Published:Updated:

`கணக்குப் புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார்களா.. காட்டுங்கள்!’- அதிகாரிகளை மிரளவைத்த கிராம மக்கள்

கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்த பொதுமக்கள்
கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்த பொதுமக்கள்

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. அதனால் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். இந்த நிலையில் எங்களுக்கு கிராம சபைக் கூட்டத்தால் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது, என்கிறார்கள் ஊர்ப் பொதுமக்கள்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில் நெல்லை மாவட்டமும் ஒன்று. இதுவரை தேர்தல் நடத்தப்படாததால் கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையே நிலவுகிறது. 

கிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா? - விளக்கம் தரும் துறைவல்லுநர்! #DoubtOfCommonMan

அதிகாரிகளிடத்தில் மக்களுக்கான தேவைகள் குறித்துப் பரிந்துபேசக்கூடிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் அதிகாரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்பச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என்கிற புகாரும் உள்ளது.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட அத்தாளநல்லூர் கிராமத்தில் இன்று கிராம சபைக் கூட்டம் கூட்டப்பட்டது. வழக்கம்போல குடியரசு தினத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தைப் பஞ்சாயத்து அலுவலர் கூட்டியிருந்தார். இதில் பாப்பாக்குடி யூனியன் அதிகாரியும் பங்கேற்பதற்காக வந்திருந்தார். 

புறக்கணித்த பொதுமக்கள்
புறக்கணித்த பொதுமக்கள்

கூட்டம் தொடங்கியதும் ஊர்ப் பொதுமக்கள் தரப்பில் பேசியவர்கள், ‘இன்று கிராம சபைக் கூட்டம் நடத்துவது பற்றி எங்களுக்கு முறைப்படி தெரியப்படுத்தாது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பினார்கள். திடீரென வந்து கூட்டத்தை நடத்துவது நியாயமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டத்தை நடத்தி முடிக்க அதிகாரிகள் முயன்றனர். கிராமத்தின் வரவு, செலவுகள் தொடர்பான கணக்குப் புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார்களா என அதிகாரிகளிடம் மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

பொதுமக்களின் மனு
பொதுமக்களின் மனு

கணக்கு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கொண்டுவந்திருக்கவில்லை. அதனால் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகவும் முறைப்படி தகவல் தெரிவித்து விட்டு ஆவணங்களுடன் வேறொரு நாளில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என எழுத்து மூலமாகப் பொதுமக்கள் தகவல் அளித்துவிட்டுக் கூட்டத்தைப் புறக்கணித்தார்கள். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின் செல்ல