னி ஜூனியர் கைரேகை
Twitter

ஸ்டின்னி ஜூனியரின் வழக்கில் அவரின் சகோதர சகோதரிகளை தவிர்த்து மேட் பர்ஜஸ்ஸுக்கு பெரிய உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை. ஸ்டின்னி ஜூனியர் கொல்லப்பட்டு 70 வருடங்கள் ஆகிவிட்டன. மரபணு ஆதாரங்களுக்கு கூட வாய்ப்பில்லை. ஸ்டின்னி ஜூனியரை அத்தனை வேகமாக கொல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியுடன் வழக்கின் கோப்புகள் தூசு தட்டி மீண்டும் எடுக்கப்பட்டன. Carmen Mullen என்ற நீதிபதி தலைமையில் நீதிமன்றம் கூடியது. ஸ்டின்னி ஜூனியரின் சகோதரர் மற்றும் சகோதரிகள் சாட்சியங்கள் அளித்தனர். இரண்டு நாட்கள் விசாரணை நடந்தது.

தீர்ப்பை படித்தார் நீதிபதி Mullins.

கொடூரமான அநீதி

‘எல்லா காலங்களிலும் நம்முடைய வரலாறுகளை மீண்டும் அவதானித்து இழைக்கப்பட்ட அநீதிகளை பரிசீலிக்க காலம் நம்மை வேண்டுகிறது’ என தொடங்கிய நீதிபதி, ‘ஒரு தனி நபருக்கு சட்ட ரீதியாக கொடுக்கப்படும் உரிமை பறிக்கப்படுவதை விட பெரும் அநீதி இருக்க முடியாது என நான் கருதுகிறேன்’ என்றவர் ‘ஸ்டின்னி ஜூனியருக்கான தீர்ப்பை வெள்ளை இன நீதிக்குழுவின் முடிவுக்கு விட்டது தவறு’ என்றும் ‘கொல்லப்பட்ட சிறுமிகளுடன் தொடர்பு இருக்கும் நபரை கொண்டே அந்த நீதிக்குழு அமைக்கப்பட்டது மாபெரும் பிழை’ என்றும் அறிவித்து, ஸ்டின்னி ஜூனியரின் வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என அறிவித்து, ‘அவருக்கு இழைக்கப்பட்டது கொடூரமான அநீதியே’ என தீர்ப்பை வாசித்து முடித்தார்.

ஸ்டின்னி ஜூனியர் கல்லறை
ஸ்டின்னி ஜூனியர் கல்லறை
Twitter

ஸ்டின்னி ஜூனியரின் குடும்பம் கண்ணீர் மல்கியது. நீதிபதி Mullins தீர்ப்பு வழங்கும்போது ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டார். “கொல்லப்பட்ட சிறுமிகளுடன் தொடர்பு இருக்கும் நபரை கொண்டே அந்த நீதிக்குழு அமைக்கப்பட்டது மாபெரும் பிழை”. யார் அந்த நபர்? அவருக்கும் சிறுமிகளுக்கும் என்ன தொடர்பு? நீதி சென்று துழாவி பார்க்காத ஆதிக்கச்சமூகத்தின் இருண்ட அறைகள் அவை. `அந்த நபரின் பெயர் ஜார்ஜ் பர்க் சீனியர்'.

1944ம் ஆண்டில் அல்கொலு கிராமத்தில் ஜார்ஜ் பர்க் என்ற பெயரில் இருவர் இருந்தனர். ஒருவர் ஜார்ஜ் பர்க் சீனியர். இன்னொருவர் ஜார்ஜ் பர்க் ஜூனியர். சீனியரின் மகன். ஜார்ஜ் பர்க் சீனியர்தான் அல்கொலு கிராமத்தில் இருந்த மர அறுவை நிறுவனத்தின் முதலாளி. ஸ்டின்னி ஜூனியரையும் ஏமியையும் கடந்து பெட்டியும் மேரியும் சென்ற போது, அவர்களின் பக்கம் ஒரு ட்ரக் சென்றிருக்கிறது. அந்த ட்ரக்கை ஓட்டிச் சென்றவர் வேறு யாருமல்ல, ஜார்ஜ் பர்க் ஜூனியர்.

மர்மங்களின் கதை | அழைத்த சாமியார்... கூட்டுத் தற்கொலை செய்துகொண்ட மக்கள்: என்ன நடந்தது? | பகுதி 12

மரங்களை இறக்கிப் போட ட்ரக்கில் சென்று கொண்டிருந்தவன், சிறுமிகளை பார்த்ததும் ட்ரக்கை நிறுத்தியிருக்கிறான். அவர்களை ஏற்றி செல்ல கேட்டிருக்கிறான். சிறுமிகளும் ஏறியிருக்கின்றனர். அதற்கு பின் அவர்கள் என்னவானார்கள் என எவருக்கும் தெரியவில்லை. சமூகம் கொண்டிருக்கும் ஆதிக்க இருளுக்குள் புகுந்து ஜார்ஜ் பர்க் சீனியர் நீதிக்குழுவில் இடம்பெறுகிறார். வெள்ளை இனத்தவர் மட்டுமே இடம்பெற்றிருந்த நீதிக்குழுவின் பரிந்துரையில் பத்தே நிமிடங்களில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது.

இறுதி நாள் வருகிறது. ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு சமூகத்தில் நீதி என அழைக்கப்படும் பொய்யில் ஸ்டின்னி ஜூனியர் இணைக்கப்பட்டு பொசுக்கப்படுகிறான்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு