Published:Updated:

அண்ணாமலைப் பல்கலைக்கழக 'மெகா' ஊழல்: யாருக்கெல்லாம் தொடர்பு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அண்ணாமலைப் பல்கலைக்கழக 'மெகா' ஊழல்: யாருக்கெல்லாம் தொடர்பு?
அண்ணாமலைப் பல்கலைக்கழக 'மெகா' ஊழல்: யாருக்கெல்லாம் தொடர்பு?

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம். ராமநாதன், முன்னாள் பதிவாளரர் எம். ரத்தினசபாபதி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ல்வித் துறையில் இயக்குநர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்த நெ.து. சுந்தரவடிவேலு, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, சில மாணவர்கள் மயக்கம் போட்டு விழுந்தனர். இதைக் கண்ட சுந்தரவடிவேலு “மாணவர்களின் மயக்கத்திற்குக் காரணம் பட்டினி. இது மாதிரியான சம்பவங்கள் நிகழாமல் இருக்க, நம்மிடம் திட்டங்கள் வேண்டும்” என்று பேசினார். இந்தச் செய்தி அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரின் கவனத்துக்குச் செல்கிறது. அதனைத் தொடர்ந்து, கடந்த 1955-ம் மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற ஆசிரியர்கள் கூட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசினார் காமராஜர். “பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நிறைவேற்ற நான் பிச்சை எடுக்கவும் தயார்” என்றார் அவர். அந்த நிகழ்வுகளுக்கு பிறகானதுதான், தற்போது நாம் பார்க்கும் தமிழகம் முழுவதுமான கல்வித்துறையின் வளர்ச்சி. இதுபோன்று தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்கள் இருந்தநிலையில், தற்போது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மீது ஏராளமான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. அவற்றின் மீது வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகளும், மோசடி குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய நிலையில், அதன் நஷ்டக் கணக்குகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டு அரசுடைமையாக்கியது. அரசின் கட்டுப்பாட்டுக்குள் பல்கலைக்கழகம் வந்த பின்னரும் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்வதாகப் பலரும் குற்றம்சாட்டினர். 

இந்தச் சூழலில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம். ராமநாதன், முன்னாள் பதிவாளர் எம். ரத்தினசபாபதி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அவர்களிடம் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஷங்கர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வூதிய வைப்பு நிதியிலிருந்து 700 கோடி ரூபாயை அரசு எடுத்துக் கொண்டு, வேறுவகைக்கு அந்தப் பணத்தைச் செலவிட்டுள்ளதாக ஊழியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களின் ஓய்வூதிய நிதியும் முறைகேடாகச் செலவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிதியைக் கையாண்டதில் 50 கோடி ரூபாய்க்குமேல் பல்கலைக்கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் முன்னாள் ஊழியர்கள். 

பல்கலைக்கழகத்தின் மேல்மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பலர், அளவுக்கு அதிகமான பணியாளர்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு, வேண்டியவர்களை பணியில் நியமித்து ஊழல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தகுதி வாய்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல், தகுதி இல்லாதவர்கள், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருசில துறைகளில் மாணவர்கள் எண்ணிக்கையை விடவும், அதிகமான ஆசிரியர்கள் இருப்பது வேடிக்கையாக உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1996-ம் ஆண்டு 1,110 ஆக இருந்த நிர்வாக ஆசிரியர்களின் எண்ணிக்கை 2012-ல் 9,135 ஆக உயர்ந்தது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு, அந்தச் சுமை மாணவர்களின் மீது சுமத்தப்பட்டது. இதனால், மாணவர்களின் கல்விக்கட்டணம் அதிகரிக்கப்பட்டதுடன், உரியக் கல்வியும் வழங்கப்படாமல், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகளுக்கு பணி நியமனம் பெற பணம் மட்டுமே அடிப்படைத் தகுதியாக இருந்துள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர் நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்தவர்கள்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களாக இருந்தவர்கள், பதிவாளர்கள் உள்ளிட்டோர் கூட்டாகச் சேர்ந்து, நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகக் கூறுகின்றனர் அவர்கள். மேலும் பல வழிகளிலும் அரசின் நிதி மற்றும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் ஆகியவற்றை ஊழல் செய்து, பல்கலைக்கழகத்தின் வரவு-செலவில் நஷ்டத்தை மட்டுமே காட்டியுள்ளனர். 

நிர்வாகத்தின் நிதி மோசடி பற்றி அறிந்து கொள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முறைகேடுகளைப் பற்றி அறிந்தாலே போதுமானது. அங்கு மருத்துவம் பயிலும் மாணவர்களிடமிருந்து 5,54,000 ரூபாய் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, அதே மருத்துவப் படிப்பிற்கு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 13,000 ரூபாய் மட்டுமே ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆண்டுதோறும் 300 கோடி ரூபாய் வழங்கி வருகிறது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாகக் கல்லூரி நிர்வாகம் கணக்குக் காட்டுகிறது. அது மட்டுமின்றி, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் மூலம் ஆண்டுக்கு 39 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்குத் தேவைப்படும் மொத்தச் செலவையும் அரசே ஏற்றுக்கொண்ட நிலையில், நிர்வாகம் சார்பில் நஷ்ட கணக்கே காட்டப்படுகிறது. அதற்குக் காரணம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இதர துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி கற்பித்தல் அல்லாத நிர்வாகப் பணியில் உள்ள ஊழியர்களின் சம்பளங்கள் அனைத்தும் இந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதுதான் என்கின்றனர் பல்கலைக்கழக ஊழியர்கள் சிலர். தொடர்ந்து, நஷ்டக் கணக்கை காட்டி, மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தி வருகின்றனர் நிர்வாகத்தினர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிதி முறைகேடு பற்றி சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் சென்னை பொறுப்பாளர் காமராஜிடம் பேசினோம். “தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் அதிகப்படியான ஊழல், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்தான் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது. மாணவர்களின் கல்விக் கட்டணத்திலிருந்து, ஓய்வூதிய வைப்பு நிதிவரை அனைத்து நிதியையும் சரிவர நிர்வகிக்காமல், அந்த நிதியைக் கேள்விக்குள்ளாக்கி விட்டனர். குறிப்பாக, மருத்துவத்துறைதான் நிர்வாக முறைகேடுகளால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கும் நடக்காத வகையில் மாணவர்களிடம் பணம் வசூலித்து, மருத்துவமனையை நடத்தப்படுகிறது. இது மாதிரியான எல்லாப் பிரச்னைகளுக்கும் இது மாதிரியான தீர்வுகாண, பல்கலைக்கழக முறைகேடுகளை உடனடியாகக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, இப்போது மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்கால வாழ்வு தப்பிக்கும்” என்றார்.

சமூக மாற்றங்கள் கல்வி நிலையத்திலிருந்துதான் தொடங்குகின்றன. அப்படி இருக்கும்போது, கல்வி நிலையங்களில் ஊழல், முறைகேடுகளின் கறைகள் படியாமல் இருக்க வேண்டியது அவசியம்... 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு