Published:Updated:

`அரசுப் பள்ளி மைதானத்தில் இருந்த 10 மரங்களை வெட்டியது யார்?’ -கொதிக்கும் ராசிபுரம் மக்கள்

வெட்டப்பட்ட மரங்கள்
வெட்டப்பட்ட மரங்கள் ( நா.ராஜமுருகன் )

அருகிலுள்ள ஒரு தேசியக் கட்சியின் வி.ஐ.பி தரப்புதான் இந்த மரங்களை வெட்டியிருக்கணும்னு மக்கள் பேசிக்குறாங்க. சம்பவத்தன்னிக்கு இரவு பள்ளி மைதானத்துல இருந்த மரங்களை வெட்டியபோதே, அந்த வி.ஐ.பி வீட்டு வளாகத்துக்குள் இருந்த மாமரம் ஒன்றும் வெட்டப்பட்டிருக்கு.

அரசுப் பள்ளி மைதான வளாகத்தில் முன்னாள் மாணவர்களால் வைத்து வளர்க்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மரங்களை மர்ம நபர்கள் இரவோடு இரவாக வெட்டிய சம்பவம், ராசிபுரம் மக்களைக் கொதிக்கவைத்திருக்கிறது.

அனைத்துக் கட்சியினர் மௌன அஞ்சலி போராட்டம்
அனைத்துக் கட்சியினர் மௌன அஞ்சலி போராட்டம்
நா.ராஜமுருகன்

காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பத்து நாள்களைக் கடந்தும், காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து வெட்டப்பட்ட மரங்களுக்கு மலர்தூவி, மலர்வளையம்வைத்து, அஞ்சலி செலுத்தி, நூதன முறையில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

`2 லட்சம் பனைவிதைகள்... எல்லோருக்கும் இலவசம்!' - வறண்ட கிராமங்களை வளமாக்க நினைக்கும் மனிதர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அண்ணாசாலைப் பகுதியில் இயங்கிவருகிறது, அரசினர் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியின் வெளிப்புற விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் அமரும் வகையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 50-க்கும் மேற்பட்ட சொர்க்க மரக்கன்றுகள் நடப்பட்டன. அவை வளர்ந்து, கிளைபரப்பி, மாணவர்களுக்கும், மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் நிழல் தந்து வந்தன. அந்த மரங்கள் அனைத்தும், மைதான எல்லையாக இருக்கும் சுவரை ஒட்டியுள்ள வீடுகளுக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில், அதிகக இடைவெளிவிட்டு, தொலைநோக்கோடு நடப்பட்டன.

வெட்டப்பட்ட மரம்
வெட்டப்பட்ட மரம்
நா.ராஜமுருகன்

ஆனால், இந்த மரங்களில் பத்துக்கும் மேற்பட்ட மரங்களை, பத்து நாள்களுக்கு முன்னர் இரவோடு இரவாக மர்ம நபர்கள் வெட்டி வீசியதோடு, பகலில் அதை ஆட்டோவில் ஏற்றிச் செல்ல, ராசிபுரம் மக்கள் கொந்தளித்துப்போயிருக்கிறார்கள். `மரங்களை வெட்டியவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மரங்களை வெட்டப் பயன்படுத்திய உபகரணங்களையும், டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்' என்று ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். ஆனால், நடவடிக்கை இல்லை என்பதால், அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து வெட்டப்பட்ட மரங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி, விநோதமான முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய, தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் நல்வினைச் செல்வனிடம் பேசினோம். ``நாமக்கல் மாவட்டம் வறண்ட மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்திலுள்ள ராசிபுரத்தில் இந்தப் பள்ளி அமைஞ்சிருக்கு. ஆனால், வறண்ட சூழல்லயும், கடுமையான வெயில் காலங்களிலும், இங்கே முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். அவர்களோடு சேர்ந்து தன்னார்வலர்கள் பலரும் மாட்டுவண்டியில் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து, மரக்கன்றுகளுக்கு ஊற்றி வளர்த்து மரங்களாக்கி, அவற்றைக் காப்பாற்றி வந்தாங்க. முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்கள், இந்த மைதானத்தில் விளையாடும் விளையாட்டு வீரர்கள், நடைப்பயிற்சி செய்வோர் என அனைவரும் சேர்ந்துதான் இந்த மரங்களைப் பாதுகாத்து வந்தாங்க.

 நல்வினை செல்வன்
நல்வினை செல்வன்
நா.ராஜமுருகன்

மாணவர்களில் ஒரு சிலர் மரங்களின் அருமை தெரியாமல், அறியாமையால் விளையாட்டுத்தனமாக இலைகளையோ, சிறு கிளைகளையோ, உடைக்கும்போதும் கூட, மரங்கள் பற்றியும், அவற்றின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வாக அவர்களுக்கு எடுத்துக் கூறிய பல சம்பவங்கள் இங்கே நடைபெற்றிருக்கு. இந்தச் சூழல்லதான், பத்து நாள்களுக்கு முன்னாடி பத்துக்கும் மேற்பட்ட மரங்களை சில சமூக விரோதிகள் நள்ளிரவில் வெட்டி, அந்த மரத்துண்டுகளைப் பகல்பொழுதில் ஆட்டோவில் கடத்திச் சென்றிருக்காங்க.

இது சம்பந்தமாக, அனைத்துக் கட்சி சார்பாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தோம். ஆனால், இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காவல்துறையினர் மௌனம் காக்குறாங்க. பள்ளி மைதான எல்லையாக இருக்கும் சுவரிலிருந்து 12 அடி உள்ளே தள்ளித்தான் இந்த மரங்களை நட்டு வளர்த்திருக்காங்க. ஆனால், அருகிலுள்ள ஒரு தேசியக் கட்சியின் வி.ஐ.பி வீட்டுக்குள் இந்த மரக்கிளைகள் போவதாகச் சொல்லி, அவங்க தரப்புதான் இந்த மரங்களை வெட்டியிருக்கணும்னு மக்கள் பேசிக்குறாங்க. சம்பவத்தன்னிக்கு இரவு பள்ளி மைதானத்துல இருந்த மரங்களை வெட்டியபோதே, அந்த வி.ஐ.பி வீட்டு வளாகத்துக்குள் இருந்த மாமரம் ஒண்ணும் வெட்டப்பட்டிருக்கு.

கிளைகள் கழிக்கப்பட்ட மரம்
கிளைகள் கழிக்கப்பட்ட மரம்
நா.ராஜமுருகன்

இரண்டுக்கும் ஒரே மெஷினரிதான் பயன்படுத்தியிருக்காங்க. அதேபோல், மறுநாள் பகல்ல மைதானத்தில் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை டாடா ஏஸ் வண்டியில் மர்மநபர்கள் ஏற்றியபோது, அந்த வாகனத்தின் அருகில், அந்த வி.ஐ.பி-யின் கார் டிரைவர் நின்னதை மக்கள் பலரும் பார்த்திருக்காங்க. இதை காவல் நிலையத்தில் சொன்னோம். அதனால்தான், அந்த வி.ஐ.பி-க்கு பயந்துக்கிட்டு, போலீஸார் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்காங்கபோலிருக்கு.

மரங்களை வெட்டும்போது, அருகில் மக்கள் யாரும் இல்லாததால், எங்களாலும் அந்த வி.ஐ.பி-யின் பெயரை வெளிப்படையாக வெளியில் சொல்லி, போராட முடியவில்லை. ஆனால், போலீஸார் மெத்தனம் காட்டுவதைப் பார்த்தால், நாங்கள் சந்தேகப்படும் அந்த வி.ஐ.பி தரப்புதான் இந்த மரங்களை வெட்டியிருக்க வேண்டும். எங்கள் புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். முதற்கட்ட போராட்டமாக, வெட்டப்பட்ட மரங்களுக்கு மலர் வளையம் வைத்து, மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்திப் போராட்டம் நடத்தியிருக்கிறோம்.

பள்ளி முன்பு அனைத்துக் கட்சியினர் போராட்டம்
பள்ளி முன்பு அனைத்துக் கட்சியினர் போராட்டம்
நா.ராஜமுருகன்

பள்ளியின் முன்னாடி அனைவரும் கூடி ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ,தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்னு பல அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகிட்டாங்க. மரங்களை வெட்டியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும்" என்றார்.

இது குறித்து, ராசிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கத்திடம் பேசினோம்.

``அண்ணா சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரைப் பதிந்து, சி.எஸ்.ஆர் காப்பி கொடுத்திருக்கிறோம். விசாரணை போய்க்கிட்டு இருக்கு. இன்னும் யாரையும் கைது பண்ணவில்லை. அவர்கள் சொல்லும் வி.ஐ.பி-க்கும், இந்தப் பிரச்னைக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியவில்லை.

மரத்துண்டுகளை வாகனத்தில் ஏற்றும்போது...
மரத்துண்டுகளை வாகனத்தில் ஏற்றும்போது...
நா.ராஜமுருகன்

இன்னிக்கு அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தப்போறதா கேள்விப்பட்டதும், நாங்க அதுக்கு அனுமதி தரலை. இருந்தாலும், அதையும் மீறிப் போராட்டம் நடத்தியிருக்காங்க. இந்த வழக்கு சம்பந்தமா அப்டேட் இருந்தா, நானே உங்களைத் தொடர்புகொண்டு சொல்றேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு