Published:Updated:

`தவறு செய்தால் சிறையில் அடையுங்கள்; அடிக்காதீங்க!'- குழந்தை கண்முன்பே தந்தையைத் தாக்கிய உ.பி. போலீஸ்

மலையரசு

`அது என் தவறு என்றால், நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால் அடிக்காதீர்கள். என்ன தவறு செய்தேன் எனச்சொல்லுங்கள்'' என்று கதறுகிறார்.

UP Police
UP Police

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் ரூ.2,000-த்திலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுபவர்களுக்கு, 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

Representational Image
Representational Image

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட இந்தப் புதிய சட்டம், இதன்பின்னர் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் என நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹெல்மெட் இல்லாமல் ஸ்கூட்டர் ஓட்டிவந்த நபருக்கு டெல்லியில் லைசென்ஸ் இல்லாதது, புகை பரிசோதனை உள்ளிட்ட குற்றங்களுக்காக 23,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. டிரக் ஓட்டுநர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட இந்தப் புதிய அபராதத் தொகை மக்களுக்குப் பாரமாக உள்ளதாகப் பல மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அபராதத் தொகையைக் குறைக்க உள்ளதாகவும் சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

`ஓவர் லோடு; விதிமுறைகளை மீறிட்டீங்க' - ராஜஸ்தான் டிரக் டிரைவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்!

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸுக்கும், வாகன ஓட்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில், ரிங்கு பாண்டே என்பவர் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் செல்கிறார். அவரைப் பிடித்த போலீஸ் அதிகாரிகள் இருவர், சரமாரியாக அவரைத் தாக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

2.07 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், ``அது என் தவறு என்றால், நீங்கள் என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால் அடிக்காதீர்கள். என்ன தவறு செய்தேன் எனச் சொல்லுங்கள்'' என்று கதறுகிறார். ஆனால், அவர் சொல்வதைக் கேட்காத அதிகாரிகள், குழந்தையின் முன்பே கண்மூடித்தனமாகத் தாக்குகின்றனர். தரையில் இழுத்துப்போட்டு ஷூ காலாலும் கைகளாலும் இரண்டு போலீஸாரும் மாறி மாறித் தாக்குகின்றனர். வீடியோ காட்சியின் முடிவில், வண்டியின் சாவியை போலீஸ் கேட்க அதற்கு, ``நான் என்ன தவறு செய்தேன் எனக் கூறுங்கள். அதன்பிறகு சாவியைத் தருகிறேன்'' என்று பேசுகிறார் ரிங்கு பாண்டே. இந்த வீடியோ வைரலாகப் பரவ, வண்டிக்கு சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்ததால்தான் அவரை போலீஸார் தாக்கினர் எனச் செய்தி பரவியது.

`நீங்க ஏன் ஹெல்மெட் போடல?'- அபராதம் விதித்த போலீஸை குறிவைத்துப் பிடித்த இளைஞர்
UP Police
UP Police

ஆனால், அதை மறுத்துள்ளது உத்தரப்பிரதேச போலீஸ். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தர்ம் வீர் சிங் என்ற போலீஸ் உயர் அதிகாரி, தாக்குதல் நடத்திய போலீஸ் என கண்டறியப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வீரேந்திர மிஸ்ரா மற்றும் தலைமை கான்ஸ்டபிள் மகேந்திர பிரசாத் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும், ``வண்டியை ஓட்டிவந்த நபர் குடிபோதையிலிருந்ததாக இரண்டு போலீஸ் அதிகாரிகளும் கூறுகின்றனர். இருப்பினும், இரண்டு போலீஸ்காரர்களும் அவரை கடுமையாகத் தாக்கி, தரையில் தள்ளி மோசமாக நடந்து கொண்டனர். இருவரும் சீருடையிலிருந்தனர். இது, காவல்துறைக்கு அவமானகரமான செயல். அவர்களை சஸ்பெண்டு செய்துள்ளோம். விரிவான விசாரணை நடைபெற்றுவருகிறது" என்று கூறியுள்ளார்.