Published:Updated:

`திருப்பதி சென்ற ஏழையும் பணக்காரனும்..!’ - நடிகர் சிவகுமாரைச் சிக்கவைத்த ஜரகண்டி கதை

நடிகர் சிவகுமார்
நடிகர் சிவகுமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் சிவகுமார் மீது ஆந்திர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி சுப்பிரமணிய ரெட்டிக்கு ஏப்ரல் மாதம் 26-ம் தேதி, தமிழ்மாயன் என்பவர் இ-மெயில் மூலமாக வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். கருத்தரங்கு ஒன்றில் திரைப்பட நடிகர் சிவகுமார் பேசியிருந்த 6 நிமிடக் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. அதை ஆய்வுசெய்த விஜிலென்ஸ் அதிகாரி, ``நடிகர் சிவகுமார் திருப்பதி கோயில் குறித்து மிகவும் அவதூறாகப் பேசியிருக்கிறார். தேவஸ்தானம் குறித்தும் அவதூறான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள சிவகுமாரின் பேச்சு
எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள சிவகுமாரின் பேச்சு

அவரின் பேச்சு, ஏழுமலையான் கோயிலின் பெருமைக்கும் தேவஸ்தானத்துக்கும் களங்கும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பக்தர்கள் மற்றும் இந்துக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளது. சிவகுமார் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன் பேரில், நடிகர் சிவகுமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த எஃப்.ஐ.ஆர் அறிக்கையில், `சிவகுமார் அப்படியென்ன பேசினார்?’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்,``48 நாள் விரதமிருந்து காட்பாடியிலிருந்து நடந்தே திருப்பதி கோயிலுக்குச் செல்கிறான் ஒரு ஏழைப் பக்தன். இவன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியைத் தரிசனம் செய்கிறான். கோயிலில், `ஜரகண்டி.. ஜரகண்டி’ என மூங்கில் குச்சியில் அடித்து விரட்டுகிறார்கள். அதுவே, ஒரு பணக்காரன் திருப்பதிக்குச் சென்று விடுதி அறையில் தங்குகிறான்.

நடிகர் சிவகுமார்
நடிகர் சிவகுமார்

அன்றிரவு மது போதையில் இருந்துவிட்டு காலையில் குளிக்காமல் கோயிலுக்குள் செல்கிறான். அவனுக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. கால்நடையாக நடந்துசெல்லும் பக்தர்களை தேவஸ்தானம் மதிப்பதில்லை என்று சிவகுமார் பேசியிருக்கிறார். இதுபோன்ற தவறான கருத்துகளைப் பரப்பியதற்காக யூடியூபில் வெளிவந்துள்ள வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு