Published:Updated:

"ஜாக்டோ ஜியோவை அதிகம் எதிர்ப்பது ஏன்?" - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் விளக்கம்

"ஒரு நூறுக்குக் கால் செய்தால் போலீஸ் வரும்; இரண்டு நூறு போட்டு அதன் முன்னால் 7667 என டைப் செய்து டயல் செய்தால், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உதவிக்கு வரும். பட்டா, லைசென்ஸ், ஆர்.டி.ஐ போன்ற அடிப்படையான விஷயங்களை லஞ்சமின்றி எவ்வாறு பெறுவது குறித்த உதவிகள் இதன்வழியே வழங்கப்படும்."

"ஜாக்டோ ஜியோவை அதிகம் எதிர்ப்பது ஏன்?" - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் விளக்கம்
"ஜாக்டோ ஜியோவை அதிகம் எதிர்ப்பது ஏன்?" - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் விளக்கம்

ழலுக்காகவும் மதுவுக்காகவும்  எதிராக போராடத் தொடங்கி இன்று பல பிரச்னைகளுக்காகப் போராடி, அதில் பல வெற்றிகளையும் கண்ட இயக்கம்தான் சட்டப் பஞ்சாயத்து இயக்கம். 2013-ல் சில நபர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று, பல்லாயிரக்கணக்கான நபர்களுடன் வெற்றிகரமாகத் தன்னுடைய ஐந்தாவது ஆண்டை நிறைவுசெய்து ஆறாவது ஆண்டில் பயணிக்க இருக்கிறது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பயணம் பற்றித் தலைவர் சிவ.இளங்கோ மற்றும் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஆரம்ப்புள்ளி பற்றி?"

``சமூகம் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டிய ஒன்று. எல்லா மக்களுக்கும் சமமான வளர்ச்சி ஏற்பட வேண்டிய சமூகம். ஆனால், அவ்வாறு நடப்பதில்லை. இது மிகப்பெரிய அநீதி. இதற்காக ஏதாவது செய்ய முடியுமா என்ற கனவுதான் இந்த இயக்கம். அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரச்னை இருக்கிறது. பொதுவாக இருக்கிற பிரச்னை லஞ்சமும் ஊழலும்தான். அதன்பிறகு, தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்னை மது. வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பிரச்னையாக மது இருக்கிறது. இவை இரண்டையும் முக்கியமாகக் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தோம். Empowering, Expose, Propose என்ற அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்".

``உங்களது செயல்பாடுகள் பற்றி?'

``ஒரு நூறுக்குக் கால் செய்தால் போலீஸ் வரும்; இரண்டு நூறு போட்டு அதன் முன்னால் 7667 என டைப் செய்து டயல் செய்தால், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உதவிக்கு வரும். பட்டா, லைசென்ஸ், ஆர்.டி.ஐ போன்ற அடிப்படையான விஷயங்களை லஞ்சமின்றி எவ்வாறு பெறுவது குறித்த உதவிகள் இதன்வழியே வழங்கப்படும். புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? ஸ்வட்ச் பாரத் போன்ற திட்டங்களுக்கு விளம்பரம் செய்வதுபோல் அரசாங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு விளம்பரம் செய்யாது. ஏனெனில், அது அவர்களுக்கு இடையூறானது. இப்படியான சூழலில் நாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய கடமை உள்ளது. சனிக்கிழமைதோறும் ஆர்.டி.ஐ கேம்ப் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி, அமைப்புகள், நிறுவனங்கள், கட்சிகள் ஆகியவற்றுக்கும் பயிற்சி அளித்துவருகிறோம். தகுந்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதன் மூலமே எல்லாவற்றையும் தடுக்க முடியும் என்பதன் அடிப்படையில் நாங்கள் பயணிக்கிறோம்".

``மற்ற இயக்கங்களிலிருந்து உங்கள் இயக்கம் வேறுபடும் புள்ளி அல்லது தனித்துவம்?"

``சில இயக்கங்கள் தகவல்களைத் திரட்டிக்கொண்டு அதன்வழியே மட்டுமே போராடுகிறது. இன்னும் சில இயக்கங்கள் களத்தில் மட்டுமே போராடுகிறது. சட்டப் பஞ்சாயத்து இயக்கமோ, அதிகத் தகவல்களுடனும் வலுவான ஆதாரங்களுடனும் சட்டத்தையும் களப்போராட்டத்தையும் பயன்படுத்துகிறது என்பதுதான் தனித்துவம்".

``சட்டமும் போராட்டமும்தான் உங்கள் ஆயுதமாகச் சொல்கிறீர்கள். யாரால் பாதிக்கப்படுகிறோமோ, அவர்களிடம்தான் சட்ட அணுகுமுறைக்குச் சென்று நிற்க வேண்டியுள்ளது. போராட்டம் ஒடுக்கப்படுகிறது. இதைப் பற்றி உங்கள் கருத்து?"

``எல்லாரும் நேர்மையற்றவர்களாக இருப்பதில்லை. சட்டம் இருக்கிறது என்பதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதுமட்டுமல்ல, இருக்கிற எல்லைக்குள்தான் நாம் பணியாற்ற முடியும். முறையான ஆவணமும், சரியான அணுகுமுறையும் இருந்தால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும், 100 சதவிகிதம் என்று சொல்ல முடியாது. வேறு வழியில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்".

``ஸ்டெர்லைட் வழக்கில் முறையான ஆதாரம் இருந்தும் தற்போது ஆலைக்குச் சாதகமாக முடிவு வந்துள்ளது பற்றி?"

``தமிழக அரசிடம் பொல்யூஷன் (pollution) பாதிக்கப்படுகிறது என்பதற்கான புள்ளிவிவரங்கள் இல்லை. மேலும், ஆலையை மூடும்போது அதன் உரிமைதாரர்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்பது வழிமுறை. இந்த நடைமுறையைத் தமிழக அரசு பின்பற்றவில்லை. இதுதான் அவர்களுக்குச் சாதகமான ஒன்றாக மாறியுள்ளது".

``மதுவிலக்கு ஆண்டு என்பதை அறிமுகம் செய்தது பற்றி?"

``மதுவால் தமிழகம் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகிறது. பூரண மதுவிலக்கை நோக்கி அரசு பயணிக்க வேண்டும் என்பதே முக்கியக் கருதுகோள். அதற்கேற்ப 2016-ம் ஆண்டை மதுவிலக்கு ஆண்டாக அறிவித்தோம். அதன்பின்பு, எல்லாக் கட்சிகளும் மதுவிலக்கைத் தங்களது அறிக்கைகளில் கொண்டுவந்தது என்பதும் கவனிக்கத்தக்கது".

``மதுக்கடைகள் இன்னும் அதே எண்ணிக்கையில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எனினும், பல மாதங்களாக மதுவுக்கு எதிரான உங்களது போராட்டம் இல்லையே?"

``உண்மைதான்! ஆரம்பகாலங்களில் முழுவதும் அதற்காகப் போராடியிருக்கிறோம். மதுவிலக்கை அனைத்துக் கட்சிகளும் பேசியதே ஒருவித வெற்றிதான். அதற்கான நடவடிக்கைகள் மதுவிலக்கு வரும்வரை தொடரும்".

``யாரும் எதிர்க்காத அளவுக்கு ஜாக்டோ ஜியோவை எதிர்க்கக் காரணம்?"

``அரசாங்கத்தின் பட்ஜெட் ஒட்டுமொத்த மக்களுக்குமானது. அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமானதல்ல. அரசிடம் பணம் இல்லாதபோது சம்பள உயர்வு கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாதது".

``நீங்கள் இதுவரை சந்தித்த வழக்குகளில் சுவாரஸ்யமான அனுபவம் என்று ஏதாவது இருக்கிறதா?"

``கட்சிகள் வருடத்துக்கு ஒருமுறை பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. அதன்படி தற்போதைய ஆளும்கட்சி, திருவான்மியூரில் கல்வி நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது. இதற்கு எதிராக வழக்குத் தொடுத்தோம். அவசர வழக்காக டிசம்பர்-30ம் தேதி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. விசாரணையின்போது ச.ப.இயக்கத்திலிருந்து மூன்று பேர் நீதிமன்றத்தில் இருந்தோம். வெளியில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வந்தது. தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்திருந்தால்… (சிரிக்கிறார்கள்) நீதிமன்றத்திலேயே தங்கிவிட்டு அடுத்தநாள்தான் கிளம்பியிருப்போம். இது மறக்க முடியாத அனுபவம்". 

``உண்மையாகவே இதில் ஊழல் நடந்திருக்கிறது.  ஆனால், அதை வெளிக்கொணர முடியவில்லையே என்று திணறிய வழக்குகள் இருக்கிறதா?"

``ஆமாம்! கனிமவளக் கொள்ளைகள் குறித்து நிறைய புகார்கள் வரும். அது உண்மை என்பதும் தெரியும். ஆனால், அதற்கான ஆதாரங்களைத் திரட்டுவது மிகவும் கடினம். மிகப்பெரிய சவாலாகவே இந்தக் கொள்ளை ஊழல் உள்ளது. வருத்தமான விஷயமும்கூட".

``மிரட்டல்களைச் சந்தித்துள்ளீர்களா?"

``மிரட்டல்கள் என்று வெளிப்படையாக எதுவும் வருவதில்லை. ஆனால், மறைமுகமாக வருவதுண்டு. பெரும்பாலும் சமரசம் பேசத்தான் வருவார்கள். ஊடகமும் ஒருவித மறைமுகப் பாதுகாப்பு எங்களுக்கு".

``சந்தேகத் தகவல்கள் எல்லாம் கிடைப்பதாகக் குறிப்பிடுகிறீர்கள். அரசு அலுவலகங்களில் சிலீப்பர் செல்கள் எதுவும் வைத்துள்ளீர்களா?"

``மாற்றத்தை விரும்பும் நேர்மையான நிறைய நண்பர்கள் எங்களுக்கு உதவுவார்கள். ஆனால், எங்களுக்கு வருகிற 90 சதவிகித தகவல்கள் பழிவாங்கத் துடிக்கும் எதிரிகளிடமிருந்துதான். நாங்கள் அவர்களின் நோக்கத்தைப் பார்ப்பதில்லை. ஆதாரங்களும், தகவல்களும் உண்மையா என்பதைப் பார்த்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்".

``அரசியல்வாதிகள் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் மக்களிடம் அவநம்பிக்கை உள்ளதைச் செயற்பாட்டாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``அதைக் கண்டிப்பாக உடைக்க முடியும். உரிமையையும் கடமையையும் அவரவர் அறியும்போது தானாக உடையும். அதற்காகவும்தான் நாங்கள் உழைக்கிறோம்".

``மாதிரி கிராமசபை, மாதிரி நாடாளுமன்றம், மாதிரி சட்டமன்றம் நடத்துவது பற்றி?"

``சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவை அவை எப்படிச் செயல்படுகிறது. சட்டங்கள் இயற்றுவதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக நடத்துகிறோம். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் தற்போது மாதிரி கிராம சபைகளில் அதிக இளைஞர்கள் கலந்துகொள்கிறார்கள். இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். தங்களுக்கான அதிகாரத்தை இதன்மூலம் புரிந்துகொண்டு செயல்படவும் துணிந்துள்ளனர் என்பது கூடுதல் மகிழ்ச்சி".

``சட்டப் பஞ்சாயத்து இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா?"

``இயக்கம் இயக்கமாகவே தொடர்ந்து செயல்படும்".

``மக்கள் உங்கள் இயக்கத்தை ஏற்றுக்கொண்டதாக உணர்கிறீர்களா?"

``எல்லாரும் ஏற்றுக்கொள்வது என்பது நடக்காத காரியம். பல மாவட்டங்களிலிருந்தும் மக்கள் பொருளாதாரரீதியிலும், கொள்கைரீதியிலும் ஆதரவு தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்".