Published:Updated:

`தடையை மீறும் சுற்றுலாப் பயணிகள்..!'- பாபநாசம் தலையணையில் குளியல் ஆபத்து

தடை செய்யப்பட்ட அறிவிப்பு
தடை செய்யப்பட்ட அறிவிப்பு ( எல்.ராஜேந்திரன் )

நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணைப் பகுதியில், குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் பாபநாசம், சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் முக்கிய இடமாக அமைந்துள்ளது. அங்குள்ள தலையணை, சிவன் கோயில், அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம் அணை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம்காட்டிவருகிறார்கள்.

சமையல் செய்யும் இளைஞர்கள்
சமையல் செய்யும் இளைஞர்கள்

பாபநாசம் பகுதிக்கு உள்ளூர் மக்கள் மட்டும் இல்லாமல், பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும் வருகிறார்கள். குறிப்பாக, விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகிறார்கள். பாபநாசம் வரும் சுற்றுலாப் பயணிகள், அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்கிறார்கள். ஒரு சிலர், தலையணைக்குச் சென்று குளிக்கிறார்கள்.

பாபநாசம் தலையணைப் பகுதியில் குளிப்பவர்கள், அதில் உள்ள ஆபத்தை உணராததால் ஆழமான பகுதிக்கு நீந்திச் சென்று உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. அந்தப் பகுதி ஆபத்து மிகுந்தது என காவல்துறை சார்பாக எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்ட பின்னரும் உயிரிழப்புகள் தொடர்ந்தன.

ஆபத்தை உணராமல் குளியல்
ஆபத்தை உணராமல் குளியல்

அதனால், தலையணையில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதுடன், உள்ளே நுழையும் வாயிலில் கேட் அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி கொடுக்கப்படாததால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன.

தற்போது, தலையணைப் பகுதிக்கு இளைஞர்கள் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். சுற்றுச் சுவரை தாண்டிக் குதித்து உள்ளே நுழையும் இளைஞர்கள், அங்கேயே சமைத்துச் சாப்பிடுவது, மது அருந்துவது ஆகிய செயல்களில் ஈடுபடுவதுடன், ஆபத்தை உணராமல் தலையணையில் குளிக்கவும் செய்கிறார்கள்.

தடையை மீறும் சுற்றுலாப் பயணிகள்
தடையை மீறும் சுற்றுலாப் பயணிகள்

தலையணைப் பகுதியில் ஆழம் அதிகம் இருப்பதுடன், சில இடங்களில் நீர்ச்சுழல்களும் இருக்கின்றன. அதனால், நீச்சல் தெரிந்தவர்கள்கூட வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்குகிறார்கள். தற்போது, தடையை மீறிக் குளிக்கும் இளைஞர்களைக் கட்டுப்படுத்த, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு