Published:Updated:

"லஞ்சம் தவிர்ப்பது கடமை... பெருமை இல்லை!’’ - நேர்மை C/O முத்துமாரி

Vikatan Correspondent
"லஞ்சம் தவிர்ப்பது கடமை... பெருமை இல்லை!’’ - நேர்மை C/O முத்துமாரி
"லஞ்சம் தவிர்ப்பது கடமை... பெருமை இல்லை!’’ - நேர்மை C/O முத்துமாரி
"லஞ்சம் தவிர்ப்பது கடமை... பெருமை இல்லை!’’ - நேர்மை C/O முத்துமாரி

சாதிச் சான்றிதழில் தொடங்கி, சொத்துக்களை பாதுகாப்பதுவரை அனைத்துக்கும் நாம் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்தே ஆக வேண்டும். அவர் ஒப்புதல் பெறாமல் எந்த வேலையும் நடக்காது. இந்த வேலைக்கு 100 ரூபாய், அந்தக் கையெழுத்துக்கு 200 ரூபாய் என துவங்கி ஆயிரக்கணக்கில் லஞ்சம் விளையாடும் பணியாக அது புரையோடிப்போயிருப்பதும் நாம் அறிந்ததே.

ஆனால் எந்த வேலையாகச் சென்றாலும், குறித்த நேரத்தில் நம் பணி முடித்துக்கொடுக்கப்படுகிறது கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில். லஞ்சம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என்பதுதான், அதை மேலும் கவனிக்க வைக்கிறது. அலுவலகத்துக்குள் நுழைந்ததும், ‘நான் லஞ்சம் வாங்க மாட்டேன்’ என கொட்டை எழுத்தில் அச்சிட்டு, போர்டாக மாட்டி வைத்துள்ளார் கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி. அவரைச் சந்தித்தோம்.

“என் சொந்த ஊர் மதுரைப் பக்கம் பேரையூர். அப்பா ராமர், விவசாயி. நான் மதுரை மீனாட்சி காலேஜ்ல படிச்சேன். ஐஏஎஸ் ஆகணும்னு ஆசை. ஆனா அதுக்கு ஆரம்பத்துல நான் சரியா முயற்சி எடுக்கல. காலேஜ் முடிச்சதும் கோயம்புத்தூர்ல ஒரு ஹாஸ்பிட்டல்ல வேலைக்குச் சேர்ந்தேன். வேலைக்கு போய்கிட்டே நேரம் கிடைக்கும்போது பழனி, ஆயக்குடி இலவச பயிற்சி முகாமில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். 2011-ல கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதினேன். அதுல தேர்வாகி பொள்ளாச்சி ஆனைமலை வி.ஏ.ஓ.-வாக வேலைக்குச் சேர்ந்தேன்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு லஞ்சத்துக்கு எதிரான பார்வை இருந்துச்சு. ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்துல சொல்லிக்கொடுத்ததும் இதைத்தான். அதனால லஞ்சம் வாங்கக்கூடாதுங்கறதுல நான் தெளிவா இருந்தேன். வேலைக்கு சேர்ந்த உடனே இதை நான் தெளிவா சொல்லிட்டேன். அதனால லஞ்சம் சம்பந்தமா எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கல. எந்த அழுத்தமும் இல்லாம சுதந்திரமா வேலை பார்த்துட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம்தான் காளியாபுரத்துக்கு வந்தேன். இங்கே வந்து ஒரு வருஷம் ஆகுது.

அலுவலகத்துக்கு வர்றவங்களோட வேலையை உடனுக்குடன் முடிச்சுக் கொடுத்துடுவேன். இல்லாத மக்கள் சந்தோஷமா போய்டுவாங்க. ஆனா இருக்கிறவங்க சும்மா போக மாட்டாங்க. அவங்களுக்கு கொடுத்து கொடுத்து பழக்கமாயிடுச்சுபோல. ‘மேடம் உங்களுக்கு மரியாதை செய்யணும்‘னு மறைமுகமா லஞ்சம் கொடுக்க ட்ரை பண்ணுவாங்க. சிலர் நேரடியா பணத்தை எடுத்து நீட்டிடுவாங்க. சிலரோட பேப்பர்ல தப்பு இருக்கும். அதை சரி பண்ணிட்டு வாங்கனு சொல்வோம். ஆனா பணத்துக்காக அலைய வைக்கறேன்னு நினைச்சுட்டு, நான் பணம் வாங்க மாட்டேன்னு சொன்னாலும் அதை ஏத்துக்காம பணம் கொடுக்க ட்ரை பண்ணுவாங்க.
 

"லஞ்சம் தவிர்ப்பது கடமை... பெருமை இல்லை!’’ - நேர்மை C/O முத்துமாரி

‘நானே வாங்கிறதில்லைனு சொல்லியும், பணம் கொடுக்கிறதுல ஏன் இவ்வளவு முனைப்பா இருக்கீங்க? இப்படி எல்லாருக்கும் லஞ்சம் கொடுத்துப் பழகாதீங்க... அலுவலர்களை லஞ்சம் கொடுத்தும் பழக்காதீங்க’னு ஒவ்வொருத்தர்கிட்டயும் சொல்லி சொல்லி எனக்கு வாயே வலிச்சுடுச்சு. பல நேரங்கள்ல எனக்கு டென்ஷனே வந்துடும். இது சம்பந்தமா என் கணவர் நவநீதன்கிட்ட சொன்னேன். அவர்தான் இந்த போர்டு ஐடியாவைக் கொடுத்தார். இந்த போர்டு வெச்சதுக்கு அப்புறம், இப்போ டென்ஷன் இல்லை. வர்றவங்க போர்டை பாப்பாங்க. வேலையை மட்டும் முடிச்சுக்கிட்டு போயிடுவாங்க. இப்போதான் ரிலாக்ஸ்டா இருக்கு’’ என்று சிரிப்பவர்,

“மக்கள், அரசியல்வாதிகள்கிட்டயும், அதிகாரிகள்கிட்டயும் மாற்றம் வரணும்னு எதிர்பார்க்கிறாங்க. ஆனா, அந்த மாற்றம் நம்மகிட்ட இருந்து ஆரம்பிக்கணும்னு அவங்க நினைக்கிறதில்லை. லஞ்சம் வாங்காத அரசியல்வாதி வேணும், அதிகாரிகள் வேணும்னு நினைக்கிற அவங்க, லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்பதிலும் உறுதியா இருந்து, அவங்ககிட்ட இருந்துதானே அந்த மாற்றத்தை ஆரம்பிக்கணும்? மக்கள்தான் மெஜாரிட்டி. இவங்க லஞ்சம் கொடுக்காம இருந்தா, அதிகாரிகளால எப்படி லஞ்சம் வாங்க முடியும்? மக்கள் விழிப்போடு இருந்தா லஞ்சத்தை ஒழிக்கலாம்’’ என்று உறுதியான நம்பிக்கையில் சொல்பவர்,

“லஞ்சம் வாங்கக்கூடாதுங்கிறது கடமை. இதுல எந்தப் பெருமையும் எனக்கு இல்ல. என் அப்பாவைப் பார்த்து, ‘இவரு பொண்ணு லஞ்சம் வாங்கி சம்பாதிக்கறா’ன்னு யாரும் சொல்ல முடியாது. அதே மாதிரி என் குழந்தையைப் பார்த்து, ‘உங்க அம்மா லஞ்சம் வாங்கிதான் உங்களை வளர்த்தாங்க’னு யாரும் சொல்ல முடியாது. அந்த நேர்மைதான் என்னோட கம்பீரமா இருக்கும். நான் பார்க்கிற வேலைக்குச் சம்பளம் வாங்குறேன். எதையும் நான் தியாகம் செய்யல” விடைகொடுத்து வேலைகளில் கவனம் திருப்புகிறார், முத்துமாரி!

-ச.ஜெ.ரவி

படங்கள்:
தி.விஜய்