Published:Updated:

புகாரை நிரூபித்தால் பதவி விலகத் தயார்: சல்மான் குர்ஷித்

புகாரை நிரூபித்தால் பதவி விலகத் தயார்: சல்மான் குர்ஷித்
புகாரை நிரூபித்தால் பதவி விலகத் தயார்: சல்மான் குர்ஷித்
புகாரை நிரூபித்தால் பதவி விலகத் தயார்: சல்மான் குர்ஷித்

புதுடெல்லி: தன் மீதான புகார் குறித்த கேள்விகளுக்கு செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், தன் மீதான புகார்களை ஆதாரங்களுடன் சட்டப்பூர்வமாக நிரூபித்தால் உடனே பதவி விலகத் தயார் என்று  கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குர்ஷித்தும்,அவரது மனைவி லூயிஸ் குர்ஷித்தும் ஜாகீர் ஹுசேன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர்.அதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வழங்க மத்திய அரசு ரூ.71.50 லட்சம் ஒதுக்கியது. அந்த நிதியில் முறைகேடு நடைபெற்றதாக ராஷ்ட்ரீய விக்லாங்க் என்ற மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள கட்சி புகார் கூறியது.

அக்கட்சிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் மறியல், பிரதமர் வீடு முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதால் சல்மான் குர்ஷித் பதவி விலக வேண்டும் என்றும் அவர் பல்வேறு ஆவணங்களின் நகல்களைக் காட்டிக் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றிருந்த சல்மான் குர்ஷித் நேற்று டெல்லி வந்தார். தன் மீது அரவிந்த் கெஜரிவால் சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜாகீர் ஹுசேன் அறக்கட்டளையால் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. புகைப்படங்களுடன் கூடிய அந்த ஆதாரங்களை மக்கள் பார்வைக்காக வெளியிடுகிறேன்.

ஜாகீர் ஹுசேன் அறக்கட்டளை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட புலனாய்வுச் செய்தி தவறானது. அதில், பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்காமல் நிதி மோசடி செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தி தவறானது என்பதை ஆதாரத்துடன்  நிரூபிக்கிறேன்.

##~~##
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் ஜாகீர் உசேன் அறக்கட்டளைக்கு ரூ. 71.50 லட்சம் வழங்கப்பட்டது. அந்த நிதியைக் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் 17 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், காது கேளாதோருக்கு காது கேட்கும் சாதனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மத்திய அரசு ஒதுக்கிய நிதி செலவிடப்பட்ட விவரம் அடங்கிய கணக்கு அறக்கட்டளையிடம் உள்ளது.அதை எப்போது வேண்டுமானாலும் எவரும் பார்வையிடலாம்.
எனக்கு எதிராகச் சிலர் தெருவில் நின்று கொண்டு அவதூறு பரப்புகின்றனர். அறக்கட்டளை தொடர்பாக கேள்வி எழுப்பியதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்"என்றார்.

மழுப்பல், வாக்குவாதம்

செய்தியாளர் சந்திப்பின்போது, ஜாகீர் ஹுசேன் அறக்கட்டளை தொடர்பான செய்தியை சேகரித்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களும் இருந்தனர்.சல்மான் குர்ஷித்திடம் அவர்கள்  கேள்விகளை எழுப்பினர்.அவற்றில் சில கேள்விக்கு பதில் அளித்த குர்ஷித் பெரும்பாலான கேள்விக்கு "விசாரணை நடத்தட்டும்; அதை நான் எதிர்கொள்கிறேன் "என மழுப்பலாகவீ பதில் அளித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது,உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டபோது அந்த மாநில அரசு அதிகாரி ஜே.பி. சிங் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்ததை புகைப்பட ஆதாரங்களைக் காட்டி சல்மான் குர்ஷித் விளக்கினார்.

ஆனால், "ஜாகீர் ஹுசேன் அறக்கட்டளையின் பணி சிறப்பாக உள்ளது'' என அதே ஜே.பி. சிங் அளித்ததாகக் கூறப்படும் கடிதத்தில் இடம்பெற்ற கையெழுத்து தன்னுடையதே அல்ல என அந்த அதிகாரி புகார் அளித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு நேரடியாக பதில அளிக்காமல் செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தித்தில் ஈடுபட்டு சண்டையிட்ட குர்ஷித் "போலி கையெழுத்து விவகாரம்,நிதி மோசடி உள்ளிட்ட அனைத்து புகார்கள் குறித்தும் தன்னிச்சையான புலனாய்வு அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தட்டும். என் மீதான புகாரை ஆதாரங்களுடன் சட்டப்பூர்வமாக நிரூபித்தால் உடனே பதவி விலகத் தயார்" என்று பதில் அளித்தார்.