கோவையைச் சேர்ந்த TTF வாசன் என்பவர் யூடியூப் சேனல் நடத்திவருகிறார். தனது சேனலில் அதிவேகத்தில் டூ வீலர் பயணம், பைக் சாகசம் என வீடியோக்களைப் பதிவுசெய்து வெளியிடுவது இவரின் வழக்கம். போக்குவரத்து விதிகளுக்கு மீறி பல்வேறு செயல்கள் செய்வதாக இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளன. கடந்த மாதம் கடலூரில் ஓர் அலுவலகத்தைத் திறந்துவைக்க வந்த வாசனைக் காண கூட்டம் கூடியது.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாகக் கூட்டம் கூட்டியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீஸாரால் அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாசன் போகும் இடங்களிலெல்லாம் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினருக்குப் பெரும் தலைவலியாக இருப்பது தொடர்கதையாகிவருகிறது. `கேஸ் வாங்குவதெல்லாம் துணிக்கடைக்குச் சென்று கட்டைப்பை வாங்குவதுபோல’ என்று அவர் சமீபத்தில் சொன்னது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில், நேற்று வடபழனியிலுள்ள திரையரங்குக்குச் சிறப்புக் காட்சி காண டிடிஎஃப் வாசன் வந்திருந்தார். அவரைக் காணக் கூட்டம் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திரையரங்க வளாகத்துக்கு வந்த வாசன், திரைப்படம் காணச் சென்றுவிட்டார். அப்போது, அவர் வந்த காருக்கு நம்பர் பிளேட் இல்லாதது குறித்து போக்குவரத்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, அந்த காரை பிரவீன் என்பவர் ஓட்டிவந்ததும், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அந்த காருக்கு ரெஜிஸ்ட்ரேஷன் செய்து, நம்பர் பிளேட் இல்லாமல் காரைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் சொன்ன விளக்கம் ஏற்கும்படி இல்லை என்று கூறிய போலீஸார், காரைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் காவல் நிலையத்தில், போலீஸார் அபராதம் விதித்து காரைத் திருப்பி ஒப்படைத்தனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.