Published:Updated:

சகிப்புத்தன்மை யாருக்கு வேண்டும் தீபிந்தர் கோயல்? ஜொமேட்டோ பிரச்னை தோலுரிக்கும் கும்பல் மனப்பான்மை!

கார்த்தி

சகிப்புத்தன்மை என்பது வேறு; ஆண்டாண்டு காலமாய் மேலாதிக்கம் சூழ்ந்த ஒரு விஷயத்தில் அதற்கு எதிராகக் குரல் எழுப்புவது என்பது வேறு.

'எல்லாப் பிரச்னைகளையும் பிறகு பார்த்துக்கொள்வோம். முதலில் சாப்பிடுவோம்' என்றிருந்த வழக்கத்தை மாற்றி, 'சாப்பிடுவதிலேயே பிரச்னையா' என்கிற அளவுக்கு சமூக வலைதளங்களில் ஒரு பிரச்னை உருவெடுத்திருக்கிறது.

ஒரு சம்பவத்துக்கான காரணங்களைக் கடந்து ஜொமேட்டோ ஊழியரின் 'இந்தி கத்துக்கலாமே பாஸ்' என்னும் பரிந்துரை பல்வேறு கிளைக்கதைகளை அகல விரித்திருக்கிறது. சுருக்கமாக பிரச்னைக்கான ஆணிவேரிலிருந்து ஆரம்பிப்போம்.

சென்னையைச் சேர்ந்த விகாஸ் என்பவர் ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்கிறார். அவர் ஆர்டர் செய்திருந்தவற்றில் ஒரு குறிப்பிட்ட உணவு அவருக்கு வந்துசேரவில்லை. விகாஸ் எவ்வளவு முயன்றும், ஜொமேட்டோ கஸ்டமர் கேரில் இருப்பவருக்கு அதற்கான நஷ்ட ஈடைக் கொடுப்பதற்கு மனம் ஒப்பவில்லை. விகாஸ் அந்த உணவக உரிமையாளரிடம் பேசியும், கஸ்டமர் கேரில் இருப்பவர் பணத்தைத் திருப்பித் தர மறுக்கிறார்.

விகாஸும், ஜொமேட்டோ கஸ்டமர் கேர் ஊழியரும் பொதுமொழியான ஆங்கிலத்தில் உரையாடினாலும், உணவக உரிமையாளருக்கு ஆங்கிலம் தெரியாததால், தன்னால் பணத்தைத் திருப்பத்தர இயலாது என மறுக்கிறார். அது, தன் பிரச்னையல்ல எனத் தீர்க்கமாக சொல்கிறார் விகாஸ். 'தமிழ்நாட்டில் ஜொமேட்டோ இருக்கிறதென்றால், தமிழ் தெரிந்த நபர்களை ஜொமேட்டோ வேலைக்கு அமர்த்தியிருக்க வேண்டும். தமிழ் தெரிந்த யாருக்காவது இந்த அழைப்பை மாற்றிவிட்டு, என் பணத்தைத் திருப்பித்தரவும்' என்கிறார் விகாஸ்.

கஸ்டமர் கேர் ஊழியரின் அடுத்த பதில்தான் உணவுப் பிரச்னையை உணர்வுப் பிரச்னையாக மாற்றிவிட்டது. 'இந்தி நம் தேசிய மொழி. எல்லோருக்கும் குறைந்த அளவாவது இந்தி தெரிய வேண்டும் என்பது இயல்பான ஒன்றுதானே' என போகிற போக்கில் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டிருக்கிறார் அந்த கஸ்டமர் கேர் ஊழியர்.

விகாஸ் இதை ட்விட்டரில் பகிர்ந்து தி.மு.க ஐடிவிங், கனிமொழி எம்.பி, தமிழக முதல்வரின் கணக்கு, செய்தி நிறுவனங்கள், உதயநிதி ஸ்டாலின் என பலரை டேக் செய்கிறார். விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது. ஜொமேட்டோ மன்னிப்புக் கேட்க வேண்டும், ஜொமேட்டோ சேவையைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென #Reject_Zomato ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்படுகிறது. அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டுமென கூக்குரல்கள் எழுகின்றன. கனிமொழி, ஜோதிமணி, செந்தில் என பல சமூக வலைதளங்களில் இயங்கும் பல எம்.பி-க்கள் இதுகுறித்துக் குரல் எழுப்புகிறார்கள். ஜொமேட்டோ நிறுவனம் மன்னிப்புக் கேட்கிறது. பிரச்னைக்குரிய அந்தக் குறிப்பிட்ட பெண்மணி பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

பிரச்னையை எழுப்பிய விகாஸ், "சம்பந்தப்பட்ட ஊழியரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பது என் நோக்கமில்லை. தமிழர்கள் யாரையும் பழிவாங்க நினைக்க மாட்டார்கள்" என்று சொல்கிறார். சில மணி நேரங்களில் ஜொமேட்டோ நிறுவனரே ட்விட்டரில் வந்து, அந்தப் பெண் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கிறார். எல்லோருக்கும் கொஞ்சம் சகிப்புத் தன்மை வேண்டும் எனப் போதனை செய்கிறார்.

Mob Violence
Mob Violence

சரி, இதில் சகிப்புத்தன்மை யாருக்கெல்லாம் வேண்டும் என்பதை மட்டும் இங்கு பார்ப்போம்.

இந்தி நம் தேசிய மொழியா என்றால் நிச்சயம் இல்லை. இந்தியாவில் இருக்கும் அலுவல் மொழிகளுள் இந்தியும் ஒன்று. இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களுக்கும் தனி மொழிகள் இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியா. 2001-2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, வெளிமாநிலத்தவர்கள் அதிகம் வேலை தேடி வரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அதேபோல், வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகியவை இருக்கின்றன. நான்கு மாநிலங்களிலும் இந்தியே பிரதான மொழி. ஆனால், இதிலொரு நகைமுரண் இருக்கிறது. உணவகங்களுக்கு நாம் சென்றாலும், அங்கு நாம் பயன்படுத்துவது ஒயிட் சட்னி, க்ரீன் சட்னி போன்ற சொற்களைத்தான். காரணம், உணவகங்களில் பெரும்பாலும் வேலை செய்பவர்கள் வெளி மாநிலத்தவர்கள். சலூன்கள், உணவகங்கள் என நாம் நம் தேவையை உரக்கச் சொல்ல வேண்டிய பல இடங்களில் நம் மாநிலத்திலேயே வேற்றுமொழி பேசுபவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் மெனக்கெட்டு தமிழ் கற்பதில்லை. நாம் எளிதாக ஒயிட் சட்னிக்கும், ரெட் சட்னிக்கும் மாறிவிடுகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு தன் வியாபாரத்தைப் பெருக்க நினைக்கும் எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும், வாடிக்கையாளரின் மொழியைப் பயின்றுகொள்வது என்பது மிகவும் அவசியம். ஜொமேட்டோ நிறுவனமே அதை முதலில் வெளிப்படையாகச் சொல்லியிருந்தது.

ஆனால், இதைத் தொடர்ந்து ஜொமேட்டோவின் நிறுவனரான தீபிந்தர் கோயல் வெளியிட்ட போதனைப் பதிவுகள் அந்த எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டன. அந்த உணவக நபர் பார்சலில் அந்தப் பொருளைக் கொடுக்காமல் விட்டதைவிட, விகாஸ் அதை வைத்து இவ்வளவு பெரிய பஞ்சாயத்து ஆக்கியதைவிட, அந்த கஸ்டமர் கேர் ஊழியர் 'இந்தி தேசிய மொழி' என சொல்லி மாட்டிக்கொண்டதைவிட அபத்தமானதும், ஆபத்தமானதும் தீபந்தர் கொட்டியிருக்கும் வார்த்தைகள். "உதவி மையத்தில் இருக்கும் ஓர் ஊழியர் செய்த ஒரு அறியாப் பிழை, இன்று தேசியப் பிரச்னை ஆகியிருக்கிறது. இப்போதிருப்பதைவிட இந்தத் தேசத்துக்கு சகிப்புத்தன்மை என்பது நிறைய இருக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள், மொழி குறித்த புரிதல்களோ, மாநிலப் பிரச்னைகளோ அறியாதவர்கள். இதில் யாரைக் குறை சொல்வது?" என்று கேட்டிருக்கிறார்.

சகிப்புத்தன்மை என்பது வேறு; ஆண்டாண்டு காலமாய் மேலாதிக்கம் சூழ்ந்த ஒரு விஷயத்தில் அதற்கு எதிராகக் குரல் எழுப்புவது என்பது வேறு. இப்படியான மேலாதிக்கத்தை உடைத்து நொறுக்குவதை counter hegemony என்பார்கள். தீபிந்தருக்கு இந்த இரண்டு வார்த்தைகளுக்குமான வித்தியாசம் இவ்வளவு நடந்தும் புரிபடவில்லை என்பதுதான் நகைமுரண்.

தன் தவற்றைத் திருத்திக்கொள்ளாமல், மொழி உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரு மாநிலத்து மக்களிடம் சகிப்புத்தன்மை குறித்து பாடமெடுக்கிறார். உள்ளூர் வாடிக்கையாளரின் மொழியைப் பயிலாமல், அப்படியானதொரு பயிற்சியை தம் ஊழியர்களுக்கு வழங்காமல், உள்ளூர் மக்களுக்கான ஒரு செயலியை உருவாக்காமல், சகிப்புத்தன்மை குறித்து போதனை செய்வது எத்தருணத்திலும் அறமில்லை.

தீபிந்தர் கோயல்
தீபிந்தர் கோயல்
Zomato

சரி, இதில் நம் தவறென எதுவுமே இல்லையா? ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நிகழும் தவறுகளுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பது அடிப்படை உரிமை. ஆனால், இந்த விஷயத்தில் பலரும் எந்த அளவுக்குச் சென்றனர் என்பது சற்று மோசமானதாகவே இருந்தது. ஜொமேட்டோ நிறுவனத்தில் சாட் சர்வீஸூக்குள் புகுந்து ஜாலியாக அங்கு வேலை செய்பவர்களை சீண்டிப் பார்த்தனர். உண்மையில் தவறிழைத்த அந்தப் பெண்ணோ, அல்லது தீபிந்தரோ பதில் அளிக்கப்போவதில்லை. ஆனாலும், அவர்களிடம் 'வணக்கம் என சொல்லுங்கள்' எனக் கட்டளையிட்டிருக்கிறார்கள். சிலரோ, தமிழில் டைப் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். நம்மிடம் சிக்கிய எறும்பை சித்திரவதை செய்து குரூரமாகச் சிரிப்பதுபோல், இந்த நபர்களை எண்ணி விளையாடும் ஒவ்வொரு தருணத்திலும், விகாஸ் போன்று யாரோ ஒருவருக்கு வேறு ஏதோ ஒரு பொருள் வரவில்லை என புகார் அளிக்கும் வாய்ப்பு பறிபோகக்கூடும்.

சமூக வலைதளங்கள் தரும் கூட்டு மனசாட்சியின் இன்பம் சொல்லில் அடங்காதது. அதை கும்பல் மனோபாவத்துடன் ஆயுதமாகப் பயன்படுத்தும் ஆபத்தான விளையாட்டு இப்போது அதிகரித்து வருகிறது. தன் எலும்பைக் கடித்து ரத்தத்தை ருசிக்கும் வேட்டை நாய்க்குக் கிடைப்பது போன்ற ஒரு போதையைத் தரவல்லது சமூக வலைதளங்கள்.

சில மாதங்களுக்கு முன்னர், இதே ஜொமேட்டோவில் இஸ்லாமியர் ஒருவர் தனக்கான டெலிவரியை எடுத்து வருகிறார் என்பதை மொபைலில் கண்டவுடன், அந்தப் பார்சலை வாங்க மாட்டேன் என சமூக வலைதளங்களில் தெரிவிக்கிறார் ஒருவர். அதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தது ஜொமேட்டோ. அப்போது, இந்துத்துவ எண்ணம் கொண்ட பலர், ஜொமேட்டோ நிறுவனத்தின் செயலிக்கு ரேட்டிங்கில் குறைப்பு செய்து அன் இன்ஸ்டால் செய்தனர். இந்த விஷயத்தில் ஜொமேட்டோவின் தவறு என எதுவுமே இல்லை. ஆனாலும் பிரச்னையை சந்தித்தது. இந்த முறை தமிழர்கள் இதே ரேட்டிங் குறைப்பு மற்றும் அன் இன்ஸ்டாலில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆர்யன் கான், தனிஷ்க் ஜுவல்லரி விளம்பரம்
ஆர்யன் கான், தனிஷ்க் ஜுவல்லரி விளம்பரம்

நடிகர் ஷாருக் கானின் மகன் போதை வழக்கில் சிக்கி சிறைக்குப் போனபோது, 'ஷாருக் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் பொருள்களைப் புறக்கணியுங்கள்' என்று இதே சமூக வலைதளங்களில் கூக்குரல் எழுந்தது. இதன் விளைவாக சில பிரபல பிராண்ட்கள், ஷாருக் நடித்த விளம்பரங்களை தவிர்த்த சம்பவமும் நடந்தது.

கடந்த ஆண்டு டாடாவின் தனிஷ்க் ஜுவல்லரி, ஏகத்துவம் என்ற பெயரில் புதிய கலெக்‌ஷனை வெளியிட்டது. மதங்களைக் கடந்த ஒரு திருமணத்தில், மருமகளை மாமியார் எப்படி நேசிக்கிறார் என்பதை அழகிய கவிதையாகக் காட்டியது அந்த விளம்பரம். உடனே, 'தனிஷ்க் நிறுவனம் லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கிறது' என கண்டனங்கள் எழுந்தன. டாடா குழுமத்தின் தேசபக்தியை அதற்கு முந்தின நாள் வரை சிலாகித்தவர்கள்கூட, இந்த விளம்பரத்துக்கு எதிராகத் திரண்டனர். தனிஷ்கைப் புறக்கணிப்போம் என முழக்கம் எழுப்பினர். மிரண்டுபோன தனிஷ்க் நிறுவனம் அந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றது.

`உணவு, மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள்'- வருத்தம் தெரிவித்த ஜொமேட்டோ
'எங்களை எதிர்ப்பவர்களின் பிசினஸில் கைவைப்போம்' என்று தமிழக பா.ஜ.க தலைவர் ஒருவர் வெளிப்படையாக ஒரு உண்ணாவிரத மேடையில் பேசினார். அந்த அரசியலுக்கும், சோஷியல் மீடியாவில் உருவெடுக்கும் கும்பல் மனோபாவத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

கடந்த ஆண்டு மகாராஷ்டிராவின் பால்கர் பகுதிக்கு யாத்திரை சென்ற மூன்று சாமியார்களை 'குழந்தைகளைக் கடத்த வந்த கும்பல்' என்ற சந்தேகத்தில் உள்ளூர் மக்கள் கொடூரமாக அடித்துக் கொன்றனர். இதுபோன்ற தாக்குதல்கள் வட மாநிலங்களில் அதிகம் நடைபெற்றன. தமிழகத்திலும் கூட இப்படிப்பட்ட தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் இருக்கிறார்கள். எளிய இலக்குகளை எல்லோரும் சேர்ந்து தாக்கி ரசிக்கும் இந்தக் குரூர மனநிலையை சோஷியல் மீடியாவும் தருவது ஆபத்தானது.

அதிகாரத்தின் செங்கோலை எல்லோரது கைகளிலும் சோஷியல் மீடியா கொடுத்திருக்கிறது. நம்மை ஆட்சி செய்பவர்கள் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று போதனைகள் செய்யும் நாம் எல்லோருமே, அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை உணர வேண்டிய தருணம் இது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு