Published:Updated:

உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம்... அமைச்சர், எம்.பி பணம் பெற்றனரா?

உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம்... அமைச்சர், எம்.பி பணம் பெற்றனரா?
பிரீமியம் ஸ்டோரி
News
உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம்... அமைச்சர், எம்.பி பணம் பெற்றனரா?

சி.பி.ஐ விசாரணையால் பதவிக்குச் சிக்கல்!

துரை வக்ஃபு வாரியக் கல்லூரியில் நடைபெற்ற உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களில் அமைச்சர் நிலோபர் கபில், அன்வர் ராஜா எம்.பி ஆகியோர் பணம் வாங்கினர் என்ற குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இவர்கள் இருவரும் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மதுரையில் முகையத்ஷா சர்குரே வக்ஃபு வாரியக் கல்லூரி உள்ளது. அங்கு, 2017-ல் நடைபெற்ற உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம் நடைபெற்றதாகவும், தமிழக அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் வக்பு வாரியத் தலைவரும் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம்... அமைச்சர், எம்.பி பணம் பெற்றனரா?

சி.பி.ஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தவர், வக்ஃபு வாரியக் கல்லூரியின் பொதுக்குழு உறுப்பினரான சர்தார் பாஷா. அவரிடம் நாம் பேசியபோது, “முஸ்லிம் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக. 1964-ம் ஆண்டு இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. சமீபகாலமாக, ஆளும் கட்சியினரின் தலையீடுகளால் கல்லூரியின் மதிப்பு குறைந்துவருகிறது. 2017-ம் ஆண்டு, 30 பேரிடம் தலா ரூ.30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு, உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களைச் செய்துள்ளனர். அன்வர்ராஜா எம்.பி., அமைச்சர் நிலோபர் கபில், கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோருக்கு இதில் தொடர்பு உள்ளது. தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் அளித்தேன். அது விசாரிக்கப்படவில்லை. எனவே, சி.பி.ஐ-க்கு புகார் அனுப்பினேன். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.  

இதற்கிடையில், உதவிப் பேராசிரியர் பணிக்காக நேர்முகத்தேர்வில் பங்கேற்ற இரு பெண்கள் முதல்வர், சி.பி.ஐ உட்பட பலருக்கும் புகார் அனுப்பியுள்ளனர். அதில், “நாளிதழில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, வக்பு வாரியக் கல்லூரியில் நடந்த நேர்காணலில் பங்கேற்றுத் தேர்ச்சி பெற்றோம், பணி நியமனப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தோம். கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஒருவர் எங்களிடம், ‘அமைச்சர் நிலோபர் கபில், அன்வர் ராஜா எம்.பி ஆகியோருக்குப் பணம் கொடுக்க வேண்டும். ஐந்து லட்சம் ரூபாயைக் கட்டட நிதியாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். மொத்தமாகச் செலுத்த முடியவில்லை என்றாலும், மாதம் பத்து லட்சம் வீதம் கொடுங்கள்’ என்று சொன்னார். எங்களால் பணம் தரமுடியாது என்று சொல்லிவிட்டோம். எனவே, முழுத் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டோம்” என்று கூறியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து அன்வர் ராஜாவிடம் கேட்டோம். அவர், “இந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்துவிட்டு, புகாரில் முகாந்திரம் இல்லை என்று சொல்லிவிட்டனர். பணி நியமனங்கள் நடந்தபோது, நான் வக்பு வாரியத் தலைவராகவே இல்லை. உறுப்பினராக மட்டுமே இருந்தேன். அந்த நேர்காணல் நடந்தபோது, நாடாளுமன்றக் கமிட்டி உறுப்பினர்களுடன் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். என் மீதும், அமைச்சர் மீதும் வேண்டுமென்றே வீண்பழி சுமத்துகிறார்கள். நான் நாடாளுமனறத்தில் முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராகக் கடுமையாகப் பேசியதால், இந்த வழக்கின் பின்னணியில் பி.ஜே.பி-யின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. மேலும், மதுரையிலுள்ள ஒரு வழக்கறிஞர், வக்பு வாரியக் கல்லூரியின் செயலாளராக ஆக வேண்டுமென்ற ஆசையில் இருக்கிறார். அதற்கு நான் தடையாக இருக்கிறேன் என்று நினைத்து, எனக்கு எதிராகச் செயல்படுகிறார். இதை நாங்கள் சட்டரீதியாகச் சந்திப்போம்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம்... அமைச்சர், எம்.பி பணம் பெற்றனரா?

சர்தார் பாஷாவை நாம் மீண்டும் தொடர்புகொண்டு, “தனக்கு இதில் சம்பந்தமில்லை என்றும், இதன் பின்னணியில் பி.ஜே.பி இருக்கிறது என்றும் அன்வர் ராஜா சொல்கிறாரே?” என்று கேட்டோம். அதற்கு, ‘‘அவர் கூறுவதுபோல் பி.ஜே.பி-யோ, வேறு யாருமோ இந்த வழக்கின் பின்னணியில் இல்லை. கல்லூரியின் பொதுக்குழு உறுப்பினர் என்ற முறையில், முறைகேடு குறித்துக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு தொடுத்துள்ளோம். அன்வர் ராஜா, நிலோபர் கபில் ஆகியோர் ஒப்புதல் இல்லாமல் பணி நியமனங்கள் நடக்காது. நேர்காணல் நடந்தபோது அங்கு இல்லை என்று சொல்வதெல்லாம் சமாளிப்பு’’ என்றார் சர்தார் உசேன்.

உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம்... அமைச்சர், எம்.பி பணம் பெற்றனரா?

சி.பி.ஐ அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, “வழக்குத் தொடுத்தவர்கள் மற்றும் புகார்கள் கொடுத்தவர்கள் ஆகியோரிடமிருந்து ஆதாரங்களைத் திரட்டிவருகிறோம். இதை ஆய்வுசெய்த பின்னர், சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்புவோம்” என்றனர்.

அமைச்சர் நிலோபர் கபிலின் எண்ணுக்கு நாம் தொடர்புகொண்டபோது போனை எடுத்த அமைச்சரின் உதவியாளரிடம், விஷயத்தை விளக்கினோம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், “அமைச்சர் மீட்டிங்கில் இருக்கிறார். உங்களைத் தொடர்புகொள்வார்” என்று கூறினார். ஆனால், அமைச்சரிடமிருந்து அழைப்பு வரவில்லை.

- செ.சல்மான்,  படம்: வி.சதீஷ்குமார்