Published:Updated:

கரூர்: தரம் குறைந்த நிலக்கரி; பல கோடி ரூபாய் ஊழல்?! - டி.என்.பி.எல் ஆலை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

டி.என்.பி.எல் ஆலை
டி.என்.பி.எல் ஆலை

டி.என்.பி.எல் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட ராஜீவ் ரஞ்சன், நிறுவனத்தின் பழைய கோப்புகளை ஆய்வு செய்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போதுதான், நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடந்திருப்பதை அவர் கண்டுப்பிடித்தாகவும் சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புகழ்பெற்ற புகளூர் காகித ஆலைக்கு வெளிநாட்டிலிருந்து தரம் குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து, பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டி.என்.பி.எல் ஆலை
டி.என்.பி.எல் ஆலை
கரூர்: மூன்று திருமணம் செய்த இளைஞர்;  முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது!

கரூர் மாவட்டம், புகளூர் காகிதபுரத்தில் இயங்கிவருகிறது, டி.என்.பி.எல் ஆலை. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது திறக்கப்பட்ட இந்த ஆலை, ஆசிய அளவில் மிகப்பெரிய காகித ஆலையாகத் திகழ்ந்துவருகிறது. இந்தநிலையில்தான், தரமற்ற நிலக்கரியை வெளிநாட்டிலிருந்து வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இரண்டு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. இந்தக் காகித ஆலையில் வணிகம், மின்சாரம் மற்றும் கருவியியல் பிரிவில் பொது மேலாளராக இருக்கும் பாலசுப்ரமணி என்பவரும், ஆய்வுக்கூடம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறையில் மேலாளராகப் பணியாற்றிவந்த ராதாகிருஷ்ணன் என்பரும்தான் இந்த அதிரடிப் புகாரில் சிக்கியுள்ளனர். இந்தக் காகித ஆலைக்கு வெளிநாடுகளிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் தரம் குறைந்த (ஈரப்பதம் அதிகமுள்ள நிலக்கரி) நிலக்கரியை டாலர் பரிவர்த்தனை மூலம் வாங்கியதில் மேற்படி முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. டி.என்.பி.எல் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட ராஜீவ் ரஞ்சன், நிறுவனத்தின் பழைய கோப்புகளை ஆய்வு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

 பாலசுப்ரமணி
பாலசுப்ரமணி

அப்போதுதான், நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடந்திருப்பதை அவர் கண்டுப்பிடித்தாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த அடிப்படையிலேயே அவர், பொது மேலாளர் பாலசுப்ரமணியையும், மேலாளர் ராதாகிருஷ்ணனையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்தே, முறைகேட்டில் ஈடுப்பட்டதாகச் சொல்லப்படும் இருவரையும், டி.என்.பி.எல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (உற்பத்தி) கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நிலக்கரி இறக்குமதியில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை விசாரிக்க, தனி விசாரணைக்குழு அமைக்கப்படவிருக்கிறது. அவர்களின் விசாரணையின் முடிவில்தான், எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரியவரும். அதேபோல், இவர்கள் இருவர் மட்டும்தான் இந்த முறைகேட்டில் ஈடுப்பட்டார்களா அல்லது வேறு அதிகாரிகள் யாருக்கும் தொடர்புள்ளதா என்பதும் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர், "இருவரும் சேர்ந்து 400 கோடி ரூபாய் வரை இந்த விவகாரத்தில் ஊழல் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் மட்டும் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பல அதிகாரிகளுக்கு இதில் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது. விசாரணையைத் தீவிரப்படுத்தி, நேர்மையாக விசாரித்தால் மட்டுமே உண்மையான முறைகேட்டைக் கண்டறிய முடியும். இப்போதுள்ள நிர்வாக இயக்குநர் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவரில் பாலசுப்ரமணி நேற்று ஓய்வுபெறவிருந்தார். ஆனால், அதற்கு முன்பே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த ஆலையின் வருமானம் இப்படிப் பல அட்டைப்பூச்சி அதிகாரிகளால் உறிஞ்சப்படுகிறது. தமிழக அரசு ஆலை விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, ஆலையைச் சிலரது பிடியிலிருந்து மீட்க வேண்டும்" என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு