Published:Updated:

`நீங்க இருக்க கண்டிஷன் சரியில்லை சார்...!'- செவிலியர்களை வசைபாடிய அரசு மருத்துவர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவரை வசைபாடி வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

செவிலியர்களை வசைபாடும் அரசு மருத்துவர்
செவிலியர்களை வசைபாடும் அரசு மருத்துவர் ( ஆர்.வெங்கடேஷ் )

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பணியில் இருந்த தமிழ்ச்செல்வன் என்ற மருத்துவர், பணி நேரத்தில் தன்னை எதிர்த்துப் பேசிய செவிலியரைச் சரமாரியாக வசைபாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை, அங்குள்ள பணியாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செவிலியர்களை வசைபாடும் அரசு மருத்துவர்
செவிலியர்களை வசைபாடும் அரசு மருத்துவர்
ஆர்.வெங்கடேஷ்

அந்த வீடியோவில், மருத்துவர் தமிழ்ச் செல்வன், "கேள்வி கேட்டா என்ன ஓவரா பேசுறாய்.., நான் டாக்டர்.. பக்கத்துல வீடு இருக்கு. லோக்கலில் இருந்தால் நீ பெரிய ஆளா.." என்று செவிலியரைப் பார்த்துச் சொல்ல, பதிலுக்குச் செவிலியர், ``நாங்க உங்களை ஒண்ணுமே சொல்லலையே சார். நீங்க எங்கிட்ட மரியாதையா பேசினால்தான் நாங்க மரியாதை கொடுப்போம்" என்கிறார். அந்த ஒரு செவிலியருக்குத் துணையாக மற்றொரு செவிலியர் சேர்ந்துகொள்கிறார். மீண்டும் டாக்டர், ``லோக்கல்ல இருந்து நானும் பசங்கள வரவைக்கிறேன் போட்டுப் பார்த்துக்கலாமா.., என்கிறார். செவிலியர்கள், ``நீங்க இருக்க கண்டிஷன் சரியில்லை. தேவை இல்லாமல் எங்களை வம்புக்கு இழுக்குறீங்க" என்கின்றனர்.

அதற்கு டாக்டர், ``அறிவு இல்லை, ஒரு பேஷன்டோட ஹிஸ்டரியைச் சரியாக கலெக்ட் செய்யத் தெரியலை. நீங்க எல்லாம் நர்ஸா., நர்ஸ் யூனிஃபார்ம் போட்டு வந்தால் மட்டும் நீங்கள் எல்லாம் நர்ஸா..." என்று கண்டபடி வசைபாடுகிறார். பணி நேரத்தில் இதுபோன்று உணர்ச்சிவசப்பட்டு கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் மருத்துவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

செவிலியர்களை வசைபாடும் அரசு மருத்துவர்
செவிலியர்களை வசைபாடும் அரசு மருத்துவர்
ஆர்.வெங்கடேஷ்

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் தமிழ்ச்செல்வன் கடந்த சில ஆண்டுகளாக விராலிமலை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இங்கு தலைமை மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர் எம்.பி.பி.எஸ் மட்டும் முடித்த மருத்துவர்களை மதிப்பதில்லை என்றும் சக பணியாளர்களைக் கண்டபடி திட்டுவதுடன், சரியாக வேலை செய்யும் தனக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இணை இயக்குநருக்கு தமிழ்ச் செல்வன் புகார் கொடுத்துள்ளார். புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறி தமிழ்ச் செல்வன் சமீபத்தில் தற்கொலைக்கும் முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர் மன உளைச்சலால், மருத்துவர் தமிழ்ச் செல்வன் சற்றே பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, "மருத்துவர் தமிழ்ச்செல்வன் நோயாளி ஒருவருடைய மருத்துவச் சீட்டை நர்ஸிடம் கேட்டிருக்கிறார். அதில், நோயாளி குறித்த முறையான தகவல் இல்லாததால் மருத்துவர் கேள்விகேட்க நர்ஸ் நான் லோக்கல் என்று மருத்துவரைப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மருத்துவரைக் கோபப்படுத்தி நர்ஸ் திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். ஆனாலும், இதுபோன்று தகாத வார்த்தைகளை மருத்துவர் பயன்படுத்தி இருக்கக்கூடாது. உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

செவிலியர்களை வசைபாடும் அரசு மருத்துவர்
செவிலியர்களை வசைபாடும் அரசு மருத்துவர்
ஆர்.வெங்கடேஷ்

இதுபற்றி சுகாதாரத்துறை இணை இயக்குநர் சந்திரசேகர் கூறும்போது, "இதுகுறித்து, வீடியோ மற்றும் புகார் மனுக்கள் வந்துள்ளது. இதுதொடர்பான, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. யார் மீது தவறு இருக்கிறது என்று கண்டறிந்து நிச்சயம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.