Published:Updated:

வெளுத்ததெல்லாம் ‘ஆவின்’ பால் அல்ல... தண்ணீர் கலப்பதில் ‘டபுள் என்ட்ரி’ மாட்டிக்கொண்ட அ.தி.மு.க புள்ளி!

வெளுத்ததெல்லாம் ‘ஆவின்’ பால் அல்ல... தண்ணீர் கலப்பதில் ‘டபுள் என்ட்ரி’ மாட்டிக்கொண்ட அ.தி.மு.க புள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
News
வெளுத்ததெல்லாம் ‘ஆவின்’ பால் அல்ல... தண்ணீர் கலப்பதில் ‘டபுள் என்ட்ரி’ மாட்டிக்கொண்ட அ.தி.மு.க புள்ளி!

வெளுத்ததெல்லாம் ‘ஆவின்’ பால் அல்ல... தண்ணீர் கலப்பதில் ‘டபுள் என்ட்ரி’ மாட்டிக்கொண்ட அ.தி.மு.க புள்ளி!

பேராசை பெரு நஷ்டம் என்பதற்கு ஏராளமான அறிவுரைக் கதைகளைச் சொல்வார்கள். இது ஆவின் கதை. ஆறு ஆண்டுகளாக 300 லிட்டர் தண்ணீர் கலந்துவந்த ஊழல்வாதிகள், ஒருநாள் தெரியாமல் ‘டபுள் என்ட்ரி’யாக 600 லிட்டர் தண்ணீரைப் பாலில் கலந்து சிக்கியிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் இயங்கிவருகிறது. இதன் நிர்வாகக் குழுத் தலைவர், அ.தி.மு.க-வைச் சேர்ந்த குமுதவள்ளி. இவர் திருவண்ணாமலை அ.தி.மு.க மகளிர் அணி வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். இவருக்குக் கீழ் எட்டு பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் அம்பத்தூர் ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுவந்த பாலில், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, தினமும் சட்டவிரோதமாக 300 லிட்டர் தண்ணீர் கலந்து அனுப்பிவந்துள்ளனர். கூடுதலாக 300 லிட்டர் தண்ணீரைப் பாலில் கலந்ததால் விவகாரம் வில்லங்கமானது. இதனால், ஊழியர்கள் இருவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது, ஆவின் நிர்வாகம்.

வெளுத்ததெல்லாம் ‘ஆவின்’ பால் அல்ல... தண்ணீர் கலப்பதில் ‘டபுள் என்ட்ரி’ மாட்டிக்கொண்ட அ.தி.மு.க புள்ளி!

இதுகுறித்து ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் சிலர் நம்மிடம், “ஆரணி கூட்டுறவுச் சங்கத்தின்மூலம் சுற்றுவட்டாரங்களில் கொள்முதல் செய்யப்படும் பால், தினசரி 5,500 லிட்டர் வீதம் சென்னை அம்பத்தூர் ஆவின் பால் நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. அதில் தினமும் 300 லிட்டர் தண்ணீர் கலந்து அனுப்புவது கமிஷன் அடிப்பது வழக்கம்.  இப்படித் தண்ணீர் கலப்பது இரண்டு ஊழியர்களின் பணி. அதன்படி, கடந்த மாதம் 29-ம் தேதி பால் அனுப்பப்பட்டது. அதில் பால், மிக அதிக அளவு தண்ணீராக இருக்கவே, பாலைப் பரிசோதனைசெய்த சென்னை ஆவின் நிலையம், அதில் 600 லிட்டர் தண்ணீர் கலப்படம் செய்து தரமற்ற முறையில் இருப்பதைக் கண்டுபிடித்து, பாலைத் திருப்பி அனுப்பியது. அத்துடன், பாலில் தண்ணீரைக் கலந்து அனுப்பியதால், கூட்டுறவுச் சங்கத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க, திருப்பி அனுப்பப்பட்ட 5,500 லிட்டர் பாலையும் யாருக்கும் தெரியாமல் ஆரணி ஆற்றில் ஊற்றி அழித்துள்ளனர் சங்க நிர்வாகிகள் சிலர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெளுத்ததெல்லாம் ‘ஆவின்’ பால் அல்ல... தண்ணீர் கலப்பதில் ‘டபுள் என்ட்ரி’ மாட்டிக்கொண்ட அ.தி.மு.க புள்ளி!

இந்த விவகாரத்தால், தன் தலைவர் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்துபோன குமுதவள்ளி, முந்திக்கொண்டு அலுவலக ஊழியர்கள் சிலர்மீது போலீஸில் புகார் கொடுத்தார். தினமும் அவர்கள்தான் 300 லிட்டர் நீர் கலந்ததாக அவரே அந்தப் புகாரில் தெரிவித்தார். பின்பு, ‘துறைரீதியாக நடவடிக்கை எடுத்துக்கொள்கிறோம்’ என்று புகாரைத் திருப்பி வாங்கிவிட்டார். இந்த நிலையில், வேலூர் ஆவின் துணைப் பொது மேலாளர் உலகநாதன், கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் அனைவரையும் வரவழைத்து ஆய்வு நடத்தினார். அதில், 29-ம் தேதி மட்டும் பணியாளர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஒருவர் 300 லிட்டர் வீதம் 600 லிட்டர் தண்ணீர் கலந்தது தெரியவந்தது. இதனால், சங்கச் செயலாளர் சரவணன், பாலின் தரத்தை அளக்கும் பொறுப்பாளர் பழனி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்தார்கள்.

பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராகக் குமுதவள்ளி பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் முடிந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அங்கு பணியாற்றும் ஊழியர்களைத் தன் கையில் போட்டுக்கொண்டு தினந்தோறும் பாலில் 300 லிட்டருக்கு அதிகமாகத் தண்ணீர் கலந்து ஏற்றுமதி செய்துவந்தார். இந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் பாலில் தண்ணீர் கலந்து பல கோடி ரூபாய்  ஊழல் செய்துள்ளார். ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல், அவர் நடத்தும் சங்கத்தையும் கலைக்க முடியாமல் ஆவின் நிர்வாகம் தவித்துவருகிறது. காரணம், இந்தச் சங்கத்துக்கு அ.தி.மு.க-வைச் சேர்ந்த எட்டு பேர் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அவர்களின் கீழ்தான் சங்கம் இயங்குகிறது. அதைவிட முக்கியமாக உள்ளூர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் ஆதரவு இவர்களுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்றுவரை குமுதவள்ளிமீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்கள்.

வெளுத்ததெல்லாம் ‘ஆவின்’ பால் அல்ல... தண்ணீர் கலப்பதில் ‘டபுள் என்ட்ரி’ மாட்டிக்கொண்ட அ.தி.மு.க புள்ளி!

இதுகுறித்து குமுதவள்ளியிடம் பேச முயன்றோம். எடுத்த நபர், “போனை சர்வீஸ் செய்யக் கொடுத்துள்ளார். ஒரு மணி நேரம் கழித்து அழையுங்கள்” என்று துண்டித்துவிட்டார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், “எனக்கும் அந்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் எந்த விசாரணையையும் முடக்கவில்லை. அந்தப் பிரச்னையின்போது நான் ஊரிலேயே இல்லை” என்றார்.

பாலில் தண்ணீர் கலப்பார்கள். இவர்கள் தண்ணீரில் அல்லவா பாலை கலக்கிறார்கள்?

- கா.முரளி