Published:Updated:

அத்துமீறி மாஞ்சோலை கெஸ்ட் ஹவுஸில் தங்கிய வனவர்கள்! - அதிரடி காட்டிய அதிகாரிகள் 

புலிகள் காப்பகம்
புலிகள் காப்பகம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் குதிரைவெட்டியில் வனத்துறைக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அங்கு அனுமதி இல்லாமல் பெண்களுடன் இரவில் இரு வனவர்கள் தங்கியதாகப் புகார் எழுந்தது.

1988-ம் ஆண்டு தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயமாக களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. இந்த மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, மிளா, மான், யானை, அரிய வகை சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் உள்ளன.

`15 அடி ரோடு..டூவீலர்கூட போக முடியாது!' -மலைப்பகுதி சாலையால் கலங்கும் மாஞ்சோலை தொழிலாளர்கள்

ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட அகஸ்தியர் மலை உயிர்கோள் காப்பகம் என்ற பெருமைக்குரிய இந்த மலையில் ஆயிரக்கணக்கான அரிய வகை மூலிகைகள் உள்ளன. வற்றாத ஜீவநதியாக விளங்கும் தாமிரபரணி ஆறு இந்த மலைப் பகுதியிலேயே உற்பத்தியாகிறது.

Vikatan

முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான டீ எஸ்டேட்டுகள் உள்ளன. இருப்பினும், புலிகள் காப்பகத்துக்குள் அவை இருப்பதால் வனத்துறையின் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முடியாது. 

மாஞ்சோலை
மாஞ்சோலை

மணிமுத்தாறு அருவிக்கு மேலிருக்கும் இந்தப் பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், வனத்துறை அனுமதி பெற்றுச் சென்று வருகிறார்கள். இந்தச் சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சாலையைச் சீரமைக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே, மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை வரையிலான சாலை சரிசெய்யப்பட்டு விட்ட நிலையில், ஊத்துப் பகுதியிலிருந்து குதிரைவெட்டி வரையிலான சாலைகளைச் செப்பனிடும் வேலை நடந்துவருகிறது. 

மாஞ்சோலை டீ எஸ்டேட்
மாஞ்சோலை டீ எஸ்டேட்

இந்தப் பணிகளைப் பார்வையிடுவதற்காகச் சென்ற வனவர்களான முருகேசன், மோகன் ஆகியோர் தங்களுடன் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றிய மூன்று பெண்களையும் வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பணிகளைப் பார்வையிட்டு உடனடியாகத் திரும்பாமல் அத்துமீறி கெஸ்ட் ஹவுஸ் சாவியை அங்கிருந்த ஊழியரை மிரட்டி வாங்கித் தங்கியதாகக் கூறப்படுகிறது.

குதிரைவெட்டி கெஸ்ட் ஹவுஸில் தற்போது இரவு நேரத்தில் யாரையும் தங்க அனுமதிக்காத நிலையில், வனவர்கள் இருவர் அத்துமீறி அங்கு பெண்களுடன் தங்கியிருக்கும் தகவல் அதிகாரிகளுக்குத் தெரியவந்திருக்கிறது. அதனால் இரவில் அங்கு சென்ற அதிகாரிகள், வனவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெண்கள் மூவருக்கும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

டீ எஸ்டேட்
டீ எஸ்டேட்

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``வனத்துறைப் பணிகளை வனவர்கள் இருவரும் பார்வையிடச் சென்றுள்ளனர். இரவு நேரமாகி விட்டதால் அவர்கள் அங்கேயே தங்கியிருக்கிறார்கள். அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் அவர்கள் தங்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்” என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு