அலசல்
Published:Updated:

ஊழலுக்குத் துணைபோகிறதா ஊழல் கண்காணிப்புத் துறை?

ஊழலுக்குத் துணைபோகிறதா ஊழல் கண்காணிப்புத் துறை?
பிரீமியம் ஸ்டோரி
News
ஊழலுக்குத் துணைபோகிறதா ஊழல் கண்காணிப்புத் துறை?

விழிபிதுங்கும் சென்னை மாநகராட்சி...

சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்க வேண்டிய ஊழல் கண்காணிப்புத் துறையே ஊழலுக்குத் துணைப்போவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், அடிக்கடி நீதிமன்றத்திடம் மாட்டி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விழி பிதுங்குகின்றனர். “ஊழலை ஒழிக்காத லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை மாநகராட்சியில் எதற்கு?” என்று உயர் நீதிமன்றமே சமீபத்தில் கேள்வி எழுப்பியது. அந்த அளவுக்கு சென்னை மாநகராட்சியில் ஊழல் கண்காணிப்புத் துறைச் செயலற்றுக்கிடப்பதாகச் சொல்கிறார்கள்.

 சென்னை ஷெனாய் நகரில் வசிக்கும் லட்சுமி என்பவர், தன் வீட்டின் முன்புறம் உள்ள மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்துத் தனியார் வைத்திருந்த ஜெனரேட்டரை அகற்றக்கோரி, சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் லட்சுமி.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஊழலில் திளைக்கும் அதிகாரிகள்மீது மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களும் குற்றவாளிகளுடன் கைகோத்துள்ளனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்புத்துறை அதிகாரி முதல் கடைநிலை போலீஸ்காரர் வரை அனைவரையும் கூண்டோடு இடமாற்ற வேண்டும். தமிழக டி.ஜி.பி-யுடன் கலந்தாலோசித்து, புதிய அதிகாரிகளை ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்கு நியமிக்கவேண்டும். மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்கள், ஊழல் கண்காணிப்புப் பிரிவின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததுடன், அந்த உத்தரவுக்கு இடைக்காலத்தடையும் பெற்றிருக்கிறது மாநகராட்சி தரப்பு. இதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கையை வரும் பிப்ரவரி 24-க்குள் தாக்கல் செய்யும்படியும் நீதிமன்றம் கூறி உள்ளது. இந்தச் சூழலில்தான், சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து விசாரித்தோம்.

ஊழலுக்குத் துணைபோகிறதா ஊழல் கண்காணிப்புத் துறை?

“துப்புரவுப் பணியாளர்களில் 60 சதவிகிதம் பேர் மட்டுமே பணிக்கு வருகின்றனர். மற்றவர்கள் பணிக்கு வராமலே, வந்ததாகக் கணக்கு எழுதுகிறார்கள். பணிக்கு வராதவர்களின் பாதி சம்பளம் கமிஷனாக துப்புரவு ஆய்வாளர்களுக்குச் செல்கிறது. இதுபோல மாநகராட்சியின் ஒவ்வொரு துறை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மாநகராட்சி ஊழல் கண்காணிப்புத் துறையில் மலைபோல குவிந்துகிடக்கின்றன. இந்த ஊழல்களைக் களையெடுக்க வேண்டிய, ஊழல் கண்காணிப்புத் துறையின் டி.எஸ்.பி-யான கவிக்குமார், ஆய்வாளர்கள் இந்திராணி, லட்சுமி ஆகியோர் எதையுமே கண்டுகொள்வதில்லை. மாறாக, நீதிமன்றம் சொன்னதுபோல ஊழலுக்குத் துணைபோகிறார்கள்” என்றார்கள் மாநகராட்சி வட்டாரத்தில் சிலர்.

மாநகராட்சியின் நான்காவது மண்டலமான தண்டையார்பேட்டையில் உள்ள மரக்கடைத் தொழிலதிபர் ஒருவர், “கட்டட அனுமதிக்கு லஞ்சம் வாங்காமல் எந்தச் சான்றிதழையும் அதிகாரிகள் தருவதில்லை. ஊழல் கண்காணிப்புத் துறையில் புகார் அளித்தேன். ஆனால், சில நாள்களில் என் புகார் மனுவின் நகல், சம்பந்தப்பட்ட அதிகாரியின் கைக்கே போய்விட்டது” என்றார் விரக்தியுடன்.

மாநகராட்சியின் எட்டாவது மண்டலமான அண்ணாநகரில் நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர், “ஊழல் கண்காணிப்புத் துறையே ஒரு கொள்ளைக் கும்பல் மாதிரி செயல்படுது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் யார் யார்னு கணக்கெடுப்பாங்க. ஊழல் அதிகாரி மேல புகார் கொடுக்கச் சொல்லி, கீழ்நிலை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுப்பாங்க. யாருமே ஒத்துவரலைனா, மொட்டை பெட்டிஷன்  போடுவாங்க. அந்த பெட்டிஷன் இவங்களுக்கே விசாரணைக்காக வரும். அதை வெச்சிக்கிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேரம் பேசுவாங்க. பேரம் படிஞ்சதும் ‘க்ளீன் சர்டிபிக்கேட்’ கொடுத்துடுவாங்க” என்றார்கள்.

புகார்கள் குறித்து மாநகராட்சி ஊழல் கண்காணிப்புத்துறை டி.எஸ்.பி-யான கவிக்குமாரிடம் பேசினோம். “ஊழல் கண்காணிப்புத் துறை மீதான புகார்கள் பொய்யானவை. அனைத்து மண்டல அலுவலகங்களிலும் ஊழல் கண்காணிப்புத்துறையின் அறிவுறுத்தலில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணியாளர்கள் 40 சதவிகிதம் பேர் பணிக்கு வருவதில்லை என்பது உண்மைதான். அவர்களைக் கண்டறிந்து, துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எங்களால், பரிந்துரை மட்டும்தான் செய்யமுடியும். நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. மேலும், 40-க்கும் மேற்பட்டவர்கள் பணி செய்த ஊழல் கண்காணிப்புத் துறையில், இப்போது ஒரு டி.எஸ்.பி., இரண்டு ஆய்வாளர்கள்தான் பணிபுரிகின்றனர். லஞ்சப் பேர்வழிகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்துவருவதால் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள்” என்றவரிடம், “உயர் நீதிமன்றமே உங்கள் துறை குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளதே” என்று கேட்டோம். அதற்கு அவர், “அந்த வழக்கில் எங்கள் தரப்பு வாதங்களைச் சரியாக எடுத்துவைக்கவில்லை. அதனால் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது எங்கள் இடமாற்றத்துக்குத் தடை வாங்கியிருக்கிறோம். விரைவில் எங்களை நிரூபிப்போம்” என்றார்.

நெருப்பு இல்லாமல் புகையாது. இங்கு பெரிய குண்டே அல்லவா வெடித்திருக்கிறது!

- ந.பொன்குமரகுருபரன்