2019 ஸ்பெஷல்
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

டாப் 10 பிரச்னைகள் - மாசு சூழ் உலகு

மாசு சூழ் உலகு
பிரீமியம் ஸ்டோரி
News
மாசு சூழ் உலகு

கோவை சதாசிவம். சூழலியல் செயற்பாட்டாளர்

2019-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப்பற்றி பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

ந்த ஆண்டு தமிழகம் சந்தித்த சுற்றுச்சூழல் சவால்கள் உண்மையில் மிரளவைப்பவை. ஆண்டின் தொடக்கத்தில் சென்னைக் கடற்கரையில் தேங்கிக்கிடந்த 22 டன் கழிவுகளிலிருந்து நம் சூழலியல் பற்றிய பார்வைகளை விரியச் செய்யலாம்.

top 10 problem
top 10 problem

மூன்றாவது கட்ட அடையாறு மீட்டெடுப்புப் பணி கடந்த நவம்பரில் தொடங்கியது. ஆனால், இன்றளவும் அடையாற்றில் கொட்டப்படும் கழிவுகளுக்கு அரசு தீர்வு கண்டபாடில்லை. தண்ணீரைத் தேடி நகரங்களுக்கு வெளியே பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஓடிய தமிழக அரசு, நகருக்குள்ளேயே அமைந்துள்ள நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவு, ரயிலில் தண்ணீர் கொண்டுவரவேண்டிய நிலை.

காலநிலை மாற்றம் ஏற்படுத்திய விளைவுகளை உணராமல், 2011-ம் ஆண்டு மாதவ் காட்கில் தலைமையில் வெளியான மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு அறிக்கையை மதிக்காமல் நடந்துகொண்டதன் விளைவாகத் தமிழகமும் கேரளமும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கித் தவித்தது இன்னொரு சோகம்.

டாப் 10 பிரச்னைகள் - மாசு சூழ் உலகு

இன்னமும் மேற்கு மலைத்தொடரைப் பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுத்த பாடில்லை. மீண்டும் வழக்கம்போல் லட்சக்கணக்கான மரங்கள் அரசு அனுமதியோடு வெட்டப்பட, வெள்ளச் சேதங்களும் நிலச்சரிவுகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. நீலகிரியில் ஆபத்திலுள்ள நிலப்பகுதிகளின் எண்ணிக்கை முன்னர் 233-ஆக இருந்தது. இந்த ஆண்டில் மேலும் 50 நிலப்பகுதிகளில் புதிதாக நிலச்சரிவு ஆபத்து உருவாகியிருக்கிறது. எண்ணிக்கை 283-ஆக உயர்ந்துவிட்டது.

லட்சக்கணக்கான பழங்குடியினக் குடும்பங்களை அவர்களின் பூர்வீக நிலத்திலிருந்து துரத்தியடிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவும் அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நாடுதழுவிய போராட்டமும் தமிழகப் பழங்குடியின மக்களைப் பெரிய அளவில் பாதித்தது. இன்றைய தேதிவரை, வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருப்பது வேதனையான உண்மை.

மாசு சூழ் உலகு
மாசு சூழ் உலகு

டெல்லியின் காற்றில் மாசுக் காரணிகளின் அளவு 150-க்கும் குறைவாக இறங்கிக் கொண்டிருந்த வேளையில், சென்னையில் அந்த அளவு 250-க்கும் அதிகமாக எகிறிக்கொண்டிருந்தது. நாட்டின் தலைநகரைவிடத் தமிழகத் தலைநகர் மோசமாக மூச்சுத்திணறிக்கொண்டிருந்தது. ஆனால், மாசுபாடு அவ்வளவு தீவிரமாக இல்லையென்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்கள் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும்.

உலகம் முழுக்கக் காலநிலை மாற்றத்திற்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டு மென்று நடந்த போராட்டங்களின் தாக்கம் சென்னையிலும் எதிரொலித்தது. சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் குழந்தைகளும் கடந்த செப்டம்பர் மாதம் ‘அரசுகளே, எங்கள் எதிர்காலத்தை மூழ்கடித்துவிடாதீர்கள்’ என்ற கோஷத்தோடு வீதியிலிறங்கிக் காலநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அது மாநிலம் முழுக்கப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2019-ம் ஆண்டு சுற்றுச்சூழல்மீது மக்களுடைய அக்கறை அதிகமாகியுள்ளதை, அதிகமாகியுள்ள சூழலியல் போராட்டங்கள் உணர்த்துகின்றன. இந்தப் போக்கு நம்பிக்கையை விதைக்கிறது. இந்தப் போராட்டங்களில், எதிர்காலத்திற்கான வெளிச்சம் தெரிகிறது!