Published:Updated:

`காவி என்பது எல்லோருக்கும் பொதுவானது..!' -நடிகர் விஜய் பிறந்தநாள் சுவர் ஓவியம் எழுப்பிய சர்ச்சை

நடிகர் விஜய் ஓவியம்
நடிகர் விஜய் ஓவியம்

கொரோனாவால் வேலையிழந்து தவிக்கும் மக்கள் பசியே அறியாத வகையில் தினமும் மூன்று வேளையும் சுமார் 300 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அவரது ரசிகர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் பி.ஜே.பி கட்சியின் நிறமாக அறியப்படும் காவி நிற தலைப்பாகையுடன் இருப்பது போன்று வரையப்பட்டுள்ள ஓவியம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் பிறந்தநாள் சுவர் விளம்பரம்
விஜய் பிறந்தநாள் சுவர் விளம்பரம்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான வரும் 22-ம் தேதியை, கொண்டாடும் முடிவில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இதைக் கேள்விப்பட்ட விஜய், `பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம். நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக யாரும் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம். எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த வேண்டாம், எல்லோரும் வீட்டிலேயே இருங்கள். உங்கள் உயிர்தான் முக்கியம். அதுவே நீங்கள் எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசு' எனத் தனது ரசிகர்களுக்கு விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் பிறந்தநாளுக்காக சுவர் விளம்பரம் செய்துள்ளனர். அதில், `தமிழகத்தின் நாளைய மகுடமே', `சத்ரியன்', `சாணக்கியன்' என்ற வாசகங்களுடன் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக சுவர் விளம்பரம் எழுதி வருகின்றனர். இதில் நடிகர் விஜய் காவி நிறத்திலான தலைப்பாகையுடன் இருப்பது போன்ற சுவர் விளம்பரம், விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓவியம்
ஓவியம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய ரசிகர்கள் சிலர், `` நடிகர் விஜய் எல்லோருக்கும் பொதுவானவர். அவரின் ஒவ்வொரு பாடல் கேசட் வெளியீட்டு விழாவின்போதும் நாட்டில் நடக்கக்கூடிய சில விஷயங்களைப் பற்றியும் ஆட்சியாளர்களைப் பற்றியும் விமர்சனம் செய்து பேசுவார். மெர்சல், சர்கார் போன்ற படங்கள் அரசியலையும் ஆட்சியாளர்களையும் விமர்சிப்பது போன்று இருந்தன. இந்தப் படங்கள் வெளியானபோது கடும் எதிர்ப்புகளை சந்தித்தன.

மெர்சல் வெளியானபோது மத்திய அரசை விமர்சித்துள்ளதாக தமிழக பி.ஜே.பி தலைவர்கள் நடிகர் விஜய்யை எதிர்த்துப் பேசினர். அதேபோல், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விஜய்யை வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விஜய் ஓவியம்
விஜய் ஓவியம்

இது எங்களைப் போன்ற ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்ததுடன் மத்திய மற்றும் தமிழக அரசின் அழுத்தத்தாலேயே இந்தச் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதனால், ரசிகர்கள் பலரும் மத்திய அரசு, தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு ஆகியவற்றுக்கு எதிரான மனநிலையில் இருந்தனர்.

காவி நிறம் என்பது பா.ஜ.க நிறமாக அறியப்படுகிறது. அரசியல் விமர்சகர்கள், பா.ஜ கட்சிக்கு எதிராகப் பேசும்போது காவி என்ற சொல்லைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் விஜய் பிறந்தநாளுக்காக எழுதப்பட்ட சுவர் விளம்பர ஓவியத்தில் காவி நிறத் தலைப்பாகையுடன் நடிகர் விஜய் இருக்கும் ஓவியம் வரையப்பட்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.

`விஜய் சார் மீது அன்பும் மரியாதையும் கொண்டவன் நான்; ட்வீட் போலியானது!’ - நடிகர் கருணாகரன்

இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் விஜய் சரவணனிடம் பேசினோம். `` விலையில்லா விருந்தகம் என்கிற பெயரில் 252-வது நாளாக ஏழை மக்களுக்கு காலை உணவு வழங்கி வருகிறோம். ஜூன் மாதத்தை தளபதி மாதம் என்கிற பெயரில் கொரோனாவால் வேலையிழந்து தவிக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் சுமார் 300 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.

விஜய்
விஜய்

அத்துடன், விஜய் அவர்களின் பிறந்தநாளில் அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதலின்படியும் விஜய் அவர்கள் கூறியுள்ள அறிவுரைகளைப் பின்பற்றியும் சில நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளோம். சாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர் விஜய். இவை குறித்து அவர் எங்களிடம் எப்போதும் பேசியதில்லை. குறிப்பிட்ட அந்த ஓவியம் தி.க குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரால் வரையப்பட்டுள்ளது. இதில் எந்த அரசியல் சாயமும் இல்லை. காவி என்பது எல்லோருக்கும் பொதுவானது. தேசியக் கொடியில் உள்ள ஆரஞ்சு வண்ணத்தைக் குறிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு