Published:Updated:

`நான் யாரென்று தெரியுமா?' - விஜிலென்ஸ் போலீஸை மிரட்டிய பதிவுத்துறை அதிகாரி

`நான் யாரென்று தெரியுமா?' - விஜிலென்ஸ் போலீஸை மிரட்டிய பதிவுத்துறை அதிகாரி
`நான் யாரென்று தெரியுமா?' - விஜிலென்ஸ் போலீஸை மிரட்டிய பதிவுத்துறை அதிகாரி

சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 70,060 ரூபாய் சிக்கியது. அதன்பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சென்னை கொரட்டூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2-வது பிரதான சாலையில் வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் புரோக்கர்கள் மூலம் லஞ்சம் கரைபுரண்டோடுவதாகத் லஞ்ச ஒழிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி லவக்குமார் தலைமையிலான போலீஸ் டீம், சில நாளுக்கு முன் சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தியது. சோதனையில் கணக்கில் வராத 70,060 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து டி.எஸ்.பி லவக்குமார் கூறுகையில், ``வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால் லஞ்சம் வாங்குபவர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு சோதனையில் ஈடுபட்டோம். இந்தச் சோதனையில் கணக்கில் வராமல் கூடுதலாக 70,060 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு விளக்கம் கேட்டுள்ளோம். பதிவாளர் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

சோதனையின்போது மாவட்ட பதிவாளர் கோபாலகிருஷ்ணன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதே என்று லவக்குமாரிடம் கேட்டதற்கு, ``அது, உண்மைதான், சோதனை நடத்த நாங்கள் சென்றபோது அவர்  எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் அவரை தனியறையில் அமர வைத்துவிட்டு சோதனையில் ஈடுபட்டோம். கணக்கில் வராத கூடுதல் தொகை இருந்ததைக் கண்டுபிடித்தோம். அதற்கான ரிப்போர்ட்டில் மாவட்ட பதிவாளர் கையெழுத்துகூட போடவில்லை" என்றார். 

லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில், ``வில்லிவாக்கம் அலுவலகத்தில் 14-ம் தேதி பத்திரப் பதிவுக்காக பெரிய தொகை கைமாறுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் லஞ்சம் வாங்குபவர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டோம். மேலும், அங்கு பணியாற்றும் தற்காலிக ஊழியர்களில் சிலர் புரோக்கர்கள் போல செயல்பட்டுவருகின்றனர். அவர்களில் 4 பேர் நீண்ட காலமாக அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர். அவர்கள் மூலம் லஞ்சம் வாங்கப்படுவதாக எங்களுக்கு ஆதாரங்களுடன் தகவல் கிடைத்தது. இதனால் அவர்களைப் பிடிக்க ரெய்டுக்குச் சென்றோம். ஆனால், எங்களின் வருகை முன்கூட்டியே தெரிந்ததால் அன்றைய தினம் அந்தப் பத்திரப்பதிவு நடக்கவில்லை. இருப்பினும் எங்களின் சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம். சோதனையின்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், நான் யாரென்று தெரியுமா. மதுரையைச் சேர்ந்த முக்கியமான அமைச்சருக்கு வேண்டப்பட்டவன் என்று எங்களை மிரட்டினார். அதற்கெல்லாம் பயப்படாமல் சோதனையைத் தொடர்ந்தோம்" என்றனர். 
 
 

வில்லிவாக்கம் அலுவலகத்தில் பணியாற்றும் சிலர் கூறுகையில் ``மாவட்ட பதிவாளர் கோபாலகிருஷ்ணன், சில மாதங்களுக்கு முன்தான் வில்லிவாக்கத்துக்கு வந்தார். இந்த அலுவலகத்தில் நீண்ட காலமாக சிலர் பணியாற்றுகின்றனர். அதிலும் தற்காலிக ஊழியர்களாக இருக்கும் 4 பேர்தான் மாமூல் பெறுகின்றனர். அவர்களால் ஓட்டுமொத்த அலுவலகத்துக்கும் கெட்ட பெயர்" என்றனர். 

பதிவுத்துறையைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ``பதிவுத்துறையில் முறைகேடுகளைத் தடுக்க ஆன்லைன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆன்லைனில் பதிவு செய்து டோக்கன் பெறுபவர்கள் காத்திருக்காமல் பதிவு செய்யலாம். ஆனால், டோக்கன் கொடுப்பதில்கூட சில நேரங்களில் சிக்கல் ஏற்படுகிறது. ஆன்லைன் திட்டத்தை செயல்படுத்த போதிய அடிப்படை வசதிகள், ஊழியர்கள் இல்லை. பதிவுத்துறையிலிருந்து தினமும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதைக் கடைப்பிடிக்க முடியாமல் தவிக்கும் சூழல் அலுவலகங்களில் நிலவுகிறது. அதிலும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். 

பதிவுத்துறையில் சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் இடமாற்றத்துக்குப் பேரம் பேசப்படுவது வாடிக்கையாக உள்ளது. அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டு குறிப்பிட்ட தொகையை இடமாற்றத்துக்காக கேட்கின்றனர். அதிகளவில் பதிவுகள் நடைபெறும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு அதிக போட்டி நிலவுகிறது. இதனால் அந்த அலுவலகங்களில் பணியாற்ற பல லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது. சமீபத்தில்கூட மதுரையிலிருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு அதிகாரி, 44 லட்சம் ரூபாய் கொடுத்துவந்துள்ளார். கொடுத்த பணத்தை திரும்ப எடுக்கத்தான் விதிமுறைகளை மீறும் சூழலுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தள்ளப்படுகின்றனர். எனவே, நேர்மையான முறையில் இடமாற்றம் நடந்தால் முறைகேடுகள் நடப்பது குறையும். அதையும் மீறி முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்" என்றனர்.