Published:Updated:

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: அமலாக்கப்பிரிவு அதிகாரி இடமாற்றத்துக்கு தடை!

Vikatan Correspondent
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: அமலாக்கப்பிரிவு அதிகாரி இடமாற்றத்துக்கு தடை!
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: அமலாக்கப்பிரிவு அதிகாரி இடமாற்றத்துக்கு தடை!
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: அமலாக்கப்பிரிவு அதிகாரி இடமாற்றத்துக்கு தடை!

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரணை நடத்தி வந்த அமலாக்கப்பிரிவு அதிகாரியின் இடமாற்றத்துக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த காலத்தில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கியதில் அரசு கஜானாவுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற மேற்பார்வையில், சி.பி.ஐ. விசாரணை நடத்தி ஆ.ராசா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கும்படி அதன் தலைவர் சிவசங்கரன் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எச்.எல். டட்டு தலைமையிலான அமர்வின் முன்பு சி.பி.ஐ. நேற்று விளக்கம் அளித்தது. அப்போது, ''ஏர்செல்–மேக்சிஸ் பேர வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இடையே மாறுபட்ட கருத்து உள்ளது. இதை அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதியின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம்" என கூறப்பட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை நிலவர அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வந்த அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங், உத்தரபிரதேசத்துக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த இடமாற்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது, இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிகிற வரை ராஜேஷ்வர் சிங் இந்த வழக்கின் புலன் விசாரணையை தொடருவார் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.