Published:Updated:

லாக்கரில் கிலோ கிலோவாக தங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லாக்கரில் கிலோ கிலோவாக தங்கம்!
லாக்கரில் கிலோ கிலோவாக தங்கம்!

லாக்கரில் கிலோ கிலோவாக தங்கம்!

பிரீமியம் ஸ்டோரி

குட்கா விவகாரம், சொத்துக்குவிப்பு என தமிழகத்தில் அமைச்சர்கள்மீது குவியும் ஊழல் புகார்களுக்குக் குறைவில்லை. ‘அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல’ என்று ஏகத்துக்கும் லஞ்சம் வாங்கி சிக்கியிருக்கிறார் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர். அவரிடம் கைப்பற்றப்பட்ட கிலோ கணக்கான தங்கம், வெள்ளி, பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், மூட்டை மூட்டையாய் ரொக்கம் ஆகியவற்றைப் பார்த்து திகைத்துப்போயிருக்கிறது லஞ்ச ஒழிப்பு போலீஸ்.

லாக்கரில் கிலோ கிலோவாக தங்கம்!

கடலூர் தௌலத் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவர் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிகிறார். கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, இவரை விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்தது. தொடர்ந்து இவரது கடலூர் வீட்டில் நடத்திய சோதனையில்தான், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ‘ஷாக்’ ஆனார்கள். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், லஞ்சப்பணத்தையும் பொருள்களையும் பெரும்பாலும் வீட்டில் பதுக்கிவைப்பதில்லை. அதனால், ‘எதுவும் தேறாது. இருந்தாலும் பார்ப்போம்’ என்கிற நினைப்பில்தான் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பாபுவின் வீட்டுக்குள் நுழைந்தனர். பீரோக்களைத் திறந்ததும் தங்கமும் வெள்ளியும் கரன்சியும் குவிந்துகிடந்ததைப் பார்த்ததும், அவர்களுக்கே தலைசுற்றியதாம். உடனே, பணத்தை எண்ண மெஷின் கொண்டுவரப்பட்டது. நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டார். ரூ.33.50 லட்சம் ரொக்கம், 140 சவரன் தங்க நகைகள், 45 வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகங்கள், ஆறு வங்கி லாக்கர் சாவிகள், பல கோடி ரூபாய்க்குச் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

பாபுவின் புரோக்கரான செந்தில்குமார் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். ஆத்தூரில் இருக்கும் செந்தில்குமாரின் வீட்டில் நடத்திய சோதனையில் நிதி நிறுவனங்கள், தொழுதூர் தனியார் பள்ளியில் பங்குதாரராக இருப்பதற்கான ஆவணங்கள், செந்தில்குமாரின் மனைவி பெயரில் இரண்டு கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஆவணங்கள், 150 சவரன் தங்க நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து கடந்த 15 நாட்களாக பாபு, அவரின் மனைவி ஆகியோரின் வங்கி லாக்கர்களும் சோதனை செய்யப்பட்டன. இதில் 13 கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி, ரூ.30.17 லட்சம் பணம், 10.60 கோடி ரூபாய்க்குச் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. செந்தில்குமாரின் வங்கி லாக்கரில் 450 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பாபு, செந்தில்குமார் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

லாக்கரில் கிலோ கிலோவாக தங்கம்!

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பேசியபோது, “பாபுவின் தந்தை சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தார். அவர் பணியின்்போது இறந்ததால் பாபுவுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைத்தது. 1998-ம் ஆண்டு மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்றார். 2006-ல் ஆத்தூரில் பணிபுரிந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில் சிக்கி, வழக்கு நடந்துவருகிறது. பின்பு கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்தபோது, அங்கும் லஞ்சப் புகாரில் சிக்கி செங்கல்பட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கும் புகார்... வால்பாறைக்கு மாற்றப்பட்டார். வால்பாறைக்குச் செல்லாமல் லஞ்சம் கொடுத்து மீண்டும் கள்ளக்குறிச்சிக்கே வந்துவிட்டார். நீண்டகாலமாக லஞ்சப் புகாரில் இருந்தவர், இப்போதுதான் தகுந்த ஆதாரங்களுடன் எங்களிடம் சிக்கியிருக்கிறார்” என்றார்கள்.

ஒரே ஓர் அதிகாரியிடமே இவ்வளவு என்றால்... சிக்காதவர்கள் எத்தனை பேர்!

- ஜி.சதாசிவம்
படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு